Friday, 19 January 2018

ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம்


ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம்

நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி, வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.

எட்டு கரங்களிலும், ஒன்பது சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி!!

ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில் சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண்திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்க, ஸ்ரீ நந்தீஸ்வரர் அவற்றைப் பல இலட்சம் கிரந்தங்களாக இன்றைக்கும் எழுதித் தொகுத்து வருகிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்தோரே இக்காட்சிகளைக் காணும் அருள் பெறுவர். குருவருள் பெற்றாலோ அனைத்தையும் உய்த்துணரலாம்.

ஒரு கரத்தில் பலகோடி யுகங்கள் அமரும் பேறு பெற்ற சித்த மஹரிஷி அக்கரத்தில் அமரத் தகுதி வாய்ந்த மற்றொருவர் உருவாகும் போது ஸ்ரீ அம்பிகையின் திருமேனியில் தாம் ஐக்கியமாகி அடுத்தவருக்குக் கரபீடம் பெறும் பாக்கியத்தை அம்பிகையின் அருளால் அளிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களில் அமரும் பேறு பெற்றவர்களைக் கணக்கில் வடிக்க இயலாது. இதுவரை கோடி கோடியான சித்த புருஷர்களும், மகரிஷிகளும் இவ்வாறாக ஸ்ரீ ஆயுர்தேவியின் திருமேனியில் ஐக்கியமாகியுள்ளனர்.

ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளையும், தோற்றங்களையும் அவதார ரகசியங்களையும் விவரிக்கும் ஸ்ரீ அகஸ்திய கிரந்தகளுள் கபால சித்தவடி கிரந்தம், தூபிகாதேவி கிரந்தம் ஆகியவை அடங்கும்.

தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரின் குருவருளால் பெற்ற இத்தகைய சித்த கிரந்த இரகசியங்களைக் கலியுகமக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக எடுத்தருளியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளாவார்.

No comments:

Post a Comment