Friday, 22 September 2017

காவிரி பாதாளத்தில் சென்று மீண்ட உண்மை கதை

அகஸ்தியரிடமிருந்து சோழ ராஜா வரம் பெற்றுக் காவேரியை நம் சீமைக்குக் கொண்டு வந்ததை 'மணிமேகலை'யில் சொல்லியிருக்கிறது. அந்த ராஜாவின் பேர் காந்தமன் என்று அதில் வருகிறது:
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற
சம்பாபதி என்பதுதான் காவேரிப் பூம்பட்டினம். காவேரி அங்கேதான் ஸமுத்திர ராஜனோடு ஸங்கமிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே அதற்கு அப்படி (காவேரி பூம்பட்டினம் என்று) பெயர். காவேரி அங்கே வருவதற்கு முற்காலத்தில் அந்த சோழ ராஜதானிக்கு சம்பாபதி என்றே பெயர். புகார் என்றும் ஒரு பெயர் உண்டு. 'பூம்புகார்'என்று சிறப்பித்துச் சொல்வதுண்டு.
நடுவிலே வந்த ஆபத்து
இப்போதைய தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் சோழ ராஜாவின் பின்னால் வந்த காவேரி முதலில் சம்பாபதி வரைக்கும் பாய்ந்து ஸமுத்திரத்தில் விழவில்லை. இது சீர்காழிக்குத் தென்கிழக்கில் பத்து மைலில் உள்ள இடம். முதலில் காவேரி அவ்வளவு தூரம் வரவில்லை. கும்பகோணத்துக்குக் கிட்டத்தில் கொட்டையூர் என்று இருப்பதாகச் சொன்னேனே, அதற்கும் இன்னும் கொஞ்சம் தள்ளி அதாவது கும்பகோணத்திலிருந்து நாலு மைல் மேற்கே உள்ள ஒரு இடத்தோடு காவேரி முடிந்து விட்டது.
ஸாதாரணமாக ஒரு நதி என்றால் அது ஸமுத்திரத்தில் விழுந்துதான் முடியும்; அல்லது வேறே ஒரு மஹாநதியில் கலந்துவிடும் - யமுனை கங்கையில் கலக்கிறாற் போல. கும்பகோணத்துக்கு மேற்கே ஸமுத்திரமோ வேறே நதியோ ஏது? பின்னே, காவேரி என்ன ஆச்சு என்றால், அந்த இடத்தில் பெரிசாக ஒரு பள்ளம் இருந்தது; அதாவது பூமிக்கடியில் குகை மாதிரி, 'டன்னல்'மாதிரி, அதுபாட்டுக்குப் பெரிசாக ஒரு பள்ளம் போய்க் கொண்டேருந்தது. அந்தப் பள்ளம் அழகாக பிரதக்ஷிண ரீதியில் சுழித்து வெட்டினது போல பூமியைக் குடைந்து கொண்டு போயிருந்தது. இந்தப் பள்ளத்தின் பக்கம் காவேரி வந்ததோ இல்லையோ, அப்படியே அந்தப் பிரதக்ஷிணக் குடைசலில் வலம் வருகிறது போல சுழித்துக் கொண்டு உள்ளே ஓடி, அகாதமான பள்ளத்திற்குள்  மறைந்தே போய் விட்டது. அதனால் அந்த ஊருக்கே திருவலஞ்சுழி என்று பேர் ஏற்பட்டு விட்டது.
''சோழ சீமையிலே இன்னம் நாற்பது ஐம்பது மைல் காவேரி ஓடி, வளம் உண்டாக்கி விட்டு ஸமுத்திரத்தில் விழும் என்று நினைத்தால், இப்படி நடுப்பறவே மறைந்து போய் விட்டதே''என்று ராஜாவுக்கு துக்கம் துக்கமாக வந்தது.
இதிலே இன்னொரு சமாசாரம் என்னவென்றால், இந்த மாதிரி திடுதிப்பென்று ஒரு நதி பள்ளத்தில் விழுந்து மறைந்து போகாமல், ஸம பூமியிலேயே கொஞ்சம் வித்யாஸமாயுள்ள ஏற்ற-இறக்கங்களை அநுஸரித்து ஓடி, இயற்கையாக ஸமுத்திரத்திலே விழும்போதுதான், கடைசியில் ஸங்கமிக்கின்ற இடத்துக்குக் கொஞ்சம் முன்னாலிருந்து ஆரம்பித்து, அதுவரைக்கும் ஆறு அடித்துக் கொண்டு வந்திருக்கும் பூஸாரமெல்லாம் அதை சுற்றிப்பரவி, டெல்டா என்று 'ஃபார்ம்'ஆகி, ரொம்பவும் வளப்பமான பகுதி உண்டாகும். இப்படி இல்லாமல், ஸாரமெல்லாம் வீணாகிப் பள்ளத்துக்குள் போகிறதே என்று ராஜாவுக்கு வியஸனமாய் விட்டது.
நெய்வேலியில் லிக்னைட் எடுப்பதற்குத் தோண்டியபோது முதலில் பூமிக்கடியிலிருந்து எத்தனையோ கோடி காலன் ஜலம் பம்ப் பண்ண வேண்டியிருந்ததைப் பார்த்தோமில்லையா?சில 'கோல் மைன்'களில் [நிலக்கரிச் சுரங்கங்களில்] பூமிக்கடியிலிருந்து ஜலம் குபீர் என்று வெள்ளமாக வந்து பொருட் சேதம், உயிர்ச் சேதம் உண்டாக்குவதாகவும் அவ்வப்போது 'ந்யூஸ்'பார்க்கிறோம். இதற்கான பல காணங்களில் ஒன்று இம்மாதிரி இடங்களில் பூர்வத்திலே ஏதாவது ஆறு பூமிக்குள்ளே போய்ப் புகுந்து கொண்டிருப்பதாகும். மேலே பூமி மட்டத்திலே ஆறே இல்லாமல் வற்றிப்போயும் கூட, அடியிலே மட்டும் ஆதியில் தேங்கின ஜலம் அப்படியே இருப்பதுண்டு. அப்புறம் அந்த பிரதேசத்தில் எதற்காகவாவது வெட்டி, கொத்தி, தோண்டும்போது அது பொங்கிவந்து பெரிய உத்பாதத்தை ஏற்படுத்துகிறது.
''அருள் தாயாகத் தமிழ் தேசத்துக்கு வந்திருக்கிற காவேரியின் ஸாரம் வீணாக்கப்படாது; பிற்காலத்தில் அவள் உத்பாத ஹேதுவாகிக் கஷ்டத்தைத் தருபவளாக ஆகிவிடக்கூடாது. இதற்கு என்ன செய்யலாம்? பிலத் துவாரத்துக்குள் ஓடி அந்தர்தானமாகி விட்டவளை எப்படி வெளியிலே கொண்டு வந்து, ஸமுத்ரத்துக்குக் கொண்டு சேர்பபது?''என்று ராஜா நிரம்பவும் விசாரமாக யோஜித்தார். அதே யோஜனையாக உலாத்திக் கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்தில் கொட்டையூரில் ஏரகண்டர் தபஸ் கொண்டிருப்பதைப் பார்ததார். அவர்க்கு  ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பிலத்துக்குள் போய்விட்ட காவேரி வெளியிலே வருவதற்கு அவர் அநுக்ரஹம் செய்ய வேண்டும், உபாயம் சொல்லவேண்டும் என்று பிரார்த்தனை பண்ணினார்.
மஹரிஷி கண்ட உபாயம்
மஹரிஷி கொஞ்சம் ஆலோசனை செய்ததும் அவருக்கு உபாயம் புரிந்தது. 'லோகம் பண்ணின ஏதோ தப்புக்குத் தண்டனையாகத்தான், இப்படி, அருள்தாயாக இருக்கபபட்டவளை அருள் வடிவமான பரமாத்மா பள்ளத்தில் மறையப் பண்ணியிருக்கிறார். அந்த தப்புக்கு பிராயசித்தமாக ஒரு பெரிய தியாகம் பண்ணினால்தான் அவள் வெளியில் வரும்படியாக ஈச்வரன் அநுக்ரஹிப்பார்'என்று ஏரண்டகருக்குத் தெரிந்தது.
ராஜானம் ராஷ்ட்ரஜம் பாபம் :குடிகள் பண்ணும் பாபமெல்லாம் அவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய ராஜாவிடம் போய்ச் சேர்ந்துவிடும். ஆனதால் ஜன ஸமூஹத்தின் குற்றத்தினால் ஒரு விபரீதம் உண்டாகும்போது அதற்குத் தியாக ரூபமாக பரிஹாரம் பண்ணவேண்டுமென்றால் அரசனுடைய உயிரைப் பலி கொடுத்தால் கஷ்டம் நீங்கி நல்லது நடக்கும். அல்லது ஒரு ஞானியை பலி தரலாம். ஞானியின் ஹிருதயத்திலிருந்து தன்னியல்பாக அது பாட்டுக்கு ஸகல ஜனங்கள் மீதும் கருணை ஊறிக் கொண்டிருக்கும். ஸர்வபூத அந்தராத்மாவான ஈச்வரனை அந்த ஞானி கண்டுகொண்டவனாகையால் அவனுக்குள் ஜன ஸமூஹம் பூரா அடக்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆகையால் இப்படிப்பட்ட ஒரு ஞானியை பலி தந்தாலும் மக்கள் குலத்துக்குப் பெரிதாக ஒரு நன்மையை ஸாதித்துத் தர முடியும்.
''என்ன உபாயம்?''என்று கேட்ட ராஜாவிடம் இதைச் சொன்னார் ஏரண்டகர். அதைக் கேட்டவுடன் ராஜா, ''ஆஹா, அப்படியானால் என் பிரஜைகளுக்காக, இனிமேலே பிரளய பரியந்தம் வரப்போகிற அவர்களுடய ஸந்ததிகளின் நன்மைக்காக இதோ நானே என் சிரஸைக் கொடுக்கிறேன். கொடகிலிருந்து காலேரியை நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தது பெரிசில்லை. இப்போது அவளை லோகோபகாரமாக வெளியில் வரப்பண்ணுவதற்காகப் பிராணத் தியாகம் செய்யும்படியான ஒரு பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறதே, இதுதான் பெரிசு''என்று ஸந்தோஷத்தோடு பலி கொடுத்துக் கொள்ளப் புறப்படடார்.
'ராஜ போகம்'என்றே சொல்வதுபோல் அநேக ஸெளக்யங்களை அநுபவித்தே பழக்கப்பட்ட சரீரத்தை அவர் இப்படி த்ருணமாத்ரமாய் நினைத்துத் தியாகம் செய்யக் கிளம்பியபோது ஞானியான ஏரண்டகர் சும்மா இருப்பாரா?
''அப்பா!நாங்கள் சரீர ஸுகத்தை அறவே விட்டு, அதைப் பிராரப்த வசத்தால் ஏற்பட்ட ஒரு சுமை என்றே நினைக்க வேண்டியவர்கள். ஆகையால் லோக க்ஷேமார்த்தமாக ஒரு சரீரம் பலியாக வேண்டுமென்றால் அதற்கு முதல் பாத்யதை எங்களுக்குத்தான். நான்தான் பலியாவேன்''என்றார்.
ஆதாயங்கள் கேட்பதில்தான் ''எனக்கு முதல் பாத்யதை, எனக்கு முதல் பாத்யதை, என்று 'ப்ரயாரிடி'கேட்பது பொது வழக்கம். இங்கேயோ சோழ ராஜாவும், மஹரிஷியிம் தங்கள் தேஹத்தையே பரித்யாகம் பண்ணுவதில் அவரவரும் 'ப்ரயாரிடி'கொண்டாடிக் கொண்டார்கள்.
''ஜனங்களின் தோஷம் அவர்களைத் திருத்தாத ராஜாவைத்தானே சேர வேண்டும்?''என்று உரிமை - செத்துப் போவதற்கு உரிமை! - கேட்டார் ராஜா.
ரிஷியும் விடவில்லை. ''உனக்கு ஜனங்களுக்காகப் ப்ராணத் தியாகம் செய்யும் வாய்ப்பு யுத்தத்திலும் கிடைக்கிறது. நான் யுத்தம் பண்ணுவதற்கு இடமில்லை. ஆனதனால் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிற இந்த ஸந்தர்ப்பத்தை நழுவ விடமாட்டேன். c வயதிலும் என்னை விடச் சின்னவன். திடீரென்று c உயிரை விட்டுவிட்டால், அடுத்து ராஜ்ய பாலனத்துக்கு யாரும் பயிற்சி பெறவில்லையாதலால் நாடே கஷ்டத்திற்கு ஆளாகும். ஜனங்களின் கஷ்டத்தைத் தீர்ப்பதாக நினைத்து c செய்கிற தியாகமே அவர்களை இதைவிடப் பெரிய அராஜகக் கஷ்டத்துக்கு ஆளாக்கிவிடும்.
உபாயம் சொன்னவன் நான் தானே?சொல்லிவிட்டு, அதைக் காரியத்தில் பண்ணிக் காட்டவும் எனக்கு இட இருக்கும்போது நான் சும்மா இருந்துகொண்டு உன்னைப் பலியாகச் செய்தால் எனக்கு ராஜஹத்தி தோஷம் உண்டாகிவிடும்''என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவனுடைய பதிலுக்கு கூடக் காத்திராமல், கிடுகிடுவென்று அந்த பள்ளத்துக்கு வந்தார்.
மஹா வேகத்தோடு அதற்குள்ளே பாய்கிற சுழலிலே தம் சிரஸை பலி கொடுத்து விட்டார். அதாவது அதில் அப்படியே தலை குப்புற விழுந்து விட்டார்.
நல்லதைச் சொல்லி ஆபத்து !
t
பக்கத்திலேயிலிருந்து இருந்து இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த ஒருவர் அப்போது ஒரு ஸ்லோகம் சொன்னதாக இருக்கிறது:
ஹிதம் ந வாச்யம் அஹிதம் ந வாச்யம்
ஹிதாஹிதே நைவ வதேத் கதாசித்
ஹிதஸ்ய வக்தாபி விபத்திமேதி
ஏரண்டகோ நாம பிலம் ப்ரவிஷ்ட :
''யாருக்கும் நல்லதையும் சொல்ல வேண்டாம்;கெட்டதையும் சொல்ல வேண்டாம். ஒருபோதும் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லவே வேண்டாம். நல்லதைச் சொன்னவனும்கூட ஆபத்தை அடைகிறான். உதாரணமாக, ஏரண்டகர் என்று பெயர் படைத்தவர் பிலத்தில் பிரவேசித்து விட்டார்''என்பது ஸ்லோகத்தின் அர்த்தம்.

பெரும் பள்ள ' மும் ' திருவலம்புர ' மும்
இவர் இறங்குவதற்குள், முன்னே பிலத்தில் பிரவேசித்த காவேரி அண்டர்-க்ரவுண்டாகவே நாற்பது ஐம்பது மைல் ஓடிவிட்டான். இவர் இங்கே இறங்கிப் பலியானோரோ இல்லையோ, அந்த க்ஷணமே, அந்த நாற்பது ஐம்பது மைல் தாண்டியுள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து அப்படியே பீச்சிட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மேலே வருவதற்கு அவள் கன வேகமாக வழி பண்ணிக் கொள்ளும்போது முதலில் பெரிசாக ஒரு பள்ளம் உண்டாயிற்று. அதனால் இந்த இடத்துக்கு இப்போதும் 'பெரும் பள்ளம்'என்று ஒரு பேர் இருக்கிறது. ஜனங்கள், ''இதென்னடா பள்ளம்? பூகம்பமா என்ன?'' என்று பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதில் அன்டர்-கிரௌண்டாக இருந்த காவேரி கிடுகிடுவென்று நிரம்பி பூமிக்கு வெளியிலே வந்தாள்.
பூமியை அவள் தொடுகிற இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. இந்த லிங்கத்தை பூஜை பண்ணித்தான் மஹா விஷ்ணு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது கதை. அதனால் அந்த லிங்கத்துக்கு வலம்புரீச்வரர் என்று பெயர். அவரை வலம் புரிந்தே, அதாவது பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டே காவேரி மேற்கொம்டு பூமிக்கு மேலாக ஓடினாள். அந்த ஸ்தலத்துக்கு திருவலம்புரம் என்றும் பெயர் இருக்கிறது.
பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274. அதில் மூவரும் பாடியவை நாற்பத்து நாலுதான். இந்த நாற்பத்து நாலில் திருவலம்புரமும் ஒன்று.
திருவலஞ்சுழியில் பிலத்துக்கு உள்ளே போன காவேரி திருவலம்புரத்தில் மறுபடி வெளியிலே வந்தாள். அங்கிருந்து தென் கிழக்காக மூன்று மைல் ஓடி சம்பாபதி, புகார் என்றெல்லாம் சொல்லப்படும் ஊரில் காவேரிப்பூம்பட்டினமாக்கிக் கொண்டு அங்கேயே ஸமுத்திரத்தில் கலந்து விட்டாள்.
ஈசனின் அருள் லீலை

அவளோடு திருவலஞ்சுழியில் உள்ளே போன ஏரண்டகரிஷிக்கு ஸ்வாமி உயிர் கொடுத்து அவளோடேயே திருவலம்புரத்தில் வெளியே கொண்டு வந்தார் என்று கதை. அவர், ''போனால் போகட்டும் இந்த உயிர்''என்று தியாகம் பண்ணினது பண்ணினதுதான். ஆனால் இப்படிப்பட்ட தியாகியைப் பலிவாங்கின பழி காவேரிக்கு இருக்கப்படாது என்றோ, அல்லது தானாக அவருடைய சரீரம் விழுகிற வரை ஜனங்களுக்கு அவரைத் தரிசிப்பதால் ஏற்படும் பரிசுத்தி நீடிக்கட்டும் என்றோ ஸ்வாமியை அவருக்குப் புத்துயிர் கொடுத்துவிட்டார்.
அதுமட்டுமில்லை, அவர் லோகத்தின் கஷ்டத்தைத் தாம் தாங்கிக் கொண்டாரென்றால், ஸ்வாமியோ அவர் தாங்கிக் கொண்ட பாரத்தைத் தாமே தம்மிடம் transfer பண்ணிக் கொண்டதாக [மாற்றிக் கொண்டதாக] இன்றைக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்!
பிலத்தில் இறங்கின KS காவேரி தாரைக்குத் தம்முடைய தலையைப் பலியாகக் காட்டியதில் அவருடைய தலையிலே ஒரு பள்ளம் உண்டாகி விட்டது. இப்போது அவர் வெளியே வந்த பெரும்பள்ளத்திலிருந்த வலம்புரீச்வர லிங்கத்தின் தலைக்கு அந்தப் பள்ளம் இடம் மாறி விட்டது!ரொம்பவும் ஃபோர்ஸோடு வந்த கங்கையைக்கூட அநாயாஸமாக ஜடையிலே தாங்கிக் கொண்ட ஈச்வரன் இங்கே ஞானியும் தானும் ஒன்றே என்று காட்டுவதற்காகத் தலையில் பள்ளம் விழுந்தவராக விளங்குகிறார்!
பகீரதன் ஆகாசத்திலிருந்த கங்கையை பூமிக்கு இறக்கினான். ஏரண்டகர் பூமிக்கு அடியில் மறைந்து போன காவேரியை நில மட்டத்துக்கு ஏற்றினார்.
திருவலம்புரத்தில் காவேரி வெளியிலே வந்த பிற்பாடு, திருவலஞ்சுழியிலிருந்து அந்த இடம் வரைக்கும் அவள் 'அன்டர் கிரௌண்டாக'இருந்ததும் மாறி, பூமிக்கு மேலேயே ஓடலானாள். கொடகில் அவதாரம் பண்ணினவள் புகாரில் ஸமுத்திரத்தில் புகும்வரையில் முறிபடாத ஜீவநதியாக ஆனாள். முடிகிற இடத்தில் Granary of Tamilnadu - தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் - என்னும்படியாகத் தன் ஸாரத்தை எல்லாம் விநியோகித்து 'டெல்டா'வும் உண்டாக்கி விட்டாள். இதற்கெல்லாம் காரணம் ஏரண்டகரின் தியாகம்தான்.
திருவலஞ்சுழி பிள்ளையார்
திருவலஞ்சுழியில் அவள் பிலத்திலிருந்து ஸம பூமிக்கு வந்த இடத்தில் ஒரு பிள்ளையார் இருந்தார். திருவலம்புரியில் எப்படி ஊர்ப் பெயருக்கேற்ப வலம்புரீச்வரர் இருந்தாரோ அப்படியே இந்த திருவலஞ்சுழியிலும் பிள்ளையார் வலம்புரி விநாயகராக இருந்தார் - அதாவது தும்பிக்கையை வலப்பக்கமாகச் சுழித்துக் கொண்டிருக்கிற அபூர்வமான ரூபத்தில் அவர் இருந்தார். 'தக்ஷிணாவர்த்த கணபதி'இன்று இந்த மூர்த்தியைச் சொல்வார்கள். 'தக்ஷிணஆவர்த்த'என்றால் 'வலது பக்கம் சுழித்த'என்று அர்த்தம்.
திருவலஞ்சுழியில் இப்போது பிரஸித்தமாக இருக்கிற மூர்த்தி 'ச்வேத விநாயகர்'. தமிழில் 'வெள்ளை வாரணப் பிள்ளை'. வெள்ளை வெளேரென்று ஸலவைக் கல்லில் பண்ணின மாதிரி இருப்பார். அந்த ஸ்தலத்திலுள்ள பாடல் பெற்ற சிவாலயத்துக்கு வெளியிலே தனிக் கோயிலில் அவர் இருக்கிறார். அங்கேயிருக்கிற ஸலவைக்கல் பலகணி இந்தத் தமிழ் தேசத்தின் மிகவும் அபூர்வமான சில்ப அதிசயங்களில் ஒன்று. இந்த ச்வேத விநாயகரைப் பூஜித்தே தேவேந்திரன் அம்ருதம் பெற்றான் என்று கதை.
ஆனால், நமக்கு அமிருத தாரையான காவேரியை தமிழ் தேசம் மீளவும் பெற்ற திருவலஞ்சுழியில் இருந்த 'தக்ஷிணாவர்த்த கணபதி' என்று நான் சொன்னது இந்த ச்வேத விநாயகரை அல்ல. இவர் (ச்வேத விநாயகர்) பெரும்பாலான கோயில்களில் உள்ளதைப் போல் இடது பக்கம் தும்பிக்கையைச் சுழித்த 'வாமாவர்த்த கணபதி'தான்.
நான் சொன்ன வலம்புரி விநாயகர் இருப்பது சிவாலயத்திலேயேதான். தனிக் கோவிலாக இல்லாமல் சிவலாயத்தின் அநேக ஸந்நிதிகளில் ஒன்றில் அவர் இருக்கிறார்.
பள்ளத்திலிருந்து ஸம பூமிக்கு வந்த காவேரி, வலது பக்கம் தும்பிக்கையைச் சுழித்த அவரைத்தான் தானும் வலது பக்கம் சுழித்துப் பிரதக்ஷிணம் பண்ணிவிட்டு மேற் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
கொடகிலே கன்னங் கரேலென்று காக்காயாக வந்து இவர் கவிழ்த்து விட்டதினாலேயே ஓட ஆரம்பித்த காவேரி தன்னுடைய போக்குக்கு வந்த விக்னம் நீங்கி மறுபடி பூமிக்கு மேல் ஓட ஆரம்பித்தபோது வெள்ளை வெளேரென்றிருக்கிற ச்வேத விநாயகரிருக்கும் ஊரிலுள்ள வலம்புரியானை - வலம்புரி யானையை - வலம் வந்து மேலே பிரவஹித்துக் கொண்டு போனாள்.

No comments:

Post a Comment