Friday 11 February 2022

வீரபத்திரா் பற்றிய நூறு அபூர்வ தகவல்கள்

 வீரபத்திரா் பற்றிய நூறு அபூர்வ தகவல்கள்

------------------------------------------------------------------------------


             உலகம் அறிய இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்....


(1) வீரபத்திரர் என்றால் வீரத்தை பத்திரமாக தருபவர் என்று பொருள்.


(2) தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட மக்களின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரரின் வழிபாட்டு முறைகளும் பலவிதமாக உள்ளன.


(3) ஆதித் தமிழர்கள், தங்கள் கிராமங்களில் அறம் நிலவ வேண்டும் என்ற ஒரே தத்துவத்தின் அடிப்படையில் வீபத்திரர் கோவில்களை ஊர் மத்தியில் கட்டினார்கள்.


(4) தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டுமே வீரபத்திரர் மூலவராக உள்ளார். பல கோவில்களில் திருச்சுற்றுத் தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் இருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வம் வீரபத்திரர்தான்.


(5) வீரபத்திரருக்கு எல்லாரும் பூஜை செய்துவிட முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதிக்கு நிர்தேதோ தாரா யந்திர பூஜை என்று பெயர்.


(6) வீரபத்திரருக்கு நடத்தப்படும் பூஜைகளில் வாய்க்கட்டுப்பூஜை தனித்துவம் கொண்டது. மம்சாபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் ஸ்ரீ வீரபத்திரருக்கு வாய்க்காட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.


(7) திருப்பெருந்துறை வீரபத்திரர் ஆலயத்திலும் சேலம் குகை நரசிங்கபுரம் கோவிலிலும் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.


(8) மதுரை வீரபத்திரசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவதில்லை. நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றி வழிபடுகின்றனர்.


(9) வீரபத்திரருக்கு மூன்று கிளை உள்ள விளக்கை ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.


(10) வீரபத்திரரை வழிபடும் போது பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டால் அவர் மிகவும்மகிழ்ச்சி அடைவார். குறிப்பாக பஞ்ச வாத்தியங்களில் ஒன்றான உடுக்கை ஒலி ஒசை ஸ்ரீவீரபத்திரருக்கு மிகவும் பிடிக்கும்.


(11) நைவேத்தியங்களில் ஸ்ரீ வீரபத்திரருக்கு நெய் கலந்து நன்கு பிசைந்த சோறு தான் மிகவும் பிடிக்கும். இந்த நைவேத்தியத்தை வெள்ளிக் கிண்ணத்தில் மட்டுமே வைத்து படைக்க வேண்டும்.


(12) மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட்டால், நினைத்தது நடக்கும்.


(13) சிவகங்கை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீஅக்னி வீரபத்திரர் கோவிலில் தினமும் நவதானியங்களை சமைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.


(14) பெரும்பாலான வீரபத்திரர் கோவில்களில் உயிர் பலி கொடுக்கப்படும் போது வீரபத்திரருடைய முகத்தை துணியிட்டு மூடி விடுவார்கள்.


(15) பூவந்திக்கிராமம் மந்தை கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு மாதம் ஒருதடவை உயிர் பலி கொடுத்து அசைவப்படைப்புப் போட்டு பூஜை செய்கிறார்கள்.


(16) மம்சாவரம் ஆகாச கருப்பண்ண சுவாமி கோவிலில் வீரபத்திரரை நினைத்து தேங்காய் உடைப்பது இல்லை.


(17) திருக்கழுக்குன்றம் ஸ்ரீவேதபுரீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு நொச்சி, விளா, வில்வம் ஆகிய மூன்று இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது வழக்கத்தில் உள்ளது.


(18) சிவபெருமானின் கருணையை வியந்து போற்றும் துதிகளுக்கு சமகம் என்று பெயர். மதுரை - இம்மையில் நன்மை தருவார் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரர் முன்பு சமகம் படிக்கும் வழக்கம் உள்ளது.


(19) திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரர் முன்பு சிவனுக்குரிய 108 போற்றிகளை கூறி வழிபாடு செய்கின்றனர்.


(20) நாகையில் உள்ள வீரபத்திரர் கோவிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.


(21) மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள வீரப த்திரரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால், பங்காளிச் சண்டைகள் தீரும் என்பது ஐதீகம்.


(22) மதுரை அவனியாபுரத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருக்கும் ஸ்ரீ வீரபத்திரருக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள்.


(23) வீரபத்திரரை ராகு கால நேரத்தில் வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


(24) ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்திலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை நேரத்திலும் வீரபத்திரரை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.


(25) திருபுவனம் ஸ்ரீவீரபத்திரசாமி கோவிலில் பௌர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க விரும்புபவர்கள் அமாவாசை நாட்களில் வீரபத்திரரை வழிபட்டு வந்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.


(27) சென்னை திருவொற்றியூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு  ஒவ்வொரு அமாவாசைக்கும் வெற்றிலை பட்டை மாலை சார்த்தி வழிபாடுகள் செய்கிறார்கள்.


(28) பூரம், கிருத்திகை நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை வணங்கினால் சகல செல்வங்களும் கிடைக்கும்.


(29) தக்கோலம் வீரபத்திரசுவாமி கோவிலில் கிருத்திகை நட்சத்திர நாளில் மிக, மிக சிறப்பாக பூஜைகள் நடத்தப்படுகிறது.


(30) அக்னி நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.


(31) சித்திரை மாதம் வரும் செவ்வாய்க்கிழமை 13 கிழமைகளில் வீரபத்திரருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.


(32) வீரபத்திரருக்கு செய்யப்படும் பூஜைகளில் சூலாட்டுப் பூஜையான ஆட்டை வெட்டும் பூஜை மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெறும்.


(33) வீரபத்திரர் வேட்டைக்கு செல்லும் போது கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வார். அவர் திரும்பி வந்ததும் மிதமுள்ள கட்டுச்சோறை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.


(34) மாடக்குளம் வீரபத்திரர் கோவிலில் புரட்டாசி மாதம் ஊர் மக்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதை ஊர் பொங்கல் என்று அழைக்கிறார்கள்.


(35) நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடும் போதும் வீரபத்திரருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது பல ஆலயங்களில் நடைமுறையில் உள்ளது.


(36) சிவகங்கை காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள வீரபத்திரரை குலதெய்வமாக கொண்டவர்கள், எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் வீரபத்திரரிடம் உத்தரவு கேட்டு விட்டே செய்வார்கள்.


(37) கள்ளிக்குடி வீரபத்திரருக்கு மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று களி செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.


(38) சேலம் தாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று பக்தர்களில் ஒருவர் வீரபத்திரர் போல வேடம் அணிந்து வருவார். தீபாராதனைக்கு பிறகு கடவுளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை, வீரபத்திரர் வேடம் போட்டவருக்கு அணிவிக்கப்படும். இது தமிழ்நாட்டில் தாரமங்கலம் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது.


(39) வீரபத்திரர் மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அகோர பூஜை நடத்துவதை மதுரை வீரபத்திரர் கோவிலில் வழக்கமாக வைத்துள்ளனர்.


(40) பேரையூர் ஸ்ரீவீரபத்திரர் கோவில் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜைக்கு "மாசிப்பச்சிடி" என்று பெயர்.


(41) முருகனுக்குத்தான காவடி எடுப்பார்கள் என்று நினைக்காதீர்கள். திருக்குளம்பூர்  கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு மகா சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபாடு செய்கிறார்கள்.


(42) வெங்கம்பட்டியில் உள்ள வீரபத்திரர் கோவிலில் பங்குனி உத்திரம் தினத்தன்று தீ மிதி விழா நடத்தப்படுகிறது.


(43) திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் உள்ள வீரபத்திரசுவாமி கோவிலில் தெலுங்கு புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.


(44) ஒரு சிவராத்திரி தினத்தன்று தான் தட்சன் யாகத்தை வீரபத்திரர் அழித்தார். எனவே சிவராத்திரியன்று வீரபத்திரரை வணங்கினால் நல்லது என்று கருதப்படுகிறது.


(45) தென் மாவட்டங்களில் மகா சிவராத்திரி தினத்தன்று வீரபத்திரருக்கு பயறு அவித்து வைத்து வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.


(46) வில்வம், தாமரைப்பூ, சாதிப்பூ மற்றும் நந்தியா வட்டம் இந்த 4 வகை மலர்களும் வீரபத்திரருக்கு மிகவும் பிடித்தமானவை.


(47) மதுரை வடகரையில் உள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரி தினத்தன்று இரவு 21 இலைகள் போட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.


(48) சேவலை அறுத்து, சேவலின் ஈரல், நெஞ்சு, குடல் போன்ற பகுதிகளை தீயில் வாட்டி சுட்டு, அவற்றை வீரபத்திரருக்கு சில ஊர்களில் படையலாக வைப்பார்கள். இந்த வழிபாட்டுக்கு சூட்டையாங் கொடுத்தல் என்று பெயர்.


(49) பொங்கல் சமைத்து அதனுள் கோழியை அறுத்து ரத்தம் ஊற்றி பிசைந்து, அதை 3 உருண்டைகளாகப் பிடித்து நள்ளிரவு 1 மணிக்கு ஆகாயத்தை நோக்கி வீசுவார்கள். அதை வீரபத்திரர் பெற்று கொள்வதால் ரத்த பொங்கல் கீழே விழாது என்கிறார்கள். இந்த பூஜையை ஆகாய பூஜை என்று அழைக்கிறார்கள்.


(50) மசோபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் சிவராத்திரி தினத்தன்று நடக்கும் பூஜையில் 40 ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[ மகா சிவராத்திரி தினத்தன்று தென் மாவட்டங்களில் அம்மன் கோவில்களில் நடைபெறும் உற்சவ ஊர்வலத்தில் மூங்கில் பிரம்பால் 8 கை செய்து, வீரபத்திராக வேடம் அணிந்து ஒருவர் முன்செல்வார். இதனை வீரபத்திரப் படலம் என்பார்கள்.


(52) காஞ்சி பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சுவாமிகள் தம்தந்தை வழி குலதெய்வமான திருவிடைமருதூர் வீரபத்திரரை தினமும் வழிபாடு செய்து வந்தார்.


(53) வீரபத்திரரை குலதெய்வமாக கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'வீ'' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களையே சூட்டுகிறார்கள்.


(54) கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ வீரபத்திரர், திருமண இடையூறுகளை நீக்கி அருள்பவராக கருதப் படுகிறார்.


(55) வீரபத்திரரை குலதெய்வ மாக கொண்டவர்கள், திருமணம், நெல் அறுவடை, நெல் விதைப்பு என்று எதை செய்தாலும் வீரபத்திரரை வழிபட்டே பிறகு தொடங்குவார்கள்.


(56) வீரபத்திரரை நினைத்து கும்பிட்டு வழங்கப்படும் திருநீறுக்கு பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற வற்றை விரட்டும் ஆற்றல் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.


(57) வீரபத்திரர் வழிபாட்டின் போது பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் ஒரு வகை வழிபாடு உள்ளது. இதற்கு தமரன் என்று பெயர்.


(58) திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள வீரபத்திரரை வழிபடும் வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் தங்கள் உறவு முறையில் யார் இறந்தாலும், இந்த ஆலயத்துக்கு வந்து 16-ம் நாள் காரியத்தை செய்கிறார்கள்.


(59)  ஈரோடு கூனம்பட்டி கிராம மக்கள் வீரபத்திரரை தங்கள் வீட்டில் வைத்து வழிபட விரும்பினால் சிலையை வீட்டுக்கு எடுத்து செல்வார்கள். சாமி கும்பிட்டு முடித்ததும் மீண்டும் வீரபத்திரர் சிலையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள்.


(60) வீரபத்திரரை வழிபடும் போது மிக, மிக தூய்மை அவசியம். எனவே தான் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் படத்தை கூட வீட்டில் வைத்து வழிபடுவது இல்லை. அந்த அளவுக்கு வீரபத்திரர் வழிபாட்டில் தூய்மை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


(61) வீரபத்திரருக்கு வீரப்பர், வீரன்னர், வீர், முட்டு வீரன்னர், உத்தான வீரபத்திரர், அக்னி விரபத்திரர், அகோர வீரபத்திரர், தட்சாரி, வீரேசுவரர், வீரசூடாமணி, வீரகர், கிரதத்வம்சி, தட்சயஞ்ஞன், மல்லனார், இயக்கடிவீரர், வீரேசுவரன், உறங்காவல்லன், உறங்காபுளி கருப்பன் என்று பல பெயர்கள் உள்ளன.


(62) திருவானைக்காவலில் உள்ள வீரபத்திரர், சுமார் 2500 வருட புராதன சிறப்பு கொண்டது.


(63) காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர் கள் வீரபத்திரரை பிரதான தெய்வமாக வழிபடுகிறார்கள்.


(64) மகாபாரதம், ராமாயாணம் ஆகியவை இரு காவியங்களிலும் வீரபத்திரர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யஜூர் வேதத்திலும் வீரபத்திரர் குறிப்பிடப்பட்டுள்ளார்.


(65) வீரபத்திரர் பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் வீரபத்திரர் பற்றி 26 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.


(66) வீரபத்திரர் மேரு மலையில் வீற்றிருப்பவர் என்றும், பூதங்களையும், இறந்தோரின் ஆவிகளையும் அடக்கியவராகவும் ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


(67) தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பாலான ஆலயங்களில் சப்தமாதர்களுடன் சேர்ந்து வீரபத்திரர் காணப்படுகிறார்.


(68) தஞ்சை பெரிய கோவிலில் புடைப்புச் சிற்பமாக வீரபத்திரர் வரலாறு உள்ளது.


(69) தமிழ்நாட்டில் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் தான் வீரபத்திரருக்கு அதிகப்படியான கோவில்கள் கட்டப்பட்டன.


(70) தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தான் வீரபத்திரர் வழிபாடு மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது.


(71) மதுரை, கொடுங்குன்றம், குடுமியான் மலை, தஞ்சை, திருக்கோவிலும், சிதம்பரம், காஞ்சீபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணாபுரம், தென்காசி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, தேவிகாபுரம், வேலூர், கோவை முடிகொண்டம், தாரமங்கலம், பேரூர், தர்மபுரி, தாடிக்கொம்பு, பனையபுரம், தீப்பற்றியலூர், திருவள்ளூர் அருகில் உள்ள திருப்பாச்சூர் ஆகிய இடங்களில் மிகப் பிரமாண்டமான வீரபத்திரர் சிலைகள் உள்ளன.


(72) சிவன் தன் உடலில் இருந்து வீரபத்திரரை தோற்றுவித்தார் என்று காஞ்சிபுராணம் கூறுகிறது. ஆனால் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வீரபத்திரர் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறுகிறது.


(73) வீரபத்திரர், தட்சனை அழிக்க போர்க்கோலம் கொண்டபோது, தும்பைப் பூவை அணிந்து சென்றார். எனவே தான் வீரபத்திரரை வழிபடுவர்கள் தும்பைப்பூ மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.


(74) திருவெண்காட்டில் உறைந்துள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பொறாமை குணம் மறையும்.


(75) வீரபத்திரர் முருகனுக்கு மூத்தவர் ஆவார். பல திருவிளையாடல்களில் முருகனுக்கு முன்னோடியாக வீரபத்திரரே திகழ்கிறார்.


(76) வீரபத்திரருக்கு விரதம் இருப்பவர்கள், அறுகீரை, மொச்சைப்பயறு, தட்டைப்பயறு, அகத்திக்கீரை, மீன், கருவாடு, முட்டை மற்றும் இறைச்சி வகைகளை தவிர்த்து கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.


(77) வீரபத்திரர், தட்சயாகத்தை நடத்திய போது, அங்காள பரமேஸ்வரி அவருக்கு உதவியாக நின்றார். இதனால் அவளுக்கு வீரமாகாளி என்ற பெயர் ஏற்பட்டது. வீரமாகாளிக்கு பர்மா, மலேசியா, சிங்கப்பூரிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன.


(78) கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற மகாமகம் குளத்துக்கு வீரபத்திரர்தான் காவல் தெய்வமாக உள்ளார்.


(79) பொதுவாக வீரபத்திரர் கோவில் அருகில் ஏதாவது ஒரு பெயரில் காளி கோவில் இருக்கும்.


(80) மராட்டியம் மாநிலத்தில் உள்ள ஆதி இன மக்கள் வீர் எனப்படும் வீரபத்திரரை வழிபட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


(81) வீரபத்திரம் என்ற சொல்லுக்கு அசுவமேத குதிரை, பாதுகாப்பு தருதல், யானைகளின் வரிசை, குதிரைகளின் வரிசை என்றும் அர்த்தங்கள் உள்ளது.


(82) வீரபத்திரர் மிகவும் உத்திரமானவர் என்பதை காட்டவே, அவர் தலையில் அக்கினி மகுடம் அமைத்திருக்கின்றனர்.


(83) தட்ச யாகத்தை அழித்த வீரபத்திரர் கொடூரத் தெய்வமாக கருதப்படுவதால் ஆகமக் கோவில்களில் பெரும்பாலும் அவருக்கு தனி சன்னதி ஏற்படுத்தப்படவில்லை.


(84) சிவனின் அம்சமாக கருதப்பட்டாலும் பெரிய கோவில்களில் வீரபத்திரருக்கு என்று தனி விழாக்கள், கொண்டாட்டங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.


(85) தமிழ்நாட்டில் வீரபத்திரர் சுமார் 100 கோவில்களில் மூலவராகவும், தனி சன்னதியுடனும் இருப்பதாக லலிதா சுந்தரம் என்பவர் தனது வீரபத்திரர் அருள் தலங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


(86) ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரபத்திரரை உபாசனைத் தெய்வமாக கொண்டிருந்தார். அவரது தலை குனியாத வீரத்துக்கு வீரபத்திரர் வழிபாடே காரணமாக கூறப்படுகிறது.


(87) திருப்பறியலூர் தலத்தில் வீரபத்திரரை மனம் உருகி வழிபட்டால் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் விருத்தி, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.


(88) வடநாட்டில் இருந்து வீரசைவர்கள் தென் இந்தியாவுக்கு அதிகமாக வந்த பிறகே தமிழ்நாட்டில் வீரபத்திரருக்கு கோவில்கள் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


(89)தட்சனை சம்காரம் செய்த போது உயிரிழந்த மகரிஷிகள் பேய்களாக மாறி அலைந்ததாகவும், அனுமந்தபுரத்தில் சாந்தமாக ஏழுந்தருளிய வீரபத்திரர் சிவபூஜை செய்து அவர்களுக்கு விபூதி கொடுத்ததாகவும் அதன் பிறகே மகரிஷிகள் பேய் உருவில் இருந்து மீண்டதாக வரலாறு உள்ளது.


(90) அனுமந்தபுரம் வீரபத்திரர் காலையில் குழந்தையாகவும், மதியம் வாலிபனாகவும், மாலையில் முதியவராகவும் காட்சி அளிப்பதாக சொல்கிறார்கள்.


(91) ஊழிக்காலத்தில் உலகத்தை இயக்கும் பொறுப்பும், கடமையும் வீரபத்திரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


(92) பெரும்பாலான கோவில்களில் வீரபத்திரர் வடதிசை நோக்கியே உள்ளார். வடதிசை என்பது வெற்றியையும், செல்வத்தையும் தருவதாகும். எனவே வீரபத்திரரை வழிபட்டால் வெற்றியும் செல்வமும் கிடைக்கும்.


(93) அனுமந்தபுரம் வீரபத்திரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அவர் 8 திசைகளும் அதிர உலாவுவதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.


(94) வீரபத்திரருக்கு "அனைவருக்கும் தலைவன்" என்றும் ஒரு பெயர் உண்டு.


(95) வீரபத்திரர் தன் பக்தர்கள் கனவில் வந்து உத்தரவுகளை சொல்லி தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளும் சக்தி படைத்தவர். பல ஊர்களில் இந்த அற்புதம் நடந்துள்ளது.


(96) நிலம் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் தொடர்ந்து ஏதேனும் தடை ஏற்பட்டால் வீரபத்திரரை உரிய முறையில் வழிபட்டால் போதும் தடைகள் விலகி ஓடிவிடும்.


(97) வீரபத்திரரைப் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையான முழுமையான தகவல்களைக் கொண்டு ஒரு கலைக் களஞ்சியத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளது திருவாவடுதுறை ஆதீனம்.


(98) சப்தமாதர்களைச் சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யும்போது இவர்களின் காவலனாக வீரபத்திரர் பெருமானை முதலில் வைப்பார்கள்.


(99) வீரபத்திரரால் அழிக்கப்பட்டது தட்சன் என்பது பலருக்கும் தெரியும். மேலும், வீரமார்த்தாண்டன், சத்ததந்து, வச்சிராங்கதன் முதலியோர் அவரால் அழிக்கப்பட்டவர்கள் என்பது களஞ்சியத்தில் கிடைக்கும் கூடுதல் செய்தியாகும்.


(100) வீரபத்திரரை முழுமையாக அறிமுகப்படுத்தும் நூல் மகா வீரபத்திரர் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment