Friday, 19 January 2018

ஸ்ரீ சித்திரகுப்த தேவர்

ஸ்ரீ சித்திரகுப்த தேவர்

போகர் :- “ஆசானே! சித்திரகுப்த நாதர் ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவடிகளில் சமர்ப்பிப்பது யாதோ?”

அகத்தியர் :- “பாலினன் என்னும் திருப்பெயரைப் பூண்ட சித்ரகுப்த தேவர் சிருஷ்டியைக் கூட்டுவிக்கும் பிரம்மாக்களின் கர்ம பரிபாலனத்தையும், பிரம்ம குருக்களின் ஆயுளையும் ஸ்ரீ தேவியின் ஆக்ஞைப்படி நிர்னயிப்பவர். இவர் சாதரண தேவஸ்வரூபர் அல்லர். பிரம்ம குரு லோகங்களின் அமைப்பைப் பரிபாலிப்பவர். இவருடைய தரிசனம் காணக்கிட்டாதது. இவருடைய கிரீடம் வெறும் தலைப்பாகை மட்டுமன்று. கோடிக்கணக்கான ஜீவன்களின் தலைவிதிகளை நிர்னயிக்கும் பிரம்ம குருமார்களின் கர்ம வினைகளைத் தொகுத்து வரையறுக்கும் அற்புதமான இறை சிருஷ்டியாகும்.

ஒவ்வொரு விநாடியிலும் என்னிறந்த ஜீவன்களின் கர்ம வினைகள் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றை இம்மியும் பிசகாது அணுவளவும் குறையின்றிச் சீராகப் பகுப்பது இறைவனின் அற்புதப் படைப்பால்தான் முடியும்.

ஆத்ம விசார மூர்த்தி
ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும் முன் தன்னுடைய அன்றைய செயல்களை உன்மையான மனச்சாட்சியுடன் நினைவுகூர்ந்து அவற்றை இந்த பாலினன் என்ற சித்ர குப்த தேவரிடம் சமர்ப்பித்து அன்றைய தவறுகளுக்கு மனம் வருந்தி அந்நாளில் நற்செயல்களைச் செய்ய வாய்ப்புத் தந்த பித்ரு தேவர்களுக்கு நன்றி செலுத்துவதேநான் யாரென்றஉண்மையான ஆத்ம விசாரத்தின் துவக்கமாகும். ஸ்ரீ சித்ர குப்த தேவர் வெறும் கர்ம கணக்கு எழுதுபவர் என மக்கள் கருதுகின்றனர். அது தவறு. மனிதனின் ஆத்ம விசாரத்திற்கு வித்திடுபவர் இவரே.”

போகர் :- “ஆத்ம விசாரத்திற்கு வழி வகுக்கும் அருளைச் சித்ர குப்தர் எவ்வாறு பெற்றார் குருதேவா?”

ஸ்ரீ கிருஷ்ணன் திருமேனி கண்ட கிரீடம்

அகத்தியர் :- “சொல்கிறேன் போகா! ஒருமுறை சித்ரகுப்தர் பலகோடி ஜீவன்களின் தலைவிதிக்குரித்தான கர்ம வினைகளைக் கணக்கெழுத, அவற்றுள் பெருமளவு தீவினைகளாக இருப்பது குறித்து மனம் வருந்தி ஸ்ரீ பாலினன் தம் தலையில் குட்டிக் கொள்ள அவருக்கு தீராத தலைவலி வந்து விட்டது. இதனால் அவர் மேலும் பணிபுரிய இயலாது திகைத்திட, கர்மங்களின் தேக்கத்தால் சர்வ லோகங்களும் ஸ்தம்பித்தன. சித்ரகுப்தர் பதறி எழுந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டிட, அவர் நம் இடைகச்சையையே ஸ்ரீ பாலினன் சித்ரகுப்தனின் தலைக் கிரீடமாக்கிட தீராத தலவலியும் நின்றது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய தலைப் பாகையே ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவுருவப் படத்தில் ஸ்ரீ பாலினன் சித்ரகுப்த தேவரின் சிரசில் மிளிர்வதாகும். காணக் கிடைக்காத கிரீடம் இது.

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து
தீராத ஒற்றை தலைவலியால் அவதியுறுவோர்க்கு இந்த சித்ரகுப்தரின் தரிசனமும், தியானமும், நாமஸ்மரணமும் விரைவில் பலனளிக்கும். எனவே இத்தகைய நோயுடையோர் தலைக்கு எண்ணெய் கூட இல்லாது வாடும் ஏழைகட்குச் சீப்பு, எண்ணெய் தானமளித்து இந்தப் பாலினன் சித்ரகுப்த தேவரைத் துதி செய்ய வேண்டும்.”

புலிப்பாணி :- “ஞான குருவே! ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ பாலினன் சித்ர குப்த தேவருக்கு தரிசனம் அளித்தாரா?”

அகத்தியர் :- சித்ரகுப்த தேவர் வேண்டியும் அவருக்கு விஸ்வரூப தரிசனம் அளிக்காத ஸ்ரீ கிருஷ்ணன், அவருக்குக் குழலூதும் கிருஷ்ணனாகத்தான் காட்சியளித்தார். அவர் விஸ்வரூப தரிசனம் அளிக்காததற்குப் பல காரணங்கள் உண்டு!”

போகர் :- “கலியுகத்தில குழலூதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வழிபாட்டிற்கு வைத்தால் செல்வம் ஊதிய காற்றுபோல் மறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறதே குருதேவா!”

அகத்தியர் :- “வீடுகளில் குழலூதும் கிருஷ்ணன் விக்ரகத்தையோ, படத்தையோ வைத்து வழிபடுவதால் எவ்வித தவறும் இல்லை. குழலூதும் கிருஷ்ணனாக காட்சியளித்த கண்ணபிரான் சித்ரகுப்த தேவரிடம்இன்றிலிருந்து உன் நாமஸ்மரணமும், வழிபாடும் மக்களுக்கு ஆத்ம விசாரத்தை வளர்ப்பதாக!” என்று வரங் கொடுத்தார். மேலும், மக்களின் நித்ய கர்மங்களை நீ தொகுப்பதால் உன்னை எண்ணுபவர்களுக்கு தம் குறைகளை நிவர்த்தி செய்யும் பக்குவம் கிட்டி தன்னை முதலில் அறிந்து, தானே பிற அனைத்தும் என்ற உயரிய மனோபாவமும் கிட்டும்என்று வரமருளினான்.
எனவே குழலூதும் கிருஷ்ணனை வழிப்பட்டால் ஸ்ரீ சித்ரகுப்தனின் அருளும் கூடுவதால், பிற கடுமையான தியான முறைகளை விட ஆத்ம விசாரம் எளிதில் கைகூடும். இது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரமாகும். ஸ்ரீ இரமண மகரிஷியின் பழைய ஆஸ்ரமத்தில் குழலூதும் கிருஷ்ணன் படம் ஒன்று அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஆனால் அதன் ஆத்ம விசார ஆன்மீக ரகசியத்தை இன்றேனும் பக்தர்கள் புரிந்து கொள்வார்களாக!”

ஸ்ரீ தர்மதேவர்

போகர் :- “சற்குருவே! ஸ்ரீ தர்ம ராஜாவாகிய கால மகா பிரபு ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தாத்பர்யம் என்ன?”

அகத்தியர் :- “அணுவினும் சிறிய கிருமிகள் முதல் பெரிய பிராணிகள், தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின், தேவாதிதேவரின் கால முடிவை இறை நியதிப்படி பரிபாலிப்பவரே ஸ்ரீ எமதர்மராஜாவாகிய ஸ்ரீ கால மகாபிரபு
பூலோகத்தில் மக்கள்எமபயம் நீங்கமந்திரங்களைச் சொல்லி வழிபாடுகளையும் நிகழ்த்துகின்றனர். இந்த மனோநிலையைச் சற்று விருத்தி செய்து, எமபயம் நீங்குவதைவிட தங்களுடைய பூஜைகளும், ம்ருத்யுஞ்ஜய ஹோமங்களும், தான தருமங்களும், இறையருளால் ஆயுளை விருத்தி செய்கின்றன என உணருவது சத்தியமானதாகும்.

ஸ்ரீ கால மகாபிரபு தம்முடைய இறைப்பணியை அவரவர் கர்ம வினைகளுக்கேற்பச் செவ்வனே செய்து வருகிறார். இல்லாவிடில் பிராணிகளும், தாவரங்களும் மக்களோடு மக்களாய்ப் பெருகி உலகமே இட நெருக்கடியில் ஸ்தம்பித்து விடும்.

மரண பயம் வேண்டாம்
மனிதர்கள் இன்னமும் மரணம் என்பதைத் தாங்க முடியாத துன்பமாகத்தான் கருதுகின்றார்கள். மரணத்திற்குப்பின் வாழ்வு என்பதை உணர்ந்தாலும் மனித மனம் அதன் நிலைகளை உணர்வதில்லை. ஸ்ரீ எமதர்மராஜா ஓர் உயிரை ஒரு தேகத்தில் இருந்து பிரித்து மற்றொரு தேகத்திற்கு எடுத்து செல்லும் அதி அற்புதமான இறைப்பணி புரிகிறார்.

எனவே எமனைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

அவரவர் விதி நிர்ணயத்திற்கேற்ப மரணத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு எமபயம் இராது. தியானத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீ ரமண மகரிஷிபோல தினந்தோறும் தன்னுடய மரணத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டால் அது அற்புதமான தியானமாக மலர்ந்துஆத்மா அழிவற்றது. ஆத்மா குடியிருக்கும் கோயில்களே தேக சரீரங்கள்என்பதை அறிவர். உண்மையில் தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகையே.
ஸ்ரீ ஆயுர்தேவி திருஉருவ படத்தில் பிரசன்னமாகியிருப்பவர்கள் ஸ்ரீ சுதர்மனன் என்ற ஸ்ரீ காலமகாப்பிரபுவும் அவர் பத்தினி தெய்வமாகிய ஸ்ரீ சுதர்மிணியும் ஆவர்.

சுமங்கலி பாக்கியம்
கலியுகத்தில் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க்க சுமங்கலியாக வாழ விரும்புகிறாள். அவளுடைய பூஜை முறைகளும், கற்புத் தன்மையும், பெரியோர்க்கு பணிவிடை செய்தலும், அவள் கணவனின் ஆயுளை விருத்தியடையச் செய்யும். இத்தகைய குணங்களை உடைய பெண்மணிகளுக்கு மாங்கல்யப் பிராப்தத்தையும், சுமங்கலித் தன்மையையும் இறையருளால் மேற்கண்ட ஸ்ரீ சுதர்மிணி சமேத ஸ்ரீ காலமகா பிரபுவே மனமுவந்து அருளி அருள்பாலிக்கின்றனர்.

போகர் :- “அகால மிருத்யுதோஷ நிவர்த்தி பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!”

விபத்துக்கள், தோஷங்கள் நீங்க


அகத்தியர் :- “சில குடும்பங்களில் பித்ரு சாபங்களாலும் பித்ரு காரியங்களைச் சரிவர செய்யாததாலும் ஏற்படுகின்ற அகால ம்ருத்யு தோஷத்தால் நேரிடும் இள வயது மரணங்கள், திடீர் மரணங்கள், விபத்துக்கள், இளம் விதவைக் கோலங்கள், சிசு மரணங்கள் போன்ற பெருந் துன்பங்களை ஸ்ரீ கால மகா பிரபு நீக்கி, ஸ்ரீ ஆயுர்தேவி அனுக்கிரகத்தால் நல்வழி காட்டுகின்றார்.

No comments:

Post a Comment