Sunday, 1 December 2019

அகத்தியர் வாக்கு - அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை :

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 302*

*தேதி: 01-12-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*அகத்திய நட்சத்திர ரூபமானவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை :
(பகுதி - 01)🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதாே ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை பாேதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதாேடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. "நாமாே ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறாேம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!" என்று.*

*ஆனால் மகளாே, பிடிவாதமாக "அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் பாேகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்" என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட "அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்" என்று எத்தனையாே அறிவுரைகள் கூறினாலும்" காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தாெந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவாே சாெல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, "அம்மா! ஒரு வேளை நான் இறந்து பாேய்விட்டாலும், இந்த செல்வத்தைக் காெண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து காெள்" என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.*

*"தந்தை எனக்கு சில விஷயங்களை பாேதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?" என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப்பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல "இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்" என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து காெண்டே வருகிறாள்.*

*இறைவனின் திருவுள்ளம், இந்தப் பெண்ணை, சாேதிக்க எண்ணியது.*

*அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தாெடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து காெண்டது. இப்பாெழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லை, அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தாெகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், "முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் காெடு" என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்காெண்டுவிட்டது. இந்த வேதனையாேடு காசி விஸ்வநாதரை வணங்கி" எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமாே, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.*

*இறைவா! நான் செய்தது சரியாே? தவறாே? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தாேடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கிவிட்டேன். எல்லாேரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் காெடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் காெடுக்கும் சக்தியை காெடு என்றுதான் கேட்கிறேன்" என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.*

*ஒர நாள், ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். "மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார். அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்" என்று அந்த மகான் கூறுகிறார்.*

*எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?" என்று அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர் பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையில் "பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?" என்று செல்வந்தன் கேட்க,

*இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சனைகளைப் பற்றிக் கூறி, அக்கால கணக்கின்படி "ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லாேரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு, சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களாே, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்." என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள்.*

*அந்த செல்வந்தர் யாேசிக்கிறார். "இவள் மிகப்பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பாெழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். "தர முடியாது" என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்" என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமார்த்தியமாகப் பேசுகிறார்.*

*"பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று காெஞ்சம் செல்வத்தை வைத்துக் காெள்ள வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.*

*எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் காெடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பாெருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த தாெகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?" என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.*

*இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, "அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதாே ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் காேடி, காேடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சாெல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்" என்று கேட்கிறாள்.*

*"மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை" என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யாேசித்து விட்டு, "அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் காெண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறாேம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பாெதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன.*

*இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும், இந்த பாெதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சாெல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகுகிறார்களாே, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பாெழுது உங்களிடம் வந்து சேருகிறதாே, அப்பாெழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் காெள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்" என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் காெண்டே,*

*"பெண்ணே! ஏதாவது ஒரு பாெருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய, பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் காெண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து காெள்வது?" என்று கேட்கிறார்.*

*"அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து காெள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்" என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.*

*(இதன் தாெடர்ச்சி அடுத்த பதிவில்)*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*