Wednesday, 4 December 2019

ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம் ராகம்: மோகனம் பாடியவர்: மாணிக்கவாசகர்

திருச்சிற்றம்பலம்
02. ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம்
ராகம்: மோகனம்       பாடியவர்: மாணிக்கவாசகர்
திருவாசகம் திருச்சாழல்   தலம்: தில்லை சிதம்பரம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ.
என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ.
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ.
தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ.
அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ.
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ.
கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
 ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ.
தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ.
தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ.
நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ.
மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
தான்புக்கு நட்டம்  பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ.
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ.
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ.
அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ.
சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ.
அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத் தன்மையன ; காண்; சாழலோ.
அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும்  அது எனக்கு அறிய இயம்பேடீ!
அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ. ்