Friday, 5 January 2018

அகத்தியரும் சபரி மலையும்

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
‘அம்பு விடுகிறேன். அது குத்திட்டு நிற்கும் இடத்தைத் தாருங்கள்’ என்று தந்தையிடம் மணிகண்டன் கேட்டு, அம்பு விட்டான். அந்த அம்பு காற்றைக் கிழித்துக் கொண்டு, விருட்டென்று பறந்து, ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அந்த இடத்தை வழங்கினான் மன்னன். அந்த இடத்தில் இன்றளவும் தவயோகியாக இருந்து அருள்பாலிக்கிறான் மணிகண்ட சுவாமி. அதுவே... சபரிமலை!
எல்லோரும் அம்பைப் பார்த்துவிட்டு வியந்து நின்றார்கள். மறுகணம் திரும்பிப்பார்க்க, மணிகண்டனைக் காணோம். அங்கே தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா தொடங்கி தேவர்பெருமக்களும் அகத்திய மாமுனிவரும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அம்பு நின்ற இடத்துக்குச் சென்றார்கள்.
மணிகண்டனின் ஆலயம் அங்கே எழுப்பவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கோயில் எப்படி இருக்கவேண்டும் என அகத்திய மாமுனி சொல்லச் சொல்ல, எல்லோரும் கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள். அந்த மலையே பீடமெனக் கொண்டு, சபரிபீடமெனக் கொண்டு, சபரிகிரிவாசனான ஐயன் ஐயப்ப சுவாமிக்குக் கோயில் கட்டும் பணிகள் மளமளவென நடந்தேறின.
கோயிலின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்த அகத்திய முனிவரின் பணி, மறக்கவே முடியாதது. இன்றைக்கு சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பக்தர்கள் அகத்திய முனிவரை மனதார வணங்கி நமஸ்கரியுங்கள். அவரின் பேரருளையும் பெறுங்கள். சாந்நித்தியம் மிகுந்த சபரிமலையின் ஒவ்வொரு கல்லும் அகத்தியர் பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டவை என்பதை மனதில் நினைத்தபடி, சபரிமலையை வலம் வந்து பாருங்கள். அகத்தியரின் சூட்சும சக்தி இன்றைக்கும் அங்கே, அந்த ஐயப்ப மலையில், வியாபித்திருப்பதாக ஐதீகம்!
கனஜோராக சபரிமலை ஆலயம் அழகுற வடிவமைக்கப்பட்டது. பந்தள ராஜா நெகிழ்ந்து போனான். மகாராணி, ‘என் மைந்தன் கடவுள். அவன் அமர்ந்து ஆட்சி செய்யும் பீடம் இதுதானா... இதுதானா...’ என்று கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்தாள். கல்லையும் தூண்களையும் திருவிக்கிரகங்களையும் தடவித் தடவிப் பார்த்தாள். கண்ணில் ஒற்றிக் கொண்டாள். ‘கடவுளே... என் மணிகண்டா. என் மணிகண்ட சுவாமியே...’ என்று கண்ணீர் மல்க, சந்தோஷத்துடன் அரற்றியபடி இருந்தாள்.
அகத்தியர் கேட்கக் கேட்க... பந்தள ராஜா எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தான். எல்லாப் பணிகளும் நிறைவுற்ற வேளையில்... பதினெட்டுப் படிகளை அமைக்கச் சொன்னார் அகத்தியர்.
அதென்ன பதினெட்டுப் படிகள். பந்தள மகாராஜா உட்பட பலரும் வியப்புடன் கேட்டார்கள்.
அகத்தியர் விளக்கம் சொன்னார்.
அதாவது, பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தத்துவங்களும் கொண்டிருக்கின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்கள், காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யங்கள், திதிஷை, டம்பம் எனும் அஷ்ட ராகங்கள், சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள், வித்யை, அவித்யை என பதினெட்டு தத்துவங்களும் பதினெட்டுப் படிகளாக அமையட்டும் என அருளியதாகச் சொல்வர்.
எல்லோரும் நெக்குருகிப் போனார்கள். அகத்திய முனிவரை வணங்கிப் போற்றினார்கள். படிகள் அமைக்கும் பணிக்கு உத்தரவிட்டான் மன்னன்.
அடுத்து, கருவறையில், விக்கிரகம் அமைப்பது தொடர்பாகப் பேச்சு வந்தது. எல்லோரும் அகத்தியரைப் பார்த்தார்கள்.
‘எல்லோரும் என்னைப் பார்த்தால்...? உங்களுக்குத் தெரியாதா? இந்த தேசத்தையே உருவாக்கியது பரசுராமர். அவரே இந்த மலையின் கருவறையில் அமரவிருக்கும் ஐயன் ஐயப்ப சுவாமியின் விக்கிரகத் திருமேனியையும் வழங்கி அருள்வார்’ என்றார். எல்லோரும் இன்னும் வியப்பில் திளைத்தார்கள். கண்ணுக்கு முன்னே மாபெரும் சக்தியுடன் ஓர் ஆலயம் திகழப்போகிறது, அது காலங்கள் கடந்தும் யுகங்களே கடந்தும் கூட பரிபாலனம் செய்யப் போகிறது என்று பெருமையுடன் பேசிக் கொண்டார்கள்.
பம்பா நதி. அங்கே சில்லென்று வீசும் காற்று. அந்த நதிக்கரையில் இருந்து மலை ஏறிச் சென்றால், பதினெட்டுப் படிகள். அந்தப் பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தத்துவங்களை உள்ளடக்கியதாக இருக்க... அந்தப் படிகளைக் கடந்து சென்றால், கருவறையில், ஐயப்ப சுவாமியின் விக்கிரகம். பரசுராமர் வடிவமைத்துத் தருகிற விக்கிரகம் என பந்தள ராஜா நினைத்து நினைத்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
இரண்டு கால்களையும் குத்திட்டு உட்கார்ந்திருக்கும் நிலை. யோகபட்டத்துடன்... பந்தனம் செய்தபடி... தத்வமஸி எனும் முத்திரையைக் காட்டியபடி ஐயப்ப சுவாமியின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அருளினார் பரசுராமர்.
அது மார்கழி மாதம். சொல்லப் போனால் மார்கழி மாதம் முடியும் தருணம். மார்கழியின் கடைசிநாளும் வந்தது. கோயில் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டிருந்தன. மறுநாள்... மகா சங்கராந்தி. தை மாதப் பிறப்பு. கிருஷ்ண பட்ச நாளில், பஞ்சமி திதியில், உத்திர நட்சத்திரம் கூடிய அற்புதமான, மனோரதமான வேளையில், தர்மசாஸ்தா பிரதிஷ்டை விமரிசையாக நடைபெற்றது. ஆமாம்... ஐயப்ப சுவாமிக்கு தர்மசாஸ்தா என்றுதான் பெயர். இது ஆதிகாலம் தொட்டே இருந்த திருநாமம். ஆகவே தர்மசாஸ்தா பீடத்தில்... சபரி பீடத்தில் அமர்ந்து கொண்டார்.
அன்று அந்த பீடத்தில் அமர்ந்தவர்... இன்றளவும் நம் மனதில் பீடமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறார். ஐயன் ஐயப்பனாக, மணிகண்ட சுவாமியாக, தர்மசாஸ்தாவாக, சபரிகிரிவாசனாக..!
இனிய பக்தர்களே! அன்பினிய ஐயப்ப சாமிமார்களே! மலையேறும் போது ஆர்வத்துடன் வேகமாகச் செல்லுங்கள். பரவாயில்லை. சபரிமலையில் ஏறியதும் கொஞ்சம் ஒவ்வொரு இடங்களையும் கூர்ந்து பாருங்கள். ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த ஐயப்ப சாந்நித்திய தலத்தை இன்னும் உணர்ந்து, சிலிர்ப்பீர்கள்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்

No comments:

Post a Comment