Wednesday, 20 November 2024

சோளிங்கர் - கார்த்திகை மாதம் மட்டும் என்ன ஸ்பெஷல்??

 Shared post 


ஊரெங்கும் மாவிலைத் தோரணம்....

வீடெங்கும் வண்ண வண்ண கோலம்...

எங்கு?எப்போது? என்ன விசேஷம்?


சில ஊர்களில் சில மாதங்கள் விசேஷமாய் போற்றப்படும். இப்போ மதுரையை பார்த்தீங்கன்னா சித்திரை மாதம் ஊரே கூடி விழா எடுத்தமாதிரி சித்திரைத் தி(பெ)ருவிழா நடைபெறும். திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே கொண்டாட்டம் தான். பௌர்ணமியும் கார்த்திகை நக்ஷத்திரமும் ஒன்றாக வரும் மகாதீப வைபவத்திற்காக ஊரே காத்து நிற்கும். 

திருமலையிலோ எல்லா நாட்களும் விசேஷம் தான் என்றாலும் புரட்டாசி மாதம் தனித்துவம் வாய்ந்த விசேஷம். பெருமாளுக்கு மிக உகந்த மற்றும் பிரம்மோற்சவம் நடைபெறும் மாதம். பல லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவர். 


அதே போன்று கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழாவாக கொண்டாடும். அந்த மாதம் முழுதும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அது எந்த ஊர் தெரியுமா?

சென்னைக்கு அருகில் இருக்கும் சோளிங்கபுரம் என அழைக்கப்படும் சோளிங்கர் தான்.


அங்கு ஆட்சி செய்யும் பெருமாளான ந்ருஸிம்ஹர்  எப்போதும் அங்குதானே இருக்கிறார்.. அப்படியிருக்கையில் கார்த்திகை மாதம் மட்டும் என்ன ஸ்பெஷல்?? 


எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் பெருமாள் இந்த கார்த்திகை மாதம் மட்டும் கண்களை மூடி யோகம் செய்வதிலிருந்து ஒரு சிறு விடுப்பு எடுத்துக் கொண்டு கண்களைத் திறந்து பார்ப்பதாக ஐதிகம். வழக்கமாக கோவில்களில் ஸ்வாமி தரிசனம் செய்கையில் எங்கள் மேல் கருணை காட்ட மாட்டாயா.?கண் திறந்து பாரப்பா என வேண்டி நிற்போர் தானே நாம் எல்லோரும்? 


அப்படி இருக்கையில் பெருமாள் கண் திறந்திருக்கிறார் என தெரிந்தால் விடுவோமா? அவரது கடைக்கண் பார்வை ஒரு நொடி நம்மீது விழுந்தால் போதுமே. அவ்வளவு பாவங்களும் களையுமே கோடி புண்ணியம் வந்தடையுமே என ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செல்ல மாட்டோமோ? அந்த கடைக்கண் பார்வையை நம்மீது வீச பெருமாளே  தயார் நிலையில் இருக்கும் போது நாம் வாளாவிருக்கலாமா? 


எல்லோரும் இவ்வாறே எண்ணுவதால் சோளிங்கர் நகரமே கார்த்திகை மாதம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வியப்பென்ன!! ஊர் முழுதும் ஒரே அமளிதுமளி தான் போங்க!


நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக ந்ருஸிம்மரை தரிசிக்காமல் இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் அன்பு, வம்பு பார்வை தொந்தரவுகளை சாமர்த்தியமாக கடந்து  யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம்.  அதுவும் கண்திறந்து பார்ப்பதாகச் சொல்லப்படும் கார்த்திகை மாதத்தில் தரிசிப்பதை வாழ்நாளில் தாம் அடையும் பேறாக கருதிசெல்வர்.


இத்தலம் வைஷ்ணவர்கள் சிறப்பாகக் கொண்டாடும் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

 

ஒரு நாழிகை (24நிமிடங்கள்) இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லதாக பெரியோரும் ஆன்றோரும் கூறுவர்.

 

 சோளிங்கர் அல்லது சோளிங்கபுரம் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தாலும் புராணங்களில் திருக்கடிகை என்ற பெயரில்  தான் அழைக்கப்பட்டது. ஆழ்வார்கள் அந்த பெயரில் தான்  இங்குள்ள ஸ்ரீந்ருஸிம்ஹரை மங்களாசாசனம் செய்துள்னளர். 

காரணமில்லாமலில்லை.  கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது என்று பார்த்தோம் இல்லையா..  அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள். 

 

ஏன் இங்கு ந்ருஸிம்ஹர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்? சாமான்யர்களாகிய நாமே காரணமின்றி எச்செயலையும் செய்யாதபோது பெருமாள்? காரணம் காணலாம் வாருங்கள்...

 

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் (அத்ரி, காஸ்யபர்,வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் மற்றும் விஸ்வாமித்ரர்) எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை தங்களது தவ பலத்தால் அறிந்து  கொண்டனர். சுமார் 750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள், யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை (கடிகை) தவம் புரிந்தார்கள். அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார். நாளை என்பதே ந்ருஸிம்ஹருக்கு இல்லை என்பர். எல்லாமே இன்றே இப்போதே  தாம் அவருக்கு.


அதற்கு முன் அவர்கள் செய்து கொண்டிருந்த தவத்திற்கு காலன், கேயன் என்ற அரக்கர்கள் இடையூறாய் இருந்தனர். அதே சமயத்தில் ராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்துக்கு செல்லும்போது தானும் உடன் வருவதாகக் கூறியதால் அனுமனும் அங்கு வந்து காத்திருந்தார். அரக்கர்களின் இடையூறான செயலைப் பார்த்த அனுமன் ஸ்ரீராமனிடம் ப்ரார்த்தனை செய்தார். 


தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து அதை வைத்து அரக்கர்களை அழிக்க உத்தரவிட அனுமனும் அவ்விதமே செய்தார்.

சப்தரிஷிகள் நரசிம்மர் திருக்காட்சிக்காக புரிந்த தவம் பூர்த்தியானதால்  அந்தரிஷிகள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் யோக நரசிம்மராய் அங்கு திருக்காட்சி தந்தார்.

அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள். இதன் விளைவே இன்றெல்லாம் நமக்கு சோளிங்கரில் ந்ருஸிம்.?ஹ தரிசனம்.


மற்றுமொரு புராண நிகழ்வும் இந்த தலத்தை ஒட்டி கூறப்படுகின்றது. அதாவது, பிரம்மரிஷி என எல்லோராலும் புகழப்பட்ட விஸ்வாமித்திர மகரிஷிக்கு  தமது சமகால ஸ்ரேஷ்ட முனிவரான வசிஷ்டர் தம்மை அப்படி கருதவில்லையே  என எண்ணினார். அவர் திருவாயாலும்  பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்தவர் இந்த சோளிங்கர் மலை மேல் இருந்து தவம் புரிந்தால் எண்ணியது நிறைவேறும் என்பதால்  (ஏற்கனவே ஒரு கடிகை தவத்தின் பலனாக பெருமாளே நரசிம்மராய் திருக்காட்சி யளித்திருந்ததால்) அவ்வாறே இம்மலைக்கு வந்தார். சப்த ரிஷிகள் போன்று இருபத்து நாலே நிமிடங்கள் தவம் புரிந்தார். அதனை அறிந்து கொண்ட வசிஷ்டர் அவரைத்தேடி வந்து  பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது. 


மலையில் தனிக்கோவில் நாச்சியாராக  அம்ருதவல்லித் தாயார் திருக்காட்சியளித்து நம்மைக் கடாஷிக்க தயாராக எழுந்தருளியிருக்கிறார். 


..


ஏழு மண்டபங்கள் கடந்து மலை உச்சியை அடையலாம்.இரு பிரகாரங்களை உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் ராஜகோபுரத்தில்  ஹேமகோடி விமானத்தின் கீழ் யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் உற்சவராக  பக்தவத்சலர் எனும்  திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். உற்சவ தாயார்திருநாமம் ஸ்ரீசுதாவல்லி. அருகிலுள்ள தீர்த்தம் ப்ரம்ம தீர்த்தம் என அறியப்படுகிறது.


சப்தரிஷிகளுக்கு கிடைத்த யோகநரசிம்மர் திருக்காட்சி அனுமனுக்கும் கிட்டியது. பரவசமடைந்த அனுமன் ஸ்ரீராமர் அளித்த சங்கு சக்கரத்துடன் பக்கத்திலுள்ள மலைமீது யோகநிலையில்  அமர்ந்தார். நான்கு கரங்களுடன் யோகநிலையில் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ள அனுமனை நரசிம்மர் மலைக்கு அருகில் கிழக்குப் பக்கத்திலுள்ள சின்ன மலையில் 406 படிகளைக் கடந்து இன்றும் நாம் ஸேவிக்கலாம்.


சோளிங்கர் தலத்தை திருக்கடிகை என்ற பெயரில் மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் இங்குள்ள யோக ந்ருஸிம்ஹ பெருமானை அன்புடன் அக்காரக்கனி எனும் திருநாமமிட்டு விளிக்கின்றனர்.


"மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

 புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்

 தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

 அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே"

என்று அருளிச் செய்திருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

 

திருக்கோவிலுக்கு செல்ல 1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை அடைந்து நன்கு ஸேவித்து  உள்ளே சென்றால் முதலில் நமக்கு அருள் பாலிப்பது  பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும்  அமிர்தவல்லி தாயார் தான். காண கண் கோடி வேண்டும். 

தாயார் முன் நாம் கண் மூடி கரம் கூப்பி நிற்கையில் நம்மைப் பெற்றெடுத்த தாயாரே முன்னே நிற்பது போன்றதொரு உணர்வு கண்டிப்பா எல்லோரையும் தொற்றிக்கொள்ளும். சந்தேகமேயில்லை.

திருத்தாயாரின் புன்னகை ததும்பும் கருணை முகம் 'என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்வது போல் தோன்றும். நமக்கும் மனதில் கட்டாயம் அனைத்தும் நடந்தேறும் என்ற உறுதியும் நம்பிக்கையும் துளிர் விட்டுவிடும்.  


அந்நம்பிக்கையுடன் தாயாரை நன்கு மனங்குளிர ஸேவித்து பிரிய மனமில்லாமலே  உள்ளே சென்றால் ப்ரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், ப்ரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மூர்த்தி யோக கோலத்தில் அழகாய் வீற்றிருப்பதை காணலாம்.  பிரம்மாண்ட. உருவமாய் ஆனால் வாத்ஸல்யனாக  பத்மாசனத்தில் அந்த சங்கு சக்ரத்துடன் யோகத்தில் வீற்றிருக்கும்  பேரெழிலை ஆழ்வார்கள் போலன்றி நம்போன்ற சாமான்யர்களால் வர்ணிக்க இயலாது. 'தாயாரின்கடாக்ஷம் கிடைக்கப்பெற்று உனக்கு வேண்டியதை அளித்திட என்னிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாளல்லவா?பிறகென்ன? எல்லாம் உனக்கு ஜெயமே.. நிம்மதியாகப் போய்வா'  என அருள் பாலிப்பது நமக்கு அகக் கண்களுக்கு நன்கு புலப்படும். அந்த சந்தோஷத்தில், திருப்தியில், நிறைவில் அங்கிருந்து விடைபெற்றுச் செல்வோம். அதே உணர்வில் எஞ்சியிருக்கும்  நாட்கள் நொடிகளாக நம்மைக்கடந்து விடும். 


இருந்தாலும்அடுத்த வருடம் கார்த்திகை மாதத்திலும் கண்திறக்கும் எம்பெருமானின் அருள் வேண்டி நம்மை அங்கே வர வைத்துவிடும் அதுவே அவ்வக்காரக்கனியின் தனிச்சிறப்புமாகும்.

கார்த்திகை மாதத்திலும் குறிப்பா ஞாயிற்றுக் கிழமைகளில் அவனை ஸேவிப்பது கூடுதல் பலன் தரும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு டிமாண்ட் அதிகம். அதனால் பல்லாயிரக் கணக்கானோர் அங்கு ஆஜர். ஒவ்வொரு வருடம் கார்த்திகை மாதங்களிலும் அவனை ஸேவிப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ளாமல் ஒவ்வொரு கார்த்திகை ஞாயிறும் வந்து ஸேவிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. தம்மை அண்டி வரும் பக்தர்கள் ஒருவரையும் கைவிடுவதுமில்லை அவன்.


உபகதை ஒன்று காண்போமா?

இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம். அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம். திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம். இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம், என் கண்கள் கடாக்ஷம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட

 உயர்ந்தது என்று. 

அத்தகைய கண்கள் கார்த்திகை மாதத்தில் நமக்குக் கடாஷிக்க காத்திருக்கையில் தயக்கம் ஏன்?

 

 "திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

 அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

 எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்"----


என்று ஆண்டாள் பாடியபடி நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு நாமும் பெறுவோமாக. 


ஏற்கனவே பெற்றிருப்போர் இவ்வாண்டும் பெறுவீர்களாக.


பின் தயக்கமேன்? தற்போது நடப்பது கார்த்திகை மாதம். வரப்போகும்ஞாயிறு. 

போய் ஸேவித்து வருவோமே??அப்படி  ஞாயிறு முடியாவிடினும் எஞ்சியிருக்கும் கார்த்திகை மாத நாட்களில்  ஏதேனும் ஒன்றில் போய் ஸேவித்து உய்வோமாக!!


இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது.ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன்.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மூன்று பாசுரங்களாலும் முதல் மூன்று ஆழ்வார்களில் இளையவரான பேயாழ்வார் ஒரு பாசுரம் மூலமும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.


----ஸ்ரீஅக்காரக்கனி திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment