Thursday 4 January 2018

அகத்திய பெருமானும் மகரந்த மகரிசியும்

சிவபெருமானும், பார்வதி தேவியும் பூலோக மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக, பூலோகம் வந்திருந்தனர். மறுநாள் இறைவனைச் சனி பகவான் பிடிப்பதற்கான நேரமாக இருந்ததால், சனி பகவானும் அவர்களைப் பின் தொடர்ந்து பூலோகம் வந்திருந்தார்.

இதையறிந்த பார்வதி தேவி சனியிடம், ‘சனி பகவானே! ஏன் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறாய்?’ என்றார்.

உடனே சனி, ‘அன்னையே! நான் இறைவனைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. நாளை காலை ஏழே கால் நாழிகைப் பொழுது மட்டும், அவரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்றார்.

அதைக் கேட்டு கோபமடைந்த பார்வதி தேவி, ‘சனியே! இறைவன் உனக்கு அளித்தப் பணியைச் செய்கிறேன் என்று, அவரையும் பிடித்துத் துன்புறுத்த நினைக்கிறாயே.. நீ செய்வது சரியா?’ என்றார்.

‘தாயே! இறைவன் எனக்கு அளித்த பணிக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருந்து கொண்டிருக்கிறேன். அதே வேளை, இறைவன் எனக்கு உருவாக்கிக் கொடுத்த விதிமுறைகளைப் பின்பற்றியே நான் என் பணியைச் செய்து வருகிறேன். அதில் இறைவன், மக்கள் என்று எந்த வேறுபாடுகளுமில்லை. நீதிக்கு முன்பு அனைவரும் சமம்தானே’ என்றார் சனி பகவான்.

பார்வதி தேவியோ, ‘சனியே! நாளை காலையில் இறைவனை நீ எப்படிப் பிடிக்கிறாய் என்று நான் பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மறுநாள் காலையில் சனி பகவான், சிவபெருமான் இருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அதைக்கண்ட பார்வதி தேவி, இறைவனை அங்கிருந்த அரச மரத்தின் பின்னால் மறைந்து இருக்கச் சொன்னார். இறைவனும் மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அதைக் கண்ட சனி பகவானும் அந்த மரத்தைப் பார்த்தபடி தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

ஏழே கால் நாழிகைப் பொழுது கழிந்தது. அதன் பிறகு பார்வதி தேவி சனி பகவானை பார்த்து, ‘நீ சொன்ன நேரம் முடிந்து விட்டது. இன்று உன்னால் இறைவனைப் பிடிக்க முடியாமல் போய்விட்டதே’ என்றார்.

‘அன்னையே! நான் இறைவனைப் பிடித்திருந்ததால்தான், அவர் அந்த மரத்தின் பின்னால் ஏழே கால் நாழிகைப் பொழுது மறைந்து இருக்க வேண்டியதாயிற்று. இப்போது அந்தநேரம் முடிந்து விட்டது, நான் வருகிறேன்’ என்று சற்றே ஆணவத்துடன் சொன்ன சனி பகவான் அங்கிருந்து திரும்ப நினைத்தார்.

அரச மரத்தின் பின்னால் நின்றிருந்த சிவபெருமான், சனி பகவானின் பேச்சைக் கேட்டுக் கோபம் கொண்டார். பின்னர் மகாமந்திர பைரவராகத் தோன்றி, சனி பகவானைத் தூக்கி, அவரது உடலை இரண்டாகப் பிளந்தார். அதிர்ச்சியடைந்த சனி பகவான், ‘இறைவா! நீங்கள் கொடுத்த பணியைச் செய்த எனக்கு இந்த தண்டனை ஏன்? நான் என் பணியைச் செய்யாவிடில், இந்த உலகத்தில் ஆணவக் காரர்களும், கொடுமைக்காரர்களும் அதிகரித்து விடுவார்கள். நான் அன்னையிடம் ஆணவமாகப் பேசியதை மன்னித்து, என்னை முன்பு போல் பணி செய்திட உதவுங்கள்’ என்றார்.

பார்வதியும் சனி பகவானைத் துன்புறுத்த வேண்டாம் என்று இறைவனை வேண்டினார். இதையடுத்து இரண்டாகப் பிரிந்த சனி பகவானின் உடலை, ஈசன் ஒன்றாக்கினார்.

அப்போது அங்கு வந்த நாரதர், ‘இறைவா! நீங்கள் சனி பகவானை இரண்டாகப் பிளந்த பாவம், தங்களைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட தங்களின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க உருவத்தினை, ஒரே இடத்தில் நேரில் பார்க்க வேண்டும்’ என்றார்.

இறைவனும் அந்த இடத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களையும் காட்சியளிக்கச் செய்தார். அவருடைய பாவம் நீங்கியது. உடனே நாரதர் அவரிடம், ‘பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் காட்சியளித்த இந்த இடத்தில் கோவில் கொண்டு அருள வேண்டும். இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்றாலும், மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த இடத்திற்கு வந்து வழிபட முடியும் என்கிற சிறப்புடன் இத்தலம் இருக்க அருள வேண்டும்’ என்று வேண்டினார். இறைவனும் நாரதர் சொன்னதை ஏற்று, அந்த இடத்தில் கோவில் கொண்டார்.

இத்தலத்தின் பெருமையை அறிந்த அகத்திய முனிவர், இங்குள்ள சிவபெருமானை வழிபட வந்து கொண்டிருந்தார். ஆனால் அகத்தியருக்கு இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டிய நிலை இருந்ததால், அவர் அங்கு வருவதை சிவபெருமான் தடுக்க நினைத்தார்.

மகரந்த மகரிஷியை அழைத்த ஈசன், அகத்தியர் அந்த இடத்திற்கு வந்து விடாமல் தடுக்கச் சொன்னார். அந்த மகரிஷியும், அகத்தியர் வந்து கொண்டிருந்த வழியில் மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து நின்றார். தான் செல்லும் வழியில் திடீரென்று பூக்களாக இருப்பது ஏன்? என்று சிறிது நேரம் கண்களை மூடித் தியானித்தார்.

அப்போது வழியை மறைத்துக் கொண்டிருப்பது மகரந்த மகரிஷி என்பது தெரிந்தது. உடனே அகத்தியர், ‘மகரந்த மகரிஷியே! உடனடியாக இந்த இடத்தை விட்டு அகன்று, இறைவனை வழிபட என்னை அனுமதியுங்கள்’ என்றார். ஆனால், மகரந்த மகரிஷி அகலவில்லை.

இதனைக் கண்டு கோபமடைந்த அகத்தியர், ‘மகரிஷியே! இறைவனை வழிபடச் செல்லும் என்னைத் தடுத்ததால், மலர் போன்ற உன் முகம் சிங்கத்தின் முகம் போன்று மாறட்டும்’ என்று சாபம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, மகரந்த மகரிஷியின் முகம் சிங்க முகமாக மாறிவிட்டது.

தன் நிலையைக் கண்டு வருந்திய மகரிஷி, ‘அகத்திய முனிவரே! நான் வேண்டுமென்று உங்களை வழிமறித்து நிற்கவில்லை. மறுபிறவி இல்லாத வர்கள் மட்டுமே இந்தத் தலத்து இறைவனை வழிபட முடியும். தங்களுக்கு மறுபிறவி ஒன்று இருப்பதால், தங்களை இத்தலத்துக்கு வரமுடியாதபடி செய்ய, இறைவன் பணித்தார். அதனால்தான் இது நிகழ்ந்தது’ என்றார்.

இதனால் கோபம் குறைந்த அகத்தியர், ‘மகரந்த மகரிஷியே! இந்த உலகில் யாரும் வழிபாடு செய்யாத பொருட்களைக் கொண்டு, இத்தலத்து இறைவனை வழிபட்டால் நான் கொடுத்த சாபம் நீங்கி, உனக்குப் பழைய முகம் கிடைக்கும்’ என்று கூறிவிட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றார்.

விமோசனம்


அகத்தியரின் சாபத்தால் சிங்க முகம் பெற்ற மகரந்த மகரிஷி, தினமும் அங்குள்ள சிவலிங்கத்திற்கு புதிய வகை மலரைக் கொண்டு வழிபாடு செய்தார். இன்று ஒரு வகை மலரைக் கொண்டு வழிபாடு செய்தால், மறுநாள் வேறு ஒரு மலரைக் கொண்டு வழிபடுவார். இந்த வழிபாடு ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்தது.

ஒரு நாள் மகரந்த மகரிஷி, சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை அறுந்து, லிங்கத்தின் மீது விழுந்தது. இதையடுத்து ஜோதி வடிவில் இறைவன் அவருக்கு காட்சியளித்தார்.

இதனைக் கண்டு மகிழ்ந்த மகரிஷி, ஒருமுக ருத்ராட்சம் முதல் பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை அந்த சிவலிங்கத்தின் முன்பாகச் சமர்ப்பித்து வழிபாடு செய்யத் தொடங்கினார். பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சத்தைக் கொண்டு வழிபட்டபோது, சிவபெருமான் மகரிஷிக்கு காட்சி தந்தார். அவரது முகம் முன்பு போலவே பூ முகமாக மாறும் என்று அருளாசி கூறினார். இறைவன் அருளியது போலவே மகரிஷியின் முகம் மாறியது.

அப்போது சிவபெருமான், ‘மகரிஷியே! அகத்தியர் அளித்த சாபத்தால் மட்டும், உனக்கு சிங்க முகம் வரவில்லை. கடந்த பிறவியில் வேடனாகப் பிறந்த நீ, பல விலங்குகளை வேட்டையாடி கொன்று குவித்தாய். உனது பாவத்திற்குத் தண்டனையாகத்தான் அகத்தியர் உனக்குச் சாபமளித்து உனது முகத்தைச் சிங்க முகமாக மாற்றும் நிலை ஏற்பட்டது. நீ முற்பிறவியில் கொன்ற விலங்குகள் அனைத்தும், இப்பிறவியில் பூக்களாகத் தோன்றி, உன் மூலம் என்னை வந்தடைந்தன. இந்தக் கோவிலில் இருந்த சிவலிங்கத்தில் பட்ட பூக்கள் அனைத்திற்கும், மறுபிறவி இல்லாமல் போனது. உனக்கும் மறுபிறவி கிடையாது’ என்றார்.

மறுபிறவியில்லாத நிலைக்குத் தன்னை உயர்த்திய இறைவனுக்கும், அகத்திய முனிவருக்கும் நன்றி தெரிவித்தார் மகரந்த மகரிஷி.

சில வேளைகளில், பெரியவர்கள் சொல்லிய செயலைச் செய்யும் போது, அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களால், நமக்குத் தேவையில்லாத துன்பங்கள் வந்து சேரலாம். அந்தத் துன்பங்களை எல்லாம் மறந்து, இறைவன் மீது பக்தி கொண்டால், துன்பங்கள் சிறியதாகி, அதிகமான பலனை அடையலாம் என்பதையே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது. 

பிறவா வரம் தரும் கோவில்

மகரந்த மகரிஷி சாப விமோசனம் பெற்ற கோவில், கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் என்னும் இடத்தில் உள்ளது. இத்தலத்தில் இறைவனுடன், வேதாந்த நாயகி என்னும் பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார். மீண்டும் பிறவாத நிலையை அடைவதே ஒவ்வொரு உயிர்களின் குறிக்கோள் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. 

அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்தக் கோவில் முழுவதும், ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. இங்கு இருக்கும் அனைத்து தெய்வங்களும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். மறுபிறவி இல்லாத நிலையை கொண்டவர்கள் மட்டுமே இந்த ஆலயத்திற்கு வர முடியும் என்பது இதன் தனிச் சிறப்பாகும். கோவிலுக்கு வருபவர்களுக்கு வில்வ இலை பிரசாதமும், ருத்ராட்சமும் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment