தம் குலகுருவான வியாழ
பகவானை அவமதித்து அதனால் பெருந்தொல்லைகளுக்கு ஆளானான் இந்திரன்.
விருத்திராசூரனிடம் தோல்வியடைந்து பதவியிழந்தான். பின் ததீசிமுனிவரின்
முதுகெலும்பினால் புதிய வஜ்ஜிராயுதம் செய்து அதனால் அசுரனைக் கொன்றான். மற்ற
அசுரர்கள் கடலில் ஒளிந்து கொண்டனர். இரவு நேரத்தில் வெளிப்பட்டு முனிவர்களைக்
கொன்றனர். சாதுக்கள் இதனால் அவதிப்பட்டனர். யாக, யக்ஞங்கள், ஜப, தபங்கள் அழிந்தன.
ஹோமார்ச்சனைகள் நின்றன. பூமி ஒளியிழந்தது.
தேவாதி தேவர்கள் அனைவரும்
நடுநடுங்கி, இந்திரனை முன்னிட்டுக்
கொண்டு மகா விஷ்ணுவைச் சரண் புகுந்தனர். எம்பிரான் அனைவரையும் அகத்தியரிடம்
அனுப்பினான். அனைவரும் அவரிடம் வந்து அவர்தம் மகிமைகளைக் கூறிக் கொண்டாடினர்.
கருணை கனிந்த அகத்தியர்
அவர்கட்கு அருள் பாலித்தார். கடற்கரை சென்றார். தம் தவ வன்மையால் கடல்நீரை ஒரு
சொட்டு நீரைப் போல சுருக்கினார். பின் அதனை உண்டார். சகலரும் இதனைக் கண்டு
அதிசயித்தனர். தேவர்கள் கடலுள் சென்றனர். அசுரர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
முனிவர்களுக்குச் செய்த அபராதத்தினால் வலிமையிழந்த அசுரர் தோற்றனர்; அழிந்தனர். சிலர் பாதாளம் சென்று மறைந்தனர். இங்ஙனம்
அனைவரின் அச்சத்தையும் அகத்தியர் அகற்றினார்.
No comments:
Post a Comment