Tuesday, 9 January 2018

வாசி யோகம் - கதிர் இயக்க கதி அறிதல்


கதிர் இயக்க கதி அறிதல்
*************************************
வாசி யோகத்தில் கதி பற்றி நன்றாகவே கற்று தருவார்கள்.. பல மணி நேரம் பயிலும் அந்த கதியில் பயிலுபவர்களை பார்த்தால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் ஊக்கத்துடன் பயில்வார்கள்.. அதற்கு மேல் உள்ளவர்கள் அந்த மார்க்கத்தில் தொடர்ந்து இருந்து முக்கிய நிர்வாக பங்கு உடைவர்கள் பல மணி நேரம் பயில்வது போல் பாவனை காட்டி கதியில் பட்டும் படாமலும் இருப்பார்கள்.. காரணம் தேகத்தால் வலு இழந்து போய் இருப்பார்கள்.. வலு இழந்ததின் காரணம் முக்கியமாக முறையற்ற வாசி பயிற்சியால் கூட இருந்திருக்கலாம்.. ஆதியிலே சொல்லப் பட்ட வாசி யோகத்தில் முக்கிய பயிற்சிகள் மருவி மருவி கடைசியில் களங்கப் பட்ட வாசியாக கற்றுக்கொள்ளப் பட்டு அதை அனுபவ பூர்வமாக அனுபவிக்க முடியாத குருமார்கள் கற்றதை கக்கும் நிலைதான் இன்று நிறையவே உள்ளது.. கனல் என்ற நெருப்பாற்றலை பெருக்கி, உடம்பில் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டால் போதும் வாசி யோகம் நிறைவேறி விட்டது போன்ற மாயை உருவாக்கி தானும் மயங்கி மற்றவர்களையும் மயக்கி விடுகிறார்கள்.. பின் தன்னையே தெய்வ நிலைக்கு நிகராக வைத்து மேலும் மேலும் முறையற்ற வாசியோகத்திற்கு மெருகு ஊட்ட முனைவார்கள்.. இன்று பிரபலமான தெய்வமாக மதிக்கப் படும் குருமார்கள் தங்களின் முறையற்ற யோகப் பயிற்சிகளை மெருகு ஊட்டும் முயற்சியை தான், தங்கள் போலியான தெய்வ தன்மை மூலம், செய்து கொண்டு இருக்கிறார்கள்.. காம உணர்வு என்ற ஒர் உணர்வு மனத்தளவிலே மட்டுமே தட்டி எழுப்பப் படும் ஒன்று.. அதன் உச்சத்தின் பின் ஏற்படும் சோர்வு தேக பலவீனம் அறிந்ததே.. அதே போல் வாசியோகத்தில் சில யுக்திகளால் தூண்டி விடப் பட்ட உணர்வினை முறையாக பயன் படுத்த வில்லை யென்றால் அது மோசம் செய்யும்.. அப்படி மோசம் அடைந்தவர்கள் பல பேர் உள்ளனர்..
அப்படி சுழிமுனையில் ஏற்றிய நெருப்பாற்றலை அப்படியே விட்டு வைத்தால் அது தீங்கை விளைவிக்கும் .. அந்த ஆற்றலை தேகம் முழுவதும் பரவ செய்ய வேண்டும்.. அதை பரவ செய்யும் கதி தான் கதிர் இயக்க கதி.. இதை ஆயிரத்தில் ஒருவர் தான் அறிந்து இருப்பார்கள்.. அது என்ன கதிர் இயக்க கதி.. கதிர் என்பது 'க்' + அதிர் ஆக பிரிந்து கடவுளின் சக்தி அதிர்வு ஆக பொருள் கொள்ளும்.. அது ஒரு இடத்தில் குவியும் போது நெருப்பாக இருக்கும்.. அந்த நெருப்பின் சூட்டை தாங்க முடியாமல் தேக திசுக்கள் துடிக்க ஆரம்பிக்கும்.. இந்த நிலைக்கு தான் மிக மிக இளகிய தன்மையான காற்றின் சுவாசம் தேகத்திற்குள் சென்று சூட்டை உள் வாங்கி தேகம் முழுமைக்கும் பரவ செய்கிறது.. பரவ செய்யும் அந்த இதமான சூட்டில் தான் செல் உற்பத்தி நடை பெறுகிறது.. பகலில் எண்ணங்களின் தாக்குதலில் நெருப்பாற்றல் மித மிஞ்சிய சூட்டில் சோர்வடைந்த தேகம், உறக்கத்தை விரும்புகிறது.. இப்போது வாசி யோகத்தில் அதி மிஞ்சிய சூடு தேகத்தை கெடா வண்ணம் இருக்க கதிர் இயக்க கதியை பயில வேண்டும்.. அப்போது தான் நற்கதியில் உண்டான சூடு வாசியோக பலனை தரும்.. அளப்பறிய ஆற்றல் பெறவே வாசியோகம்.. அது நடு வழியில் நின்று அந்த பேராற்றல் மேற்கொண்டு சென்று பயன் தராமல் இருந்து விட்டால், தேங்கிய அந்த ஆற்றலால் தீங்கே விளையும்.. ஆகவே கதிர் இயக்க கதி மிக மிக அவசியமாகிறது..
அதற்கு மூச்சும் மனமும் மிக அவசியம்.. சுத்த மனத்தில் பேரறிவின் பங்கு நிறைய இருக்கும்.. அதனால் சுத்த மனம் நிர்வாக திறமை கொண்டது.. கதிர் இயக்க கதியில் மனதின் பங்கு மிக முக்கியம்.. மூச்சு சூட்டை கிரகிக்கும்.. மனமோ கிரகித்த அந்த மூச்சை கதிர் இயக்கமாக மாற்றி தேக முழுமைக்கும் பரவ செய்யும்.. இதனால் நற் கதியில் அதிக ஆற்றலாய் கிடைத்த சூட்டை இதமான சூட்டாக கதிர் ஆற்றல் கதியில் கிடைக்கும்.. மனம் தன்னில் தானாய் இருப்பு தன்மையில் இருந்தால் மட்டுமே சுத்த மனம் ஏற்பட்டு கதிர் இயக்கம் நடைபெற சாதக சூழ்நிலை ஏற்படும்.. கதிர் இயக்கம் எந்த ஊடகங்களையும் தாண்டி செயல் படக்கூடியது.. எந்த ஊடகமும் கதிர் இயக்கத்திற்கு தடையாக இருக்கவே முடியாது.. அந்த கதிர் இயக்கம் சுத்த மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலால் நடைபெறக்கூடியது.. அதனால் தான் சுழுமுனையில் கதிர் ஆற்றலை தாங்கிவரும் மூச்சு நுரையிரல் மட்டும் சென்றாலும் மூச்சு காற்றிலிருந்து வெளிப்படும் கதிர் ஆற்றல் மாமிசம் என்ற தேக ஊடகத்தை ஊடூருவி தேகம் முழுமைக்கும் சூடு என்ற கனலை இதமாக எடுத்து செல்ல முடிகிறது.. இந்த கதிர் ஆற்றலை தூல நிலையில் பிராண வாயு எனவும் சூட்சம நிலையில் பிராணன் எனவும் சொல்லலாம்.. எங்கும் நிறைந்து விளங்கும் பிராணன் ஒரு வட மொழி சொல்.. கதிர் இயக்கம் தமிழ் சொல்.. அவ்வளவுதான்..
இதில் சுத்தமனம்; அதில் உள்ள பேரறிவு என்ற பிரபஞ்ச ஆற்றல்; அந்த ஆற்றலை இயக்க வல்ல கதிர் இயக்கம்; சூடு கனல் என்ற அருவ சக்தியை உருவ சக்தியாக அதாவது சூட்சும சக்தியை தூல சக்தியாக மாற்ற கூடிய ஒரு மன ஊடகம்; இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.. கதி என்பது 'க்' + அதி என அதிக கடவுள் சக்தி என பொருள் கொள்ளும்..கடவுளின் புத்தியுடன் சுற்றும் மூச்சின் மூலம் கதிர் இயக்க செயல் பாடு நடத்தி வாசியால் உண்டான சூடு என்ற கனலை தேகம் முழுமைக்கும் இதமான கனலை தேகம் பயன் படியாக பரவ செய்வது தான்,கதிர் இயக்க கதி என முடிவாக நாம் இப்போது உணர முடிகிறது.. 

No comments:

Post a Comment