Thursday 8 February 2024

பொன்மணி தட்டார்

 தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக சிவ கங்கை தீர்த்த குளத்தில் அமைந்துள்ள பொன்மணித்தட்டார் என்வரின் சமாதிக்கு அபிஷகம் நடைபெறுவது தொடர்பான அரிய தகவல் அடங்கிய பதிவு!


தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் இந்த நல்ல நாளில்(5-2-2020)இந்த பதிவினை வெளியிடுவதில் பெருமையடைகின்றேன்.


கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிக சிவயோகி வாழ்ந்து வந்தார்.


அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி அதை புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமானத்திற்காக விற்று வாழ்ந்து  வந்துள்ளார்.


புடமிடப்பட்ட இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக அளவில்  பெண்கள் இவருடைய வீட்டின் முன்பு கூடுவர்.அவர்களில் இருவருக்கு மட்டுமே மணி கிடைக்கும். 


இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பொன்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. 


இவர் வாழ்ந்த காலத்தில் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பி கட்டி வந்தார்.


தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது இராஜராஜ பெரும் தச்சன் கலங்கி இருந்த வேளையில் பொன்மணி தட்டார் தன்னை அறிமுகப்படுத்தாத வகையில் தினமும் ஆலய கட்டுமான வேலைகளை கண்டு வந்துள்ளார். 


அவர்  சிற்பி இராஜராஜ பெரும் தச்சனின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை  காட்டி அதை வாங்கி கோபுரத்தில் வைக்கும்படி கூற அதன்படி இடைச்சியின் வீட்டிற்கு அருகில் இருந்த பிரம்மேந்திர பெரியகல்லை எடுத்து கோபுரத்தில் வைத்தார் சிற்பி இராஜராஜ பெரும் தச்சன்.


அதன் பின்னர் பெரிய ஆவுடையாரின் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாது போனதால் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. 


தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ‘ உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்’ என்ற அசரீரியாக இறைவன் மன்னனுக்கு உணர்த்தினான்.


மறுநாள் மந்திரியை அழைத்து இறைவனின் அசரீரி பற்றி  விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதாகும்.


இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கோபுரத்தின் மேல் உள்ள பிரமாந்திர ஆகும்.


பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது மட்டும்  புரியவில்லை என்று மந.திரி கூறினார்.


இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை மந்திரி அனுப்பி வைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரிகளிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூறினர்.


அரண்மனை ஆட்களிடம் பொன்மணித்தட்டார் 'நானோ சாதாரண வயோதிகன், அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை .


மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. 


என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே.


இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறி அனுப்பி விட்டார்.


அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதாக கேட்ட அசரீரி விசயத்தை எடுத்துக் கூறி தனது சந்தேகத்தை போக்குமாறு கேட்டார். 


அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தால் கோபுரம் தெரியும் வகையில்  அமைக்கச் சொன்னார்.


மேலும் அதனை அமைத்த எட்டாவது நாளில் இறைவனின் காட்சி கிடைக்குமென்றர். 


அவர் கூறியதற்கேற்ப அரசன் சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தால் கோபுரம் தெரியும் வகையில் பொன்மணித்தட்டார் மொழி தவறாது கட்டி முடித்தார்.


பின்பு எட்டாம் நாள் மன்னரின் வேலயாட்கள் பொன்மணித்தட்டார் வீட்டிற்குச்சென்று அவரை அழைத்து வந்தனர்.


திருக்குளத்தினுள் செல்வதற்கு  தெப்பம் உள்ளதென அரசன் பொன்மணித்தட்டாரிடம் கூற அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் இரண்டற கலந்தார். 


இதனைக்கண்ட அரசனும் மற்றோர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். 


அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இன்றளவும் இருக்கின்றது. 


இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.


சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடைந்துள்ளது.


தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினராலும் மகா சிவராத்திரியன்று இங்கு குருபூஜை நடத்தப்பட்டுவருகின்றது.


இதன் சிறப்பினை ‘விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்’ என்ற பழைய நூலிலும். ‘பொன்மணித்தட்டார் சரித்திரம்’ என்னும் நூலிலும், ‘படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்’ என்ற நூலிலும் காணலாம்.


பொன்மணித்தட்டார் சமாதி அமைந்துள்ள  சிவகங்கைக் குளக்கோயில் புகைப்படங்கள் கீழே!👇👇






No comments:

Post a Comment