Saturday, 6 January 2018

அகத்தியரிடம் வாசி யோகம் பற்றி கேள்வி பதில் உரையாடல்.

    முதற்கேள்வி: அகத்தீஸ்வராய நமஹ! இந்த அருட் குடிலை, நாங்கள் தஞ்சாவூரிலே நீண்டகாலமாக நாடி வருகிறோம். இந்த நாடி வருவதினுடைய நோக்கம் என்ன? ஒன்று ஞான வழி அடையவேண்டும். இரண்டாவது குடும்பத்திலே உள்ள சில சச்சரவுகள், துயரங்கள் நீங்க வேண்டும். நோய்கள் நீங்கவேண்டும். இவ்வாறான கார்யங்களுக்காக இந்த ஜீவநாடியை நோக்கி நாடி வருகிறோம், மற்ற இடங்களிலே ஓடி ஓடி களைத்து, உண்மை இல்லை, பொய்யை கண்டோம், துயரம் கண்டோம், துயரம் நீங்கவில்லை என்று, இந்த ஜீவநாடியை நோக்கி வருகின்றோம். இந்த வருகின்ற வேளையிலேயே, அய்யா அநேக வகையான நன்மைகளை, எனக்கும் மற்றவர்களுக்கும் செய்து வந்தாலும், இன்னும் சில சூட்சுமமான விஷயங்களை கற்றுக்கொள்ள, அதை நானும் முயற்சி செய்யவில்லை, அய்யாவும் கொடுத்தபாடில்லை. சில யோகா, வாசி, மூச்சை அடக்கினால், வாசி யோகங்களை, ப்ராணா யோகத்தையோ, அல்லது வாசி யோகத்தையோ, அல்லது லய யோகத்தையோ, ஒரு மனிதன் கற்றுக் கொண்டால், பயிற்சியின் பிரகாரம் எடுத்துக் கொண்டால், நோய்கள் எவ்வளவோ குறைந்து வருகின்றன. இதை சித்தர்களே ஏற்கனவே, பல ஏடுகளில் சொல்லியிருக்கின்றார்கள். "நீ காசிக்கெல்லாம் கால் வலிக்க நடந்து சென்றாலும், வாசிதனை மறந்துவிட்டால் என்ன பயன்"என்று சூட்ச்சுமமாக சொல்லி, இந்த வாசியை கற்றுக்கொள், வாசியை கற்றுக்கொள் என்று சொல்லி, அதற்குரிய ஆசானும் எங்களுக்கு கிடைத்த பாடில்லை, ஏதோ கிடைப்பதை கொண்டு, ஒரு பாதியான முறையிலே செய்யும் பொழுது, ஓரளவுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன, சில நன்மையான விஷயங்கள் தெரிகின்றன. ஆகவே, இந்த அருட்குடிலில், இந்த யோகநிலை கற்றவர்கள், யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து, அல்லது ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து, தஞ்சாவூரில் உள்ள அருட்குடிலிலே, யாரோ ஒருவர் பயிற்சி கொடுத்தால், நோய்கள் நீங்கும், இதற்காக ஆசுபத்திரியிலே போய் கோடிக்கணக்காக சிலவு பண்ணறாங்க, கான்சருக்கு செலவு பண்ணறாங்க, எங்களுக்கு இதை நீக்குவதற்காக, இந்த அருட்குடிலிலே எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுத்து, இந்த யோக பயிற்ச்சியை ஏற்ப்படுத்தி தர முடியுமா என்பது, ஒரு பொதுக் கேள்வி."
    இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம். இஃதொப்ப இன்னவனின் வினாவிற்கு இஃதொப்ப அவன் கூறியதை, அஃதாவது வாசியை, திருப்பி வாசித்தால் அதுவே பிரணாயாமம் அப்பா. வாசியை திருப்பித் திருப்பி வாசி. அதுவே பிரணாயாமம். இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமை நோக்கி வருகின்ற மனிதர்கள் பெரும்பாலும் காணபிம்பப் பேழையிலே எங்களை வைத்து கற்பனா கதையையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே ? அதை எண்ணியும், அஃதொப்ப இயம்புங்கால், நல்விதமாய் காதைகளை வாசித்து, வாசித்து, அந்தக் காதைகளில் உள்ளவற்றைப் போலவே தொடர்ந்து இஃதொப்ப எம் வாழ்க்கையிலும் சித்தர்கள் தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு வருகிறார்கள். தவறொன்றுமில்லை. இருந்தாலும் எப்படி படிப்படியான ஒரு முன்னேற்றமோ அஃதொப்ப, மழலை, தன் மழலை மாறாத நிலையிலே கல்வி கற்க முனையும்பொழுது அந்த மழலையின் மன நிலைக்கு ஏற்ப வித்தைகள் அங்கே பயிற்றுவிக்கப்படுகின்றனவோ, அதைப்போலதான் எம்மிடம் வருகின்ற மனிதர்களின் மனோநிலையை அறிந்துதான் யாங்களும் வாக்கைக் கூறுகிறோம். இஃதொப்ப நிலையிலே, இங்கு வருகின்ற மாந்தர்களின் பூர்வீக பாவங்கள் குறைந்தால் ஒழிய வாசி யோகமோ அல்லது அது தொடர்பான எந்தவொரு சாகா கலையும் சித்திப்பது என்பது மிக, மிக அரிது. இல்லையென்றால் ஆங்காங்கே மனிதர்கள் பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறதே, அங்கு சென்று வேண்டுமானால் கடுகளவு அறிந்து கொள்ளலாம். எனவே பாத்திரத்தை சுத்தி செய்யாமல் பாலைக் காய்ச்சினால் பால் திரிந்து விடுமப்பா. எனவேதான் எம்மைப் பொறுத்தவரை எம்மை நாடி வருகின்ற மனிதனுக்கு யாங்கள் இப்படியெல்லாம் கடுமையான யோகப் பயிற்சியையெல்லாம் கூறாமல் இஃதொப்ப மிக எளிதான பக்தி மார்க்கத்தையும் அதோடு சார்ந்த தர்மத்தையும் கூறுகிறோம். இப்பொழுதும் கூறுகிறோம், இனியும் கூறுவோம், முன்பும் கூறினோம். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் மனம், அவரவர் விதிப்படி செயல்பட்டு விட்டுப் போகட்டும். “ ஆனால் விதி மாற வேண்டும். எங்கள் மதியில் நிம்மதி அமர வேண்டும் “ என்று இந்த ஜீவஅருள் ஓலை முன்னே வருகின்ற மனிதன், 100 –க்கு 100 விழுக்காடு யாம் கூறுவதை உளமார ஏற்றுக் கொண்டால், கட்டாயம் படிப்படியான முன்னேற்றம் இறைவனருளால் கிட்டுமப்பா. எனவே யாமே தக்க காலமறிந்து எம்மிடம் வருகின்ற மாந்தர்களுக்கு ‘ இதுகாலம் இவன் லோக வாழ்க்கையிலே நுகர்ந்து வந்த துன்பங்கள் போதும். இனி யோக வாழ்க்கையை நோக்கி செல்லலாம், என்ற ஒரு நிலை வரும் சமயம், யாமே அது குறித்து போதிப்போம். சிலருக்கு போதித்தும் இருக்கிறோம். ஆனால் போதித்தும் பலன் ஏதுமில்லை. மீண்டும், மீண்டும் லோகாயம் நோக்கிதான் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே பற்றற்ற தன்மை வராத வரை, பெருந்தன்மையான குணம் வளராத வரை, "என் வீடு, என் மக்கள், என் மனைவி, என் ஆஸ்தி"என்கிற எண்ணம் விட்டுப்போகாத வரை வாசியோகம் எவனுக்கும் சித்திக்காதப்பா.

No comments:

Post a Comment