Wednesday 27 September 2017

அதிசய வேப்ப மரம் - சீதளா தேவி கோவில்

சக்திபுரம் சீதளாதேவி மாரியம்மன்
சீதளாதேவி மாரியம்மன் கோயில் வேம்பின் கசப்பு தேன் போல் இனிக்கும்
திருவாரூர் சக்திபுரத்தில் உள்ளது சீதளாதேவி மாரியம்மன் கோயில்.இங்கு சென்று வழிபடும் பக்தர்களின் உடல் வெப்பத்தோடு, மனவெப்பத்தையும் போக்குகிறாள் இந்த அம்மன்.”சீதளம்”என்றால் குளிர்ச்சி,சந்தனம் என்று பொருள்.இப்படி வெப்பத்தைத் தனிக்கும் இந்த அம்மனுக்கு ஆதி பராசக்தி,கமலாம்பாள் என வேறு பெயர்களும் உண்டு.

 இத்தகைய சக்தி வாய்ந்த அம்மனின் அருளால் ஒரு அதிசயம் நடக்கிறது.என்ன என்று தானே யோசிக்கிறீர்கள்?அது வேறொன்றுமில்லை,இந்தக் கோயிலின் வாசலில் ஒரு வேப்பமரம் இருக்கிறது.அந்த வேப்பமரத்தின் இலை இனிக்கும் என்று சொன்னால் நம்பமுடியுமா? முடியாது. ஆனால் இது உண்மை.அந்த மரத்தின் வேப்பிலையை கோவிலுக்கு வெளியே சாப்பிட்டால் கசக்கும்.அதே இலையை அம்மன் கோவிலுக்கு உள்ளே எடுத்துச் சென்று சாப்பிட தேனாக இனிக்கிறது.இது தான் இந்த அம்மனின் சக்தி.பலவகை ஆராய்ச்சிகள் செய்தும் கண்டறிய முடியாத இந்த அதிசயத்தை அம்மனவள் அருளென்று தான் சொல்ல முடியும்.


images பரந்து விரிந்துள்ள வெட்டவெளியில் வேப்பமரத்து நிழலில் கோபுரம் மிக அழகாக காட்சி அளிக்கிறது.அது மட்டுமா?கோவிலின் முன்புறம் பூத்துக் குலுங்கும் நாகலிங்க மரம்.அந்த மரத்தின் கீழே வீற்றிருக்கும் முதன்மைக் கடவுளான விநாயாகர். அவருக்கு நாக லிங்க விநாயகர் என்றே பெயராம்.ஆஞ்சநேயருக்கும் அங்கே கோயில் உள்ளது.சன்னதியில் அம்மன் இரு உருவங்களாக காட்சியளிக்கிறாள்.கீழே அமர்ந்திருக்கும் சீதளாதேவி மற்றும் அவளுக்குப் பின்புறம் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் “பெரிய சக்தி அம்மன்” இவளை “பெரிய மகமாயி” என்று அழைக்கிறார்கள்.

விழாக்கள்:

 இங்கு நடக்கும் நவராத்திரி நெய்குள வழிபாடு மிகவும் சிறந்தது.நவராத்திரி தினத்தின் முதல் நாளன்று சன்னதிக்கு வெளியே உள்ள மண்டபத்தின் நடுவே நீள் சதுரத்தில் 7அடிக்கு 3அடி அளவில் பெரிய தட்டுப் பாத்திரம் வைக்கப்படுகிறது.அந்த பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டு அதன் நடுவே குளம் போல பள்ளம் அமைத்து அதன் நடுவே நெய்விட்டு நிரப்புகிறார்கள்.அப்படி ஊற்றப்பட்ட நெய்யில் அம்மனின் முகம் அழகாக பிரதிபலிக்கிறது.பக்தர்கள் அனைவரும் அம்மனை வழிபட பின்பு அந்த சர்க்கரைப் பொங்கலை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

  இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு வழிபாடு காசு கட்டும் வழிபாடு.நீங்கள் என்ன நினைத்து பிரார்த்திக்கிறீர்களோ அதை நினைத்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து அதை அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுத்து அதை அம்மனின் திருக்கரங்களில் கட்டச் சொல்கிறார்கள்.இப்படிச் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் வெகு விரைவில் நடந்தேறும்.பின்பு அம்மனின் கைகளில் நீங்கள் முடிந்த காசை அவிழ்த்து உண்டியலில் போட்டுவிட வேண்டும்.இதுதான் அந்த வழிபாடு.

   திருமணம் நடக்காத பலரும் வரம் கேட்டு இங்கு வந்து வேண்டி அதன் பின் திருமணம் முடிய தம்பதி சமேதமாக வந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.அம்மனைத் தவிர காத்தவராயன்,தொட்டியத்து சின்னான், கருப்பண்ணசாமி,கருப்பாயி அம்மன் போன்ற கிராமிய தெய்வங்களும் உள்பிரகாரத்தில் உள்ளனர்.கோவிலின் இடதுபுறம் திருக்குளம் மற்றும் வலதுபுறம் பாம்புப் புற்றும் உள்ளது.

வழிபாடுகள்:

  சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை ஆண்டு முழுவதும் இங்கே விசேஷ நாட்கள்தான்.திருவிழாக்கள் கலைகட்டும்.பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு பிரம்மாண்ட முறையில் அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும்.ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனையும், விளக்கு பூஜையும் விசேஷ வழிபாடாக நடைபெறுகிறது.புரட்டாசியில் நவராத்திரி கொலு வைபவமும்,கார்த்திகையில் தீப வழிபாடும்,மார்கழியில் திருப்பள்ளி எழுச்சியும் நடக்கிறது.வைகாசித் திருவிழாவின் போது அம்பாள் அன்னவாகனத்தில் பவனி வருகிறாள்.அப்பொழுது பக்தர்கள் மாலை அணிந்து மஞ்சள் ஆடை உடுத்தி பத்து நாட்களும் கோவிலில் தங்கி விரதமிருந்து வருகிறார்கள்.அப்படி பிரார்த்தனை செய்தவர்கள் கையில் கங்கணம் கட்டி,தீக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.தீமிதித்து,தீயாகச் சுட்ட வினைகளிலிருந்து விடுபட பக்தர்களை அருளும் வகையில் அவர்களின் மனம் குளிர தனது அருளை மாரியாகப் பொழிகிறாள் சீதளாதேவி.

அமைந்துள்ள இடம்:

  திருவாரூரில் உள்ள காகிதக்கார தெருவின் மேற்குப் பகுதியில் சக்திபுரம் சீதளாதேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:

காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை
அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment