Sunday 25 February 2024

கேசரி யோகம்

 கேசரி யோகம் என்றால் என்ன?

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

இராம் மனோகர் ::::::

★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.


★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.


கேசரி யோகம்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆


★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்

அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி

விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து

நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் - 779.


★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன்

அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.


★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப்

பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. - தாயுமானவர்.


★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய

முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு

கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் - அருணகிரிநாதர்.


★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.


★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற் கொள்ள வேண்டும். வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்க வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.


★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.


★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு

அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்

உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.


★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.


சந்திர யோகம்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆


★காணும் பரிதியின் காலை இடத்திட்டு

மாணும் மதியதன் கால் வலத்திட்டு

பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்

ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.


★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.


★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.


★சந்திர யோகத்தில் அமரும் விதம்.

வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.


★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.


★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்

நாழிகை ஆக நமனை அளப்பர்கள்

ஊழி முதலாய் உயர்வார் உலகினில்

தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.


★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர். ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.


★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்.


No comments:

Post a Comment