Thursday, 4 January 2018

அகத்தியப் பெருமானின் திருவிளையாடல் உண்மை சம்பவம்

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! ஒரு அகத்தியர் அடியவருக்கு கிடைத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அகத்தியப் பெருமானின் பெருங்கருணையை நாமும் ருசிப்போம்.]

தேடுங்கள்! தேடி அலையவே வாழ்க்கை. அப்படி அலைகிற பொழுது நிறையவே அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்களே போதும், ஒரு நொடியில் வாழ்க்கையை சரியான பாதையில் திருப்பிவிட. வருடங்கள் தேவை  இல்லை. தேடும் பாதையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புண்ணிய ஆத்மா, ஏன் சித்தரே நம்மை வரவேற்க நின்று கொண்டிருப்பார். எப்பொழுதும், மனம் அமைதியாக இருந்தால், நிகழ்காலத்தில் தெளிவாக இருந்தால், இவை அனைத்தையும் உணரலாம், உணர்ந்து வாழலாம். அப்படி இருந்த ஒரு நாழிகையில், அடியேனுக்கு கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர் வழி என்று ஒன்று இருக்கிறது, அது தர்மத்தின் வழி என்று கேள்விப்பட்டு, தொடக்க வகுப்பில் சேர்ந்த காலம். அந்த பாதையில் நடக்க தொடங்கிய பொழுதே, "கவனம்" என்பது தானாக என்னுள் முளைத்தது. பொறுமை, நடப்பதை சலனமின்றி பார்ப்பது, இவை எல்லாம் தெரிவிக்கப்பட்டது. எந்த சித்தரை வணங்குவது என்று தெரியாத ஒரு மனநிலையில் இருக்கும் பொழுது, சேர்ந்த நண்பர்கள் அகத்தியப் பெருமானை காட்டினார்கள். இவரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் கூறியது எதுவெல்லாம்? நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூட தெரியாத நிலையில் வலைப்பூவில் இவரை பற்றி நிறையவே தகவல் கிடைத்தது. கிடைத்த தகவல்களை எல்லாம் வாழ்க்கையில் அது போலவே நடைமுறைப்படுத்த தொடங்கினேன். விரைவில் நல்ல பலன்கள் கிடைத்தது. என்னை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியது. இது என் தேடலை வேகப்படுத்தியது என்பதே உண்மை. தினமும், ஒவ்வொரு நொடியும் அவரை நினைத்து பிரார்த்தனைதான்.

நாம்தான் மனிதராயிற்றே. கர்ம விதியின்படி நோய்க்கு உட்பட வேண்டிய ஒரு காலமும் வந்தது. அது ஒரு குளிர்காலம்.  பிறவி முதலே, மூச்சு முட்டு, மார்பில் சளி என்று சிரமப்பட்டுக் கொண்டிருந்த என்னை, அந்த குளிர்காலம் புரட்டிப் போட்டது. இந்த பாதையில் நடக்கத் தொடங்கியவுடன், மருந்து என ஒன்றை எடுத்துக் கொள்வதை அறவே தவிர்த்துவிட்டேன். எதுவாயினும், உடல் இயற்கையாக உள்சேர்ந்த கழிவுகளை வெளியேற்றிக் கொள்ளவேண்டும் என எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஒரு வாரமாயிற்று. மார்பில் சேர்ந்த சளி குறைவதாக தெரியவில்லை. மேலும் மேலும் வலுப்பெற்று, இழுவை நிலைக்கு கொண்டு சென்றது. சிரமம் அதிகமாகவே, ஒரு மருத்துவரை அணுகி பரிசோதிக்க, அவர் சளியின் இழுவை வேகத்தை பார்த்து, கோபப்பட்டார், மிக பலமான மருந்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும் என எழுதிக்  கொடுத்தார். சரி! ஒருமுறை நம் தீர்மானத்தை விலக்கி வைத்து, அவர் சொல்படி கேட்போம் என மருந்தினை எடுத்துக் கொண்டேன். ஒன்றும் உதவி செய்யவில்லை. இன்னும் ஒருவாரம் ஆகியும் மார்பு சளி அப்படியேத்தான் இருந்தது. மேலும் வலுவடைந்தது போல் ஒரு உணர்வும்.

சரி! தினமும் அகத்தியர் சித்தரை நினைத்து பிரார்த்தனை செய்கிறோமே. அவரிடமே இதற்கு ஒரு வழியை கேட்போம் என்று நினைத்து அன்றைய தினம் த்யானத்தில் என் பிரார்த்தனையை சமர்பித்தேன்.

"அய்யனே! இரு வாரமாக மார்பு சளி, மூச்சு முட்டல் போன்றவை ரொம்பவே படுத்துகிறது. மருத்துவ சிகிர்ச்சை எடுத்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஏதேனும் ஒரு வழி காட்டுங்களேன். இந்த மார்பு சளி இழுவையிலிருந்து விடுதலை தரக்கூடாதா?" என பிரார்த்தித்தேன்.

சற்று நேர அமைதி. கண் மூடி, த்யானத்தில் அவர் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

"பெருமாள் கோவிலில், என் சன்னதிக்கு வா! மஞ்சள் மருந்தாக தருகிறேன்" என்று மிக சன்னமாக கூறுவது கேட்டது. கவனம் அசைவின்றி இருந்ததால், சொன்னது அனைத்தும் மனதுள் பதிந்தது.

"சரி! ஏதோ உத்தரவு வந்துவிட்டது. சென்று விட வேண்டியதுதான்." என்று நினைத்து, எந்த பெருமாள் கோவில் என தேடத்தொடங்கினேன். நினைவை துழாவிப் பார்த்து (பெருமாள் கோவிலில், அகஸ்தியர் சன்னதி) என்று உத்தரவு வந்தது நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் திருப்பதிசாரம் பெருமாள் கோவில் தான் என்று உணர்ந்தேன்.

இந்த அகத்தியர் சன்னதியை பற்றி சொல்வதென்றால், அகத்தியர் தனி சன்னதியில் இல்லை. ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், இன்னும் இரு முனிவர்கள் இவர்களுடன் ஆஞ்சநேயருக்கு நேராக நின்று அவர் முகத்தை இவரும், இவர் முகத்தை அவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பொதிகையில் ஸ்தாபிதம் செய்துள்ள அதே முக ரூபத்தை கொண்டுள்ள ஒரு சிலை. இது இருப்பதும், பெருமாள் கோவிலில் ஆனால் உள் மண்டபத்தில்.

அடுத்து வந்த ஞாயிற்று கிழமை, நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு "திருப்பதிசாரம்" கோவிலுக்கு சென்றேன். செல்லும் வரையிலும், வியாதி குணமாகவே இல்லை.

நேராக அகத்தியப் பெருமான் சன்னதிக்கு சென்று சற்று நேரம் அவரையும், மற்ற தெய்வங்களையும் பிரார்த்தித்து நின்றேன்.

"வர சொன்னீர்கள். இந்த கோவில்தான் என்று மனதுள் நினைத்து வந்தாயிற்று. அந்த நினைப்பு சரியா, தவறா என்று தெரியாது. தாங்கள்தான் கனிவு கூர்ந்து அருளவேண்டும்" என விண்ணப்பித்துவிட்டு சற்று நேரம் நின்றேன். சுற்று முற்றும் பார்த்தும், எங்கும் மஞ்சளின் சாந்நித்தியம் கிடைக்கவில்லை. காற்றில் கூட மஞ்சளின் வாசனை தெரியவில்லை.

"என்ன இப்படி?" என்று நினைத்து, "சரி! பெருமாளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வரலாம். அதன் பின் மஞ்சள் கிடைக்கும்" என்று அவர் சன்னதியை நோக்கி சென்றேன்.

மிகுந்த அமைதி. பூசாரியும் இரு பக்தர்களும்தான் இருந்தார்கள். சன்னதிக்கு அருகில் சென்று பெருமாளையும், தாயாரையும் பிரார்த்தித்து சற்று நேரம் அங்கேயே நின்றேன். எதோ ஒன்று உந்த, "பெருமாளே, உங்கள் பிரியப்பட்டவர் வரச்சொன்னார். வந்துவிட்டது இது. ஏனோ தெரியவில்லை, இங்கு அவர் தருவதாக சொன்ன மருந்து கிடைக்குமா? எங்கும் சிறு வாசனை கூட இல்லையே! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறேனா? புரிய வையுங்களேன்" என வேண்டிக்கொண்டேன்.

ஒரு ஐந்து நிமிடம் அவர் முன் நின்று பிரார்த்தித்து விட்டு, மறுபடியும் ராமர் அகத்தியர் சன்னதி முன் வந்து நின்றேன். கண் மூடி த்யானத்தில் அகத்தியரை வேண்டி நின்றேன்.

சற்று நேரத்தில், மஞ்சள் வாசனை மூக்கினுள் நுழைந்து, என் தியானத்தை கலைத்தது.

"என்ன! ஆச்சரியம்! மஞ்சள் பொடி வாசனை வருகிறதே! எங்கிருந்து?" என கண் திறந்து அகத்தியரை பார்க்க,

எனக்கு பின்னாலிருந்து "ஹ்ம்ம்" என குரல் வந்தது.

திரும்பி பார்த்த பொழுது, நாலடி உயரத்தில் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு, அவர் கையை பார்க்க, அங்கே ஒரு வெள்ளிக்கிண்ணத்தில் தூய மஞ்சள் பொடி, ஒரு சிறு ஸ்பூன். நான், அவரின் முகத்தை தீர்க்கமாக பார்த்து உள் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் கடைசிவரை, அவர் கண்களை (விழிகளை) பார்க்க விடவில்லை.

"இந்தா! இதை சாப்பிடு!" என்று ஸ்பூன் நிறைய மஞ்சள் பொடியை, இருமுறை, என் நீட்டிய கைகளில் பதித்தார்.

மஞ்சளின் மணம் மூக்கை துளைத்து ஏறியது. அதுவே, அந்த மருந்தின் வீரியத்தை உணர்த்தியது.

அவர் அளித்ததை அப்படியே வாயில் போட்டு முழுங்கிவிட்டு, வேகமாக கைப்பையை திறந்து 50 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் தக்க்ஷிணையாக கொடுத்தேன்.

சிறு புன்னகையுடன் அதை வாங்கியவர், அப்படியே அதைக் கொண்டு போய் பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உண்டியலில் போட்டார். ஒரு முறை பெருமாளை திரும்பி பார்த்து, கண்மூடி த்யானித்துவிட்டு, எதிர் பக்கம் இருக்கும் ஒரு சன்னதியை நோக்கி சென்றார்.

அதே இடத்தில் சிலைபோல் நின்று மொண்டிருந்த நான், நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு திடீரென அவரை தொடரவேண்டும் என ஆவல் உந்தவே, வேக வேகமாக அகத்தியப் பெருமானுக்கு அவர் சன்னதியில் நின்று நன்றி கூறிவிட்டு, அவர் சென்ற வழியில் நடக்கத்தொடங்க, "பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து போ" என யாரோ சொல்வதுபோல் உணர்ந்தேன்.

பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து வரும்முன் அவர் போய்விட்டாலோ என்று எண்ணம் வந்தது. "சரி! சொல்லக்கேட்டுவிட்டோம்! அதன் படியே நடப்போம்" என நினைத்து, பெருமாளை ப்ரதக்ஷிணம் செய்து வந்து பார்த்தால், அவர் எங்குமே இல்லை.

மிக மிக அமைதியாக முடிந்தவரை அனைத்து இடங்களிலும் தேடியும், அவரை பார்க்க வில்லை.

கூட வந்த நண்பருக்கும் மஞ்சள்பொடி சாப்பிடக் கிடைத்தது. அவரும் வேக வேகமாக கோவிலுக்கு வெளியே தெரு முனைவரை சென்று தேடியும், அவரை பார்க்க முடியவில்லை.

"என்ன செய்யலாம்?" என்ற  பொழுது,

"வந்த வேலை முடிந்துவிட்டது! கிளம்புவோம் வா!" என கூறி அனைவருக்கும் நமஸ்காரத்தை தெரிவித்து ஊருக்கு கிளம்பினோம்.

எப்படி சொல்ல? ஊர் வந்து சேர்வதற்குள்ளாகவே, மூச்சுமுட்டு விலகிப் போனது. மறுநாள் மார்பில் கட்டியிருந்த சளி, எங்கு போனது என்று தெரியவில்லை.

அகத்தியப் பெருமானின் அருளுக்கு ஈடிணை இவ்வுலகில் எதுவுமே இல்லை. சரி! மஞ்சள் பொடியை மருந்தாக கொண்டு தந்தது யார்? அகத்தியரா? இல்லை அவர் சிஷ்ய கோடிகளில் ஒருவரா? இன்றும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

இதில், இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால்,

பிறிதொரு முறை,  வேறு ஒருவருக்காக, அந்த கோவிலுக்கு சென்று, அர்ச்சகரிடம் "பெருமாளுக்கு நிவேதனம் செய்த மஞ்சள்பொடி கிடைக்குமா?" என்றிட, அவர்,

"இந்த கோவில்ல அப்படி பிரசாதம் எல்லாம் கிடையாது. சந்தனமும், துளசியும்தான் கொடுப்போம். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தம் கூட இந்த கோவில்ல கொடுக்கும் முறை இல்லை" என்று விரட்டிவிட்டார். பழக்கமே இல்லாத இடத்தில் வந்து, அடியவருக்காக மருந்தை அளித்த அகத்தியரை, என்னவென்று சொல்வது. இல்லை! அர்ச்சகரிடம் போனமுறை இப்படி நடந்ததே என்று கூறவா முடியும்?

அகத்தியப் பெருமானின் இந்த திருவிளையாடலை என்னவென்று சொல்வது. அவர், தன் சேய்களை மிகுந்த கவனத்துடன், எதை செய்யவேண்டுமோ, அதை செய்து, காத்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ! 

அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment