1
முதல்வன் முறையீடு
கண்ணிகள்
கன்னி வனநாதா - கன்னி வனநாதா
மூலம் அறியேன்; முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!
2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா!
3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா!
4. மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா!
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)
5. மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.
6. மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே.
7. வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே.
8. மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே;
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.
9. கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே;
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே;
10. மாற்றும் சலவை மறக்கேனே என்குதே;
சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
11. ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.
12. காமக் குரோதம் கடக்கேனே என்குதே!
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே.
13. அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே;
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே;
14. நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.
15. கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.
16. அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.
17. நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.
18. குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே;
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.
19. மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா!
20. கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
21. புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
22. கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
23. பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ?
24. அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ?
25. தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ?
26. நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?
27. ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ?
28. பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ?
29. நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ?
30. காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ?
31. நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ?
32. உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ?
வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
33. பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை;
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை
34. பாசம் எரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை;
35. அடிமை என்று சொன்னையிலை; அக்கமணி சந்தையிலை;
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை;
36. உன்னில் அழைத்தயிலை; ஒன்றாகிக் கொண்டையிலை;
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை;
37. ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
38. நாமம் தரித்தையிலை; நான் ஒழிய நின்றையிலை;
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை;
39. முத்தி அளித்தையிலை; மோனம் கொடுத்தையிலை;
சித்தி அளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை.
40. தவிப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை;
41. நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை;
துன்றுங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை;
42. கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
43. கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!
44. காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!
45. உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேனோ!
46. ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!
47. வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!
48. இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!
49. ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!
50. மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ!
51. கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!
52. அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!
53. செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!
54. முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!
55. மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!
56. கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ!
57. சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!
58. கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!
59. தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!
60. வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ
61. அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!
62. சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
63. கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!
64. நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?
65. வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?
66. வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?
67. ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம்அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?
68. என்னென்று சொல்லுவண்டா? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கலை வனநாதா! - கன்னி வனநாதா)
69. அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
70. உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?
71. ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ
72. வாக்கு மனாதீத அகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!
No comments:
Post a Comment