Tuesday 2 January 2018

அகத்தியர் வாத சவுமியம் பாடல் விளக்கம் 1

பாரென்று சொன்ன மொழி பெற்றுக்கொண்டு
பதிவான பொதிகைதனில் வாசமாகி
நேரென்று சௌமிய சாகரத்தைப் பார்த்து
நிச்சயமாய் அஷ்டாங்க யோகம் பார்க்கில்
சாரென்று பொதிகை மலை சார்புக்குள்ளே
சார்ந்திருந்த தபோதனர்கள் தானே கூடி
நேரென்ற பொதிகை தனின் முடிமேற்சென்று
மெஞ்ஞான  சற்குரு வென்று அடிபணிந்தார்



இறைவனின் கட்டளையைப் பெற்ற அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்று அதைத் தனது இருப்பிடமாகக் கொண்டார்.  அங்கிருந்தபடி அவர் சௌமிய சாகரம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டையும் பார்த்தபடி இருந்தார்.  அப்போது தபோதனர்கள் பொதிகையின் உச்சியை அடைந்து அவரை மெய்ஞ்ஞான சற்குருவே என்று அவரை வணங்கி நின்றனர்.

பொதிகை என்பது உலகில் உள்ள மலை என்பதுடன் உடலில் உள்ள ஒரு சக்தி மையத்தையும் குறிக்கிறது.  இதைத்தான் புராணங்கள் சிவனின் கட்டளையை ஏற்று அகத்தியர் தென்புலம் வந்தார் என்று கூறுகின்றன. 

_______________________________________________


தானான சௌமிய சாகரத்தை நன்றாய்த்
தன்மையுடன் ஆதியந்தந் தயவாய்ப் பார்த்து
தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
ஊனான உலகமதில் உலகத்தோர்கள்
உறுதியுள்ள கைலாயம் இடங் கொள்ளாது
மாணாக் கேள் சௌமிய சாகரத்தை நீயும்
மார்க்கமுடன் அந்தி சந்தி மகிழ்ந்து பாரே.


இறைவன் அகத்தியர் இயற்றிய சௌமிய சாகரத்தை நன்றாக தயவுடன் பார்த்து அவர் வடமொழி நூலில் உள்ளவற்றை நன்றாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார் என்றும் அதை உலகோர் படித்தால் அவர்களைத் தாங்க கைலாயத்தாலும் இயலாது என்றும் கூறியதாகவும் அகத்தியர் கருவிகள் பரம் ஆகியவற்றைப் பற்றி நன்றாக விளக்கியுள்ளார் என்றும் கூறியதாகவும் அகத்தியர் நமக்குச் சொல்கிறார்.  மனம், புத்தி, சித்தம், புலன்கள் பொறிகள், நம்மை எல்லைக்குட்படுத்துவையாகிய அனைத்துத் தத்துவங்களும் கருவிகள் எனப்படுகின்றன.   இவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்ட நிலையே பர நிலை. 

இறைவன் அகத்தியரை இந்த நூலை அந்தி சந்தியில் பார்த்து மகிழுமாறும் கூறினார்.  அந்தி என்பது பொதுவாக மலை என்று பொருள்பட்டாலும் அது ஒரு தத்துவத்தின் முடிவையும் குறிக்கும்.  அதேபோல் சந்தி என்பது இரு காலங்கள் சந்திக்கும் நேரம் என்றாலும் அது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும் குறிக்கும்.  உதாரணமாக நமது உடலில் உள்ள சக்கரங்கள் தத்துவங்கள் சந்திக்கும் இடம்.  பிராணனும் அபானனும் சந்திக்கும் இடமும் சந்தி எனப்படுகிறது.

_________________________________________


திரஞ்சொன்ன மகிமையை நான் பெற்றுக்கொண்டு
திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ் சேர்ந்த பூரணமாம் அறிவிலேறி
பாடினேன் சௌமிய சாகரத்தை மைந்தா
சாரமான வாசியில்நான் உறுதி கொண்டு
சந்தோஷமாக ஈராறு நூறும்
வரஞ் சேர்ந்த தவமதனால் பாடி நானும்
மகத்தான வேதியர்முன் வைத்தேன் தானே


சிவனிடமிருந்து உபதேசம் பெற்ற அகத்தியர் அவரிடமிருந்து வடமொழியில் ஒரு நூலையும் பெற்றார்.  அந்த நூலை ஊன்றிப் பார்த்து, பரத்துடன் சேர்ந்த பூரணமாம் பரையான அறிவுநிலையில் நின்று, வாசியை உறுதியாகப் பற்றியபடி வரத்தினால் தான் பெற்ற தவநிலையில் இருந்தபடி ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட இந்த நூலைத் தான் இயற்றினேன் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு இயற்றிய நூலை வேதியனான அறிவுருவாக இருக்கும் இறைவனின் முன் அவர் சமர்ப்பித்தார்

____________________________________________


தானான சதுரகிரி மூலங் கண்டு
தவமான சிவயோகத் திருக்கும்போது
கோனான வேதியரை அடுத்து நானும்
குறியான பூரணத்துக்கு உறுதி கேட்டேன்
ஊனான சத்தி சிவம் என்று பின்னும்
உண்மையுள்ள அகஸ்தியனே வாவாவென்றார்
தேனான வடமொழியைக் கையில் ஈந்து
திருவான பூரணத்தின் திறஞ் சொன்னாரே

அகத்தியர் தான் இந்த நூலை எவ்வாறு தொடங்கினேன் என்று இப்பாடலில் கூறுகிறார்.  அவர் சதுரகிரி எனப்படும் மூலாதாரத்தில் ஆத்ம நிலையில் சிவத்துடன் சேர்ந்த யோக நிலையில் இருக்கும்போது சிவ சக்தியை நெருங்கி பூரணத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டியதாகவும் அப்போது அவர்கள் தன்னை அருகில் வா என்று அழைத்து வடமொழியில் இருந்த ஒரு நூலைக் கையில் கொடுத்து பூரணத்தைப் பற்றிக் கூறினார் என்கிறார்.  சதுரகிரி என்பது நாற்கோணத்தைக் கொண்ட மூலாதாரத்தைக் குறிக்கும்.  நாற்கோணம் நான்கு திசைகளைக் குறிக்கும்.  மூலாதாரத்தில் ஆத்மா துரியாதீத நிலையில் சிவனுடன் சேர்ந்து இருக்கும்.  இந்த நிலையை அகத்தியர் குறிப்பிடுகிறார்.  பூரணம் என்பது பொதுவாக சக்தியைக் குறிக்கும்.  சிவனைக் காரணம் என்றும் சக்தியைப் பூரணம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.  பூரணம் என்பது ஆத்மா சிவநிலையை அடைவதற்கு முந்தைய நிலையையும் குறிக்கலாம்.  ஊனான சத்தி சிவம் என்று பின்னும் என்ற தொடர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறது.  நமது உடல் சக்தி அதில் உயிர்ப்பை அளிப்பது சிவம்.  இதைத்தான் அகத்தியர் இங்கு கூறுகிறார்.  இப்பாடலின் மூலம் சிவன் தனக்கு அளித்த ஒரு வடமொழி நூலின் தமிழ் வடிவமே இந்த சௌமிய சாகரம் என்பது புரிகிறது.

___________________________________________


ஆதிகுரு வேதியர்தன் பாதம் போற்றி
அருள் பெருகும் கேசரியைப் பூசை பண்ணி
சோதிஎனுஞ் சௌமிய சாகரத்தைப் பாட
சுயஞ் சோதி ஆதியந்தஞ் சுழினை காப்பு
நீதியுடன் ஆதார மூலந்தன்னில்
நின்றிலங்கும் பிரணவமாம் அயனார் காப்பு
ஓதியதோர் கலைமகளும் பூமகளுங்காப்பு
உண்மையுள்ள செயமகளுங் காப்புத்தானே


இப்பாடலுடன் அகத்தியர் தனது காப்புச் செய்யுள்களை முடிக்கிறார். முதலில் ஆதிகுரு வேதியர் என்று கூறுவதன்மூலம் அகத்தியர் முன் பாடலில் தான் கூறிய வேதியன் என்பது சிவனே என்று காட்டுகிறார்.  அருள் பெருகும் கேசரி என்பது கேசரி முத்திரையினால் லலாடத்திலிருந்து அமிர்தம் ஊறுவதைக் குறிக்கிறது. கேசரி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு.  கேசரி என்பதை க +சரி என்று பிரித்தால் அது வானத்தில் சஞ்சரிப்பவன் என்று பொருள்படும்.  இவ்வாறு அகத்தியர் பரவெளியில் இருக்கும் பரவுணர்வை இதன் மூலம் குறிப்பிடுகிறார். சுழினை என்பது ஆக்ஞை சக்கரம்.  சில புத்தகங்கள் அதை சுழுமுனை நாடி என்று குறிப்பிடுவது சரியல்ல.  இங்குதான் வெளிப்பாடுடைய உலகம் தோன்றி மறைகிறது.  ஆக்ஞைக்கு மேலே இருக்கும் தத்துவங்கள் சுத்த தத்துவங்கள்.  அதற்குக் கீழே இருப்பவை அசுத்த மாயையால் ஆனவை. ஆக்ஞையில் ஓம்காரம் வெளிப்பாற்ற ஒருமை நிலையில் இருக்கிறது.  மூலாதாரத்தில் பிரம்மா ஓம்காரமாக இருக்கிறார் என்கிறார் அகத்தியர்.  இங்கு பிரணவம் முழு வெளிப்பாடுடன் இருக்கிறது.  இதனை அடுத்து அகத்தியர் சக்திகளான சரஸ்வதி, லட்சுமி, வெற்றி மகள் ஆகியோரை இந்த முயற்சி தடையறச் செல்வதற்கு வணங்குகிறார்.

__________________________________________


உகாரமென்ற நாதமடா சத்திகாப்பு
உறுதியுள்ள அகாரமடா சிவமே காப்பு
சிகாரமென்ற சோதியடா வாலை காப்பு
சிவசிவா மகாரமென்ற மவுனங் காப்பு
வகாரமென்ற பஞ்ச கண தீக்ஷை காப்பு
மகத்தான சடாதார ஆதிகாப்பு
நகாரமுடன் அகாரவரை ஓங்காரத்தில்
நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே


இப்பாடல் சித்தமார்கத்தில் முக்கியமான பீஜாட்சரங்களை விளக்குகிறது. 
அகாரம்- சிவன், உகாரம்- சக்தி, சிகாரம்- வாலை அல்லது குண்டலினி, மகாரம்- மௌனம் அல்லது மாயை தோற்றுவித்த வெளிப்பாடு நிலையின் முடிவு, வகாரம்- பஞ்ச கண தீக்ஷை அல்லது ஐம்பூதங்களின் வெற்றி.

ஆறு ஆதாரங்களின் ஆதி என்பது ஆறு சக்கரங்களின் அதிபதியான இறைவன் அல்லது விழிப்புணர்வு.  நகாரம் முதல் அகாரம் வரை ஓங்காரத்தில் என்பது நமசிவாய என்ற பஞ்சாட்சரம், அ உ ம என்னும் மூன்று நிலையான ஓம்காரம் முதல் அதன் ஒருமை நிலை, அதாவது எல்லா வெளிப்பாடுகளையும் உட்கொண்ட ஓம்காரம்.  நாடி நின்ற சூட்சம் என்பது பரவுணர்வை நாடி நின்ற ஆத்மா அல்லது ஆத்மாவை நாடி நின்ற இறைவன் அல்லது நாடியில் இருக்கும் இறைவன் என்ற சூட்சுமம் என்றும் பொருள்படும்.  

___________________________________________




No comments:

Post a Comment