Monday 20 February 2023

சண்டி ஹோமம்

 சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்.

------------------------------------------------------


"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள் என்பது பழமொழி.


துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு சுலோகங்களை கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது. இதை தான் ஒவ்வொரு வருடமும் குமுக்கன் ஆற்றங்கரையில் மஹா காளி தேவி முன்னிலையில் சண்டி ஹோமமாக இன்று வரை  உலக நன்மைக்காக செய்யப்படுகிறது. இவ்வருட சண்டி ஹோமம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 26/02/2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தினசரி அல்லது நவராத்திரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். இந்த மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்......


ஸ்ரீதேவி மாஹாத்மிய ரகசியம்:

--------------------------------------------------------


துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது. 


சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.


சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.


சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும்  பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.


டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.


யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.


"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா" என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 

               அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.


சண்டி ஹோமம்  என்றால் என்ன?

(1) மஹாகாளி சண்டிகை:

                எமபயம், நோய், ஆகியன நீக்கி நீண்ட ஆயுள் அருள்பவள்.

(2) மஹாலக்ஷ்மி சண்டிகை:

               பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீக்கி செல்வ வளம் அருள்பவள்.

(3) சங்கரி சண்டிகை:

               மனக்குழப்பங்கள், மன நோய்கள் அனைத்தையும் நீக்கி அமைதி அருள்பவள்.

(4) ஜெயதுர்க்கை சண்டிகை:

                தோல்விகளை நீக்கி வெற்றி தருபவள்.

(5) மஹா சரஸ்வதி சண்டிகை:

                 ஞாபக மறதி, அறியாமையை நீக்கி நல்லறிவு தருபவள்.

(6) பத்மாவதி சண்டிகை:

                 பயம் நீக்கி துணிவைத் தருபவள்.

(7) ராஜமாதங்கி சண்டிகை:

                 பதவி உயர்வும் செழிப்பும் அருள்பவள.

(8) பவானி சண்டிகை:

                சகல பாவங்களையும் நீக்குபவள்.

(9) அர்தாம்பிகை சண்டிகை:

                 கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைத் தருபவள்.

(10) காமேஸ்வரி சண்டிகை:

                 குழந்தை பாக்கியம் அருள்பவள்.

(11) புவனேஸ்வரி சண்டிகை:

                  இயற்கை சீற்றங்களைப் போக்குபவள்.

(12) அக்னி துர்கை சண்டிகை:

                   எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பவள்.

(13) சிவாதாரிகை சண்டிகை:

                     பிறவா நிலையையும் முக்தியையும் அருள்பவள்.


                     இந்த 13 சக்திகளும் இணைந்த சக்திதான் மஹா சண்டிகா பரேமஸ்வரி. இந்த யாகங்கள் முறத்தினாலே (சுழகு) செய்யப்படும். மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால், உலக நன்மை சத்ரு பயம் நீங்கும். லட்சுமி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி. இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அனைத்து விதமான பாபங்களும், எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது.


அசுரர்களை அழித்து, தர்மத்தை காக்க பல்வேறு வடிவங்களை எடுத்திருக்கும் தேவிதான் சண்டிதேவி. சண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது ஒரு மாபெரும் சக்தி மாற்றம்.


எனக்கு தெரிந்து இந்த சண்டி ஹோமத்தை முறையாக இன்றுவரை உரிய விதிகளுடன் நடத்தி தருபவர் என் பெறுமதிப்புக்குரிய இலங்கை யாழ்ப்பாணம் இனுவில் தர்ம சாஸ்தா குருகுல வேத வாத்தியார் ஸ்ரீ வத்சாங்க குருக்கள் அவர்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் யார் கேட்டாலும் அவரை தான் பரிந்துரை செய்வேன். முறையாக செய்தால் நீங்களே எதிர்பார்க்காத அளவு பலன்கள் உண்டு. முறையாக நிகழா விட்டால் பாரிய எதிர்மறை தாக்கம் உண்டு.

   

முறையாக 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்யப்படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது ஒரு மாபெரும் சக்தி மாற்றம் அந்த பூமியில் இயல்பாக உண்டாகும். அந்த மண்ணே ஒரு மாபெரும் சக்தி பீடமாக உருவாகும் என சொல்கிறார் மார்க்கண்டேய மகரிஷி. இந்த மந்திரங்கள் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.


மிக முக்கியமாக சண்டி ஹோமத்தில் 13 தேவதைகளுக்கும் ப்ரியமான இந்த 13 திரவியங்களே பிரதானமாக இடப்பட வேண்டும். அவற்றை இடுவதால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என சொல்லபடுகிறது.


நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.....

(1) விளாம்பழம் (சத்ரு நாசம் மற்றும் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி)

(2) முழு தேங்காய் (அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் குபேர வாழ்வும் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியும் பதவி உயர்வும்)

(3) தாமரை பூ + துரிஞ்சி நாரத்தை (சந்ததி விருத்தியும், புத்ர விருத்தியும் வாழையடி வாழயாக தொடரும்)

(4) பாக்கு பழம் (அனைத்து விதமான நோய்களிலும் இருந்து விடுதலை, அனைத்து விதமான நோய் தாக்கங்களில் இருந்தும் விடுதலை)

(5) கொய்யா பழம் (வாக்குப் பலிதம், ஞானானந்தகரம், வித்தை கலைகளில் விருத்தி என்பன ஏற்படும்)

(6) அகில் + சந்தன கட்டை (ராஜ வசீகரணம், சுய வசீகரணம், பேரழகு என்பன ஏற்படும்)

(7) நீத்து பூசணிக்காய் (எப்பேற்பட்ட திருஷ்டி தோஷங்களும், பில்லி ஏவல் போன்ற கொடிய தாக்கங்களும் தவிடு பொடியாகும்)

(8) செங்கரும்பு (சர்வ வஸ்யம்)

(9) தேவதாரம் + கருங்காலி (சோகநாசம், மனதில் உள்ள சோகங்கள், சஞ்சலங்கள், கவலைகள் தீரும்)

(10) மாம்பழம் (நினைத்த காரியம் ஜெயம்)

(11) மாதுளம்பழம் (மனதில் நினைக்கின்ற தூய பிரார்த்தனைகள் அனைத்தும் சித்தியாகும்)

(12) வில்வம்பழம் (அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுதலை, மன தைரியம் உண்டாகும்)

(13) செவ்வாழை (ஞான விருத்தி)


இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி  உபதேசித்ததாக கூறுவர்.


தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர். இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார். 


முன்னொருகாலத்தில் விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர். பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார். யோகமாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார். மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். "நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்" என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, "ஜலத்தால் நனையாத இடத்தில் எங்களை கொல் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.


மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது. 


தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள். மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர். 


வாகனமாகிய சிங்கம் கோடானுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது.

சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது. யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது. 


முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.


தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே... உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது. பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்பற்ற ன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர். மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக. மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.


இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர். இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும். கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்றினமையால் கௌசீகி என பெயர் பெற்றாள். கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி காளிகா என பெயர் பெற்றாள். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர். சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்கு தேவி "என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்" என்றாள். "தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்" என்று தூதன் மறுமுறை கூறினான். "அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்" என்றால் தேவி.


சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். "நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம்" என்றாள். அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள்.


சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.


வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள். கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்க விடுகிறாள்,


பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினாள், "கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக" என்று அருளினாள்...


பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம். தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். "அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்" என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர். சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, "நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ற ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்" என்றாள். சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.


தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இரையானான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர். தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்கு தேவி பதில் சொன்னாள் "உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கி கொள்கிறேன்" என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.


இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே. மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள். நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.


தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் போக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், புராணங்களால் மிகவும் மகிழ்வேன். தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன். வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன். தேவி ஸ்துதி, பிரம்ம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜெபிப்பதால் நல்ல புத்தி உண்டாகும். என்னை நினைத்த மாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள்.


தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்


முகவுரை:-

            மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திர வடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும்.  இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.


பூர்வ பாகத்தில் கவசம், அர்க்கலம், கீலகம், ராத்ரி ஸூக்தம், நவாக்ஷரீ விவேசனம் ஆகியனவும் நடுவில் முன்று சரித்திர வடிவில் தேவீ மஹாத்மியமும், கடைசியில் தேவீ ஸூக்தம், ரஹஸ்யத்ரயம் ஆகியனவும், அநுபந்தமாக துர்க்கா ஸப்த ச்லோகீ, துர்க்கா ஸூக்தம், இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம், துர்க்கா ஆபதுத்தாராஷ்டகம், தேவ்யபராக்ஷமாபன ஸ்தோத்ரம் இப்படி பாராயணம் செய்ய வேண்டும்.


பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு தேவீ மஹாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பிரம்ம வித்தையான வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவர வழிகாட்டுவது ஸ்ரீ வித்தை. மந்திரமும் தந்திரமும் ஸ்ரீ வித்தையில் அடக்கம்.


ததா தாம் தார - மித்யாஹூ - ரோமத்மேதி பஹுச்ருதா : தாமவே சக்திம் ப்ருவதே ஹ்ரீ - மாத்மேதி சாபரே 


ஒரே பரம்பொருள் தான் ஓம் என்ற பிரம்மவித்யா மந்திரத்தாலும் ஹ்ரீம் என்ற ஸ்ரீ வித்யா மந்திரத்தாலும் கூறப்படுகிறது. பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரிக்க முடியாதாதலால் ஒங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீம் என்பது மாயா பீஜம் அல்லது புவனேசுவரீ பீஜம் எனப்படும். விதையிலிருந்து முளை, கிளை, அரும்பு, மலர், காய், கனி முதலியன தோன்றுமாப் போல் புவனேசுவரீ பீஜத்திலிருந்து மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ தோன்றுகின்றனர். அவர்களுடைய ஸமஷ்டி மந்திர வடிவங்களில் முக்கியமானவை இரண்டு - நவாக்ஷரீ மந்திரதீøக்ஷ பெற்றவர் நவார்ண ஜபத்திற்கு அங்கமாக ஸப்தசதீ பாராயணத்தையும், ஸப்தசதீ மந்திரதை முக்கியமாய்க் கொண்டவர் அதற்கங்மாக நவாக்ஷரீ ஜபத்தையும் அனுஷ்டிப்பது காணப்படுகிறது.


சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறியது: 

                   தேவியே! ஸப்தசதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், சின்மயமான திரிபுரா மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். அவள் வரலாறு பதின்மூன்று அத்தியாயங்களில் எழுநூறு மந்திரங்களில் மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுளது, அதைப் படிப்பவர் எல்லா உபத்திரவங்களினின்றும் விடுபட்டு ஸகல சௌக்கியங்களையும் அடைவர்.


கிரதுக்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமரதந்திரம் கூறுகிறது.

                 (யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா) வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 


ஸகாம பக்தன் இதனால் மனதில் கருதியதை அடைவான். நிஷ்காம பக்தன் மோக்ஷத்தை அடைவான். 


ஸூரத மகாராஜனுக்கு மேதாமஹரிஷி கூறியதாவது: 

             பரமேசுவரியைச் சரணடைவாய், அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள். அரசன் தன் அரசாட்சியை மீண்டும் பெற்று இன்ப வாழ்வெய்தி எதிர்காலத்தில் மனுவாக விளங்கப்போகிறான் என்றும் ஸமாதி என்ற வைசியன் ஞானம் பெற்று மோக்ஷமடைந்தான் என்றும் கூறி தேவீ மஹாத்மிய வரலாறு முடிவடைகின்றது.


இப்படி 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக  சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.


அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம். 


இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.


முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும். நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது  மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. 


இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.


ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத்


ஸ்ரீ துர்கா சப்த சதி

---------------------------------


"ஸ்ரீ துர்கா ஸப்தசதி" என்று சொல்ல கூடிய தேவீ மஹாத்ம்யமானது 13 அத்யாயங்களை கொண்டது, அதிலே மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளது. அந்த 700 ஸ்லோகங்களிலும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு சக்தி வாய்ந்த பீஜாக்க்ஷரம் அடங்கியுள்ளது. சண்டீ நவாக்க்ஷரீ மஹா மந்த்ரத்தில் உள்ள ஐம் என்ற பீஜம் மஹாகாளியையும், ஹ்ரீம் என்ற பீஜம் மஹாலக்ஷ்மியையும், க்லீம் என்ற பீஜம் மஹா ஸரஸ்வதியையும் குறிக்கிறது.

ப்ரதம சரித்ரம் 104 ஸ்லோகங்களை உடையது அதிலே 104 சூக்ஷ்ம ரஹஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. மத்யம சரித்ரம் 113 ஸ்லோகங்களை உடையது அதிலே 113  சூக்ஷ்ம பீஜங்கள் அடங்கியுள்ளது, உத்தம சரித்ரம் 483  ஸ்லோகங்களை உடையது, அதிலே 483 சூக்ஷ்ம ரகஸ்ய பீஜங்கள் அடங்கியுள்ளது. ஆகமொத்தம் 700 ஸ்லோகங்களில் 700 பீஜ மந்த்ரங்கள் மறைவாக புதைந்துள்ளது. நித்யமும் தேவீ மஹாத்மியத்தை பாராயணம் செய்பவர்கள் இகலோகத்தில் பரம ஸௌக்யத்தயும், உடல் ஆரோக்யமும்,  மன நிம்மதியும், செல்வ செழிப்பும் பெற்று விளங்குவதுடன் பர கதியும் முக்தியும் இறுதியில் பெற்றிடுவார்கள். அம்பிகை யுத்தகளத்தில் போரிடும்பொழுது அவள் நிகழ்த்திய அஸுர வதங்களையும் அவளின் பராக்ரமத்தின் பெருமையையும் விளக்கும் "ஸப்தஸதி" 'ஸ்ரீ வித்யா உபாஸகர்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. துர்கா ஸப்தஸதி "சாக்த கீதை" எனப்படுகிறது. இந்த மந்த்ரங்களை கொண்டு வருடம் 1 முறையாவது தர்பணம் மற்றும் ஹோமங்களை அந்தந்த ஊர்களில் உள்ள க்ராம தேவதைகளின் ஆலயங்களில் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதினால் விவசாயம் தழைக்கும், #ஊர்களில் #பரவும் #தொற்றுநோய்கள் தடுக்கப்படும், சரியான காலத்தில் தேவைக்கேற்ற மழைப்பொழிவு இருக்கும், பெரும் இயற்கை சீற்றங்கள் மற்றும் அழிவுகள் நிகழாமல் காக்கும், தனிமனித ஒழுக்கம் மேம்படும். ஒற்றுமை நிலைக்கும்.


தேவி மஹாத்மியம் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைசியனும் நதியின் திட்டில் மூன்ராண்டு காலம் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்து தேவியை பூஜித்து வந்தனர். அம்பிகை தோன்றினாள், என்ன வரம் வேண்டும் என கேட்டாள். 

வைசியன் வைராக்யம் மேலிட்ட ஞானத்தை வேண்டினான், அரசனோ மறுபிறவியிலும் பக்தி நீங்காமலிருக்கும்படி இழந்த அரசை வேண்டினான். அம்பிகை அவ்விதமே அருளினாள். 


அவ்வரசனே மறுப்பிறப்பில் சூரியனுக்கு பிறந்த சாவர்ணி என்ற மனுவாக ஆனான். எழுபத்தி ஒரு தேவயுகம் கொண்டது ஒரு மனுவின் காலம். இதையே மன்வந்திரம் என்று கூறுவது வழக்கம். 


காமதேனுவை போன்ற எல்லாவற்றையும் சளைக்காமல் கொடுக்கவல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரராகுதல் மனித பிறவி எடுத்ததன் பயன். ஆதலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த தேவி மஹாத்மியத்தை படியுங்கள், அத்தோடு இயன்றவரை துர்க்கா சப்தச்லோகியையும் பாராயணம் செய்து வந்தால் மகாசக்தியின் பேரருளால் அனைத்து நலன்களும் அசுரவேகத்தில் சித்திக்கும்..


                   - சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment