Monday, 11 September 2017

சபரிமலை ஐயப்பன் வரலாறு

சபரிமலை ஐயப்பன் வரலாறு

ஓம் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
ஸகல குற்றங்களையும் பிழைகளையும்
பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும்
ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி
மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன்
காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா..

 ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன்.

ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால் குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

குருகுல வாசம்: தன்னிடம் கல்வி பயில வந்திருக்கும் மணிகண்டன் சாதாரணச் சிறுவனல்ல ஓர் அவதார புருஷன் என்பதை முனிவர் தனது தபோ பலத்தால் உணர்ந்து கொண்டார். இந்தச் சிறுவனுக்கு தான் குருவாக இருந்து கல்வி கற்றுத் தருவது தனது பூர்வஜென்ம புண்ணியம் தான் என்பதும் அவருக்குப் புரிந்தது. மணிகண்டன் சூட்டிகையாய் இருந்தான் கல்வி கேள்வியுடனான அறுபத்து நான்கு கலைகளையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தான். அரசகுமாரர்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் அஸ்திர வித்தைகளையும் வெகு விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொண்டான். குருகுல வாசம் சிறப்புற முடிந்தது மணிகண்டன் அரண்மனைக்குச் செல்ல விடைபெறும் நேரம் வந்தது. குருவுக்கு தகுந்த மரியாதை செய்வதற்காக எண்ணற்ற பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் அனுப்பி வைத்திருந்தார் மன்னர். அனைத்தையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்த மணிகண்டன் குருவே தங்களின் திருவருளால் நான் நிறைந்த கல்வியைப் பெற்றேன். இந்த பொன்னையும் பொருளையும் தவிர இன்னும் வேறு ஏதேனும் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். முனிவர் தயக்கத்துடன் மணிகண்டா மனிதர்களின் சக்திக்கு மீறிய ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன் முடியுமானால் நிறைவேற்று இல்லாவிட்டால் மனம் வருந்த வேண்டாம் என்றார். உங்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது எனது பாக்யம். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று பணிவாகக் கேட்டான் மணிகண்டன். குருபத்தினி கண்களில் நீருடன் மணிகண்டனிடம் ஐயனே எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்கு தெரியாததா என்ன அவனை நினைத்துத்தான் நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம். நீதான் அந்த ஊமைப் பிள்ளையின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். பெற்றவர்களது தவிப்பைப் புரிந்து கொண்ட மணிகண்டன் அப்படியே ஆகட்டும் அம்மா என்றான். குருவின் மகனை அருகில் அழைத்தான் பழத் தட்டிலிருந்த கனி ஒன்றை கொடுத்து உண்ணச் சொன்னான். பின் அந்த சிறுவனிடம் கண்ணா இங்கே என்னையே பார் நான் சொல்வதை நம்பிக்கையுடன் திரும்பச் சொல் என்று கூறி பஞ்சாட்சர மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் ஓதினான் மணிகண்டன். ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய எங்கே சொல் அங்கே ஒரு அற்புதம் நடந்தது மணிகண்டன் சொல்லச்சொல்ல குரு மைந்தனும் அந்த மந்திரத்தைச் சேர்த்து சொன்னான் தெளிவாக உச்சரித்தான் ஊமைச் சிறுவன் பேசத் தொடங்கி விட்டான். குரு தம்பதியினர் மெய் சிலிர்த்துப் போயினர். கை குவித்து வணங்கினர் மணிகண்டா உலகில் எந்த சீடனும் குருவுக்கு செய்ய முடியாத ஒன்றை எனக்கு நீ தந்தருளினாய். இந்த அற்புதத்தை நிகழ்த்திய நீ சாதாரண மானிடன் இல்லை என்பதை அறிவோம் நீ யார் ஐயனே என்று குரு வேண்டினார். மணிகண்டன் தனது அவதார ரகசியத்தை குருவிடம் கூறினான். பின் குருவே இது தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும். எனது அவதார நோக்கம் முடிந்ததும் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் நான் தங்களுக்கு ஜோதிஸ்வரூபனாக காட்சி தருவேன். இதுவே நான் தங்களுக்கு அளிக்கும் குருதட்சணை என்று சொல்லி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். குருகுலத்திலிருந்து மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பி விட்டான் இப்போது மணிகண்டன் பன்னிரெண்டு வயதுச் சிறுவன். மன்னனும் மக்களும் மற்ற மந்திரி பிரதானிகளும் சேவகர்களும் மணிகண்டனை வரவேற்று மகிழ்ந்தார்கள்.

ராணி கோப்பெருந்தேவியின் மன மாற்றம்: ராஜ்ஜியத்திலோ அரண்மனையிலோ எந்த மாற்றமும் இல்லை, எல்லாம் அப்படியப்படியே இருந்தன. ஆனால் கண்ணே மணியே மணிகண்டா எப்படியடா உன்னைப் பிரிந்திருப்பேன் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொஞ்சிச் சீராட்டி குரு குலத்திற்கு அனுப்பி வைத்த ராணி கோப்பெருந்தேவியின் மனத்தில் மட்டும் இந்த சில வருடங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவள் இப்போது மணிகண்டனை வேம்பாக வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தாள். காரணம் அரசுரிமை பந்தள நாட்டின் மந்திரி அந்த அளவுக்கு மகாராணியின் மனதை விஷமாக்கி இருந்தான். மணிகண்டன் வருவதற்கு முன்பு தங்களுக்கு குழந்தையில்லை இப்போதுதான் உங்களுக்கென்று மகன் ராஜராஜன் பிறந்து விட்டானே இனி இந்த ராஜ்ஜியத்திற்கு அவன்தானே உண்மையான வாரிசு அதை விடுத்து காட்டிலிருந்து எடுத்துவளர்த்த குழந்தையை அரச வாரிசு என்று சொல்லித் திரிவது என்ன நியாயம் அரசி. எக்காரணம் கொண்டும் அரசுரிமையை வேறு யாருக்கும் விட்டுத் தராதீர்கள் என்று உபதேசம் செய்து, அவளை கைப்பாவை போலவே மாற்றி வைத்திருந்தான். பேருக்கு மணிகண்டன் மேல் பாசம் பொழிந்து உள்ளுக்குள் மனத்தில் வஞ்சம் வைத்துக் காத்திருந்தான். இம்மாதிரியான சூழ்நிலையில்தான் மன்னன் ராஜசேகரன் மணிகண்டனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தீர்மானித்தான். அரண்மனை புரோகிதரிடம் முகூர்த்தநாள் கணிக்கச் சொன்னான். ராணி கோப்பெருந்தேவி பதறிப் போனாள். இனியும் காலம் கடத்தக்கூடாது உடனடியாக மணிகண்டனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அமைச்சனும் அவளும் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள். அரண்மனை வைத்தியரையும் தங்கள் சதிக்கு கூட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். அன்றைய தினமே ராணிக்குத் தாளமுடியாத பொய்த் தலைவலி உண்டானது. ஐயோ தலைவலி தாங்க முடியவில்லையே செத்துப் போய்விடலாம் போல் இருக்கிறதே. நான் என்ன செய்வேன் என்று துடித்தாள். கண்ணீர் விட்டாள் திறமையாக நடித்தாள். ராணியின் வலியை நிஜமென்று நம்பிய மன்னன் வைத்தியரிடம் சினந்தான். என்ன வைத்தியரே ஒரு தலைவலியை உங்களால் சரிப்படுத்த முடியவில்லையா இதற்கு உங்களிடம் மருந்தே இல்லையா? ராணி வலியால் துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ஏதாவது செய்யுங்கள் வைத்தியரே என்றார். வைத்தியர் ஏற்கனவே தாங்கள் பேசிக்கொண்ட சதித் திட்டத்தின்படி விபரீதமான ஒரு விஷயத்தைக் கூறினார். மன்னா இது சாதாரண தலைவலி இல்லை. இந்தக் கொடுமையான தலைவலிக்கு ஒரேயொரு மருந்துதான் உண்டு. அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஆனால் என்று அரண்மனை வைத்தியர் தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினார். என்ன ஆனால் என்ன வேண்டும்? அந்த மூலிகையை அரைத்துக் கலக்கி பற்றுப்போட பால் வேண்டும் அதுவும் குட்டி போட்ட புலியின் பால். என்ன குட்டி போட்ட புலியின் பாலா விளையாடுகிறீர்களா? வைத்தியரே காட்டுக்குப் போய் பெண் புலியை வேட்டையாடி அதுவும் அதன் மடியில் பால் கறப்பதெல்லாம் முடிகிற காரியமா? குட்டி போட்ட புலி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் தெரியுமா என்று கோபப்பட்டார். ஐயோ வலி தாள முடியவில்லையை உயிர் போகிறதே. மன்னர் சொல்வது சரிதான் புலிப்பால் கொண்டு வருவதெல்லாம் சாத்தியமா என்ன விடுங்கள். நான் செத்துப் போகிறேன் இந்த வலியோடு என்னால் வாழமுடியாது என்று மகாராணி நடிப்பின் உச்சம் தொட்டாள்.

மணிகண்டன் அவதார நோக்கம்: மணிகண்டன் அனைத்தையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டதால் அந்த நிகழ்வுக்கு ராணியின் இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். மன்னன் ராஜசேகரன் முன்பு வந்து தந்தையே கவலைப்பட வேண்டாம் அன்னையின் துன்பத்தைப் போக்க வேண்டியது எனது கடமை. அனுமதி கொடுங்கள் நான் சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்றான் ராணியும் மந்திரியும் மகிழ்ந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. மன்னனோ பதறினான். மணிகண்டா நீ பாலகன் இது மிகவும் ஆபத்தான காரியம் நான் வேறு ஆட்களின் மூலம் முயற்சிக்கிறேன் இந்த விபரீதத்தில் நீ இறங்கவேண்டாம் என்றான். அப்பா என்னை நம்புங்கள் என் திறமையின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா? தயவுசெய்து என்னைச் செல்ல அனுமதியுங்கள். வெற்றியோடு திரும்புகிறேன் என்று வேண்டினான். மணிகண்டனின் உறுதியும் கட்டளைக் குரலும் மன்னனை மறுக்க முடியாமல் செய்தன. துணைக்கு நமது படையை அழைத்துச் செல் மணிகண்டா. வேண்டாம் அப்பா கூட்டமாக சென்றால் புலிகள் மிரண்டு ஓடி ஒளிந்து கொள்ளும். நான் ஒருவனாகவே சென்று முடித்து வருகிறேன். தைரியமாக விடை கொடுங்கள். போய் வெற்றியுடன் வா மணிகண்டா என்று வாழ்த்திய மன்னன் ராஜசேகரன் தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு பூஜித்த முக்கண்ணனின் தேங்காய் ஒன்றையும் கூடவே பயணத்தில் உண்பதற்கான உணவுப் பொருள்களுமாக ஒரு துணியில் இருபுறமும் முடிச்சுகளாகக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தான். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்லும் வழக்கம் உண்டானது. பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து மணிகண்டன் காட்டுக்குள் பிரவேசித்த போது, இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணங்களும் மணிகண்டனை எதிர்கொண்டு வரவேற்றனர்.

மகிஷியின் வதம்: மகிஷியின் வதத்துக்கான நேரம் நெருங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் மணிகண்டனைப் போற்றித் துதித்து அவனை அழைத்துச் சென்று மலையுச்சியின் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்துப் பூஜித்தனர். தேவர்கள் அன்று மணிகண்டனை அமர வைத்துத் தொழுத அந்த இடமே "பொன்னம்பலமேடு" எனவும், அந்த மலையே "காந்தமலை" எனவும் அழைக்கப்படுகிறது. இதை "தக்ஷிண கைலாயம்" எனவும் இங்கிருந்து உற்பத்தி ஆகும் நதி " தக்ஷிண கங்கை" என்றும் அழைப்பதுண்டு. தன்னை அழிப்பதற்காக ஒரு பாலகன் தலைமையில் தேவர்கள் படை திரட்டியிருக்கிறார்கள் என்கிற தகவல் அதற்குள் மகிஷியின் காதுகளை எட்டியிருந்தது. மணிகண்டனை தேவர்கள் தொழுது கொண்டிருந்த சமயத்தில் அரக்கி மகிஷி அங்கே வந்து குதித்தாள். அவளது அசுரர் படை கூப்பாடு போட்டபடி பின் தொடர்ந்து வந்தது. யாரடா அவன் பொடியன் என்னைக் கொல்ல வந்திருப்பவன் என்று கர்ஜித்தவள். பாலகனான மணிகண்டனைப் பார்த்ததும் வியந்து போனாள். அடுத்த நொடி வயிறு குலுங்கச் சிரித்தவள், கோபம் கொப்பளிக்க அடேய் சிறுவா பிள்ளைப்பூச்சி போலிருக்கும் நீயா என்னை எதிர்க்க வந்திருக்கிறாய். இன்றோடு உன் ஆயுள் முடிந்தது என் சுண்டுவிரலால் உன்னை நசுக்கி விடுகிறேன் பார் என்றபடி மணிகண்டனை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நொடி போர் தொடங்கியது. மகிஷியின் அசுரர் படைகளும் தேவேந்திரனும் படைகளும் அவர்களுக்கு துணையாக பூதகணங்களும் மோதின. தேவர்களும் பூதகணங்களும் ஆக்ரோஷமாகப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான அசுரர்களைக் கொன்று குவித்தார்கள். மகிஷமுகி தன்னுடைய மாயா சக்தியினால் பல்லாயிரக்கணக்கான பாணங்களை எய்தாள். மகிஷியின் அத்தனை பாணங்களையும் அஸ்திரப் பிரயோகங்களையும் மணிகண்டன் அநாயசமாகத் தடுத்து தவிடுபொடியாக்கினான். இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்டனின் பாணங்களால் அடிபட்டு மகிஷியின் உடலெல்லாம் ரத்தம் பீறிட்டுச் சிதறியது. பலம் குன்றிப் போனாள் மகிஷமுகிக்குத் தனது முடிவு தெரிந்து விட்டது. அவள் புரிந்து கொண்டாள் தெய்வாம்சம் பொருந்திய இந்தச் சிறுவன் நிச்சயம் ஹரிஹரனின் புத்திரனாகத்தான் இருக்கவேண்டும். வயதும் பன்னிரெண்டுதான் இருக்கும் தேஜஸ் அவனை பிரம்மச்சாரி என்றே உணர்த்துகிறது. அப்படியானால் நான் பிரம்மாவிடம் கோரிய வரம் பலிக்கப் போகிறதா என் விதி முடியும் தருணமா இது. மகிஷி தனது மரணத்தை உணர்ந்த தருணமே மணிகண்டன் அவளை நெருங்கி தலையின் இரு கொம்புகளைப்பற்றிப் பிடித்துத் தூக்கி கரகரவென்று சுழற்றித் தூக்கியெறிந்தான். மகிஷியின் உடல் " அழுதா" நதிக்கரையில் வந்து விழுந்தது. அவள் மீண்டும் எழும் முன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகிய மணிகண்டன் அவள் உடல் மீது ஏறி நின்று நர்த்தனமாடினார். மகிஷியின் உயிர் மெல்லப் பிரிந்தது. மகிஷியின் உடலின் மீது மணிகண்டன் நர்த்தனமாடி சம்ஹாரம் செய்ததைக் கண்டு மகிழ மேலுலகில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கந்தவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், யட்சர்களுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் கூட வந்திருந்தனர். அப்போது அங்கே ரிஷப வாகனத்தில் வந்த சிவபெருமான் மணிகண்டன் நடனத்தைக் காண்பதற்காக தனது காளையைப் பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் கட்டி வைத்தாராம். அந்த புனிதமான இடமே சபரிமலையில் செல்லும் வழியில் உள்ள " காளை கட்டி " ஆசிரமம் ஆகும். தேவர்கள் பூமாரி பொழிந்து வெற்றி முழக்கமிட்டனர். அப்போது அங்கே ஓர் ஆச்சர்யம் நிகழ்ந்தது மண்ணில் மலை போல வீழ்ந்து கிடந்த மகிஷியின் உடலிலிருந்து விடுதலையாகி சாப விமோசனம் பெற்று எழுந்தாள் லீலாவதி அவள். மணிகண்டனை நெருங்கி அவனது பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள். ஐயனே தங்களின் புனிதக் கரங்கள் என் மீது பட்டதால் சாப விமோசனம் பெற்றேன். இனி நான் தங்களுக்கே சொந்தம் என்னைத் திருமணம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினாள். மணிகண்டன் புன்முறுவல் பூத்தான். லீலாவதி இந்த அவதாரத்தில் நான் நித்ய பிரம்மச்சாரியாகவே இருப்பதென்று தீர்மானித்திருக்கிறேன். எனவே என்னை அடைய வேண்டுமென்ற உன் எண்ணம் நிறைவேறாது. ஐயனே தாங்கள் இப்படி என்னை ஒரேயடியாக நிராகரிக்கக்கூடாது, கருணை காட்டுங்கள் ஸ்வாமி என்று லீலாவதி தழுதழுத்தாள். அப்படியெனில் ஒரேயொரு வாய்ப்பை உனக்கு அளிக்கிறேன். இங்கே மலையில் எனக்கென்று அமைக்கப்படும் கோவிலில்தான் நான் வீற்றிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க வருடந்தோறும் கோடானுகோடி பக்தர்கள் வருவார்கள் அப்படி இங்கே வரும் ஒவ்வொரு பக்தரும் அடுத்தமுறை வரும்போது மற்றொரு பக்தரைத் தன்னுடன் அழைத்து வருவர். இதனால் ஆண்டுக்காண்டு என் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாகப் பக்தர்கள் கன்னிச்சாமி என்ற பெயரோடு என்னை தரிசிக்க வருவார்கள். இந்த நியதி எப்போதாவது மாறி ஏதாவது ஒரு வருடத்தில் கன்னிச்சாமிகள் யாரும் வரவில்லை என்றால், அப்போது கண்டிப்பாக உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரைக் காத்திரு என்று பதிலுரைத்தவன் மேலும் தொடர்ந்து சொன்னான். என்னுடைய கோவிலுக்கருகிலேயே உனக்கும் ஒரு கோவிலை எழுப்பச் செய்கிறேன். நீ எனது இடப்பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரோடு கோவில் கொண்டு வீற்றிரு. மக்கள் உன்னை மஞ்சமாதா என்று வழிபடுவார்கள். என்னை தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களும் உன்னையும் தரிசித்து விட்டுத்தான் செல்வார்கள் என்று அருள் புரிந்தான். தர்மசாஸ்தா அருகிலேயே இருப்பது சாதாரண பாக்கியமா என்ன மஹா பாக்யம் ஆயிற்றே. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாள் லீலாவதி இவ்வாறாக மஞ்சமாதா ஐயப்பனின் அருகில் இடம் பிடித்தாள். மணிகண்டனின் அவதாரநோக்கம் நிறைவடைந்தது. ஆனால் காட்டுக்கு வந்த காரியம் முடிவடையவில்லேயே தாயின் தலைவலிக்குப் புலிப்பால் கொண்டு செல்ல வேண்டுமே. தேவேந்திரன் ஒரு பெண் புலியாகவும், மற்ற தேவர்கள் அனைவரும் புலிக் கூட்டங்களாக உருமாறினார்கள் மணிகண்டன் கம்பீரமாக அந்த வேங்கையின் மீது அமர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான புலிகள் கொண்ட புலிக்கூட்டம் அவனைப் பின் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக இன்னொரு காரியம் செய்ய வேண்டியிருந்தது. வதம் செய்த மகிஷியின் உடலைக் கற்களைப் போட்டு மூடும் வேலை. இறந்த மகிஷியின் உடல் உயிரற்றதாக இருந்தாலும் அரக்க உடல் என்பதால் மலை போல் வளரத் தொடங்கி விடும். எனவே மணிகண்டன் மகிஷியின் உடலைப் பாதாளத்தில் தள்ளிக் கற்களால் மூடினான். மற்றவர்களும் ஐயனுடன் சேர்ந்து ஆளுக்கொரு கல் எடுத்து வீசி கற்குவியலுக்குள் மகிஷியின் உடலைப் புதைத்தனர்.
அப்படிக் கற்களால் மூடப்பட்டு மகிஷி அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் " கல்லிடும் குன்று" என்று வழங்கப்படுகிறது. மணிகண்டன் பெண்புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து புலிக்கூட்டம் பின் தொடர பந்தள ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தான். நகர மக்கள் உறுமியபடி வந்த ஆயிரக்கணக்கான புலிகளையும் பிரம்மாண்ட வேங்கையின் மீது கோடி சூர்ய பிரகாசத்துடன் அழகுற ஆரோகணித்து வந்த மணிகண்டன் திருவுருவத்தையும் கண்டு திகைத்தனர் வியந்தனர் பயந்தனர் ஒளிந்திருந்து கண்குளிர தரிசித்தனர்.
அரண்மனையிலோ மன்னன் ராஜசேகரன் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர், அரசி கோப்பெருந்தேவியோ திடுக்கிட்டுப் போனாள். புலிப்பால் கொண்டு வர கானகம் போனவன் கொடிய மிருகங்களால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுவான் என்று நினைத்திருந்தவளுக்கு மணிகண்டன் ஒட்டுமொத்த புலிக் கூட்டத்துடனே வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அம்மா தங்களது தலைவலியைப் போக்க இதோ புலியுடனேயே வந்துவிட்டேன் தாயே. தாங்கள் வேண்டிய அளவு பாலைக் கறந்து கொள்ளலாம் என்று அன்னையிடம் புன்னகையுடன் கூறிய மணிகண்டன் தந்தையிடம் திரும்பி அப்பா வைத்தியரை அழைத்து வரச் சொல்லுங்கள். உடனே சிகிச்சையை தொடங்கட்டும் என்றான்.
மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை மார்புறத் தழுவினான். மணிகண்டா இது நிச்சயமாக மானிடர் செய்யக்கூடிய காரியமே இல்லை. நீ புலிப்பால் கொண்டுவர கானகம் சென்றதுமே, உன் அன்னைக்கு தலைவலி தீர்ந்துவிட்டது உண்மையைச் சொல் நீ யார் என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
கோப்பெருந்தேவியோ மணிகண்டனின் காலடியில் சரிந்தாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மணிகண்டா என்னை மன்னித்து விடப்பா. நீ தாய் என்றழைக்கத் தகுதியில்லாதவள், நான் என் வயிற்றில் பிறந்த பிள்ளை ராஜ்ஜியத்தை ஆளவேண்டும் என்ற ஆசையில் கடவுள் எனக்களித்த தெய்வமகனான உன்னைக் காட்டுக்கு அனுப்பிவைத்த பாவி நான். போலியாக நடித்து புலிப்பால் கேட்ட எனது ஈனச் செயலை மன்னித்துவிடு மகனே என்று கதறினாள். மன்னன் ராஜசேகர பாண்டியன் உண்மையை உணர்ந்தான் கோபம் கொண்டான். வீரர்களே அந்த அயோக்கிய மந்திரியையும் சதிக்கு உடந்தையாக இருந்த அரண்மனை வைத்தியரையும் உடனடியாக கட்டி இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வேண்டாம் தந்தையே எல்லோரையும் மன்னித்து விடுங்கள். விதி இழுத்துப் போன பாதையில் தங்களையுமறியாமல் தவறிழைத்தவர்கள் அவர்கள்.
நான் இந்த பூமிக்கு வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற அவர்களும் இவ்வாறாக எனக்கு உதவியிருக்கிறார்கள் என்று தடுத்துப் பேசினான் மணிகண்டன். பின்னர் புலிகளிடம் திரும்பி இந்திரனே தேவர்களே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி இனி நீங்கள் தேவலோகம் செல்லலாம் என்று சொல்ல அடுத்த நொடியே புலிக்கூட்டங்கள் மறைந்தது. மன்னன் ராஜசேகர பாண்டியன் ஏதும் விளங்காதவனாய் மணிகண்டா யாரப்பா நீ என்ன இந்தத் திருவிளையாடல் என்று கேட்டான்.
அதை நான் சொல்கிறேன் மன்னா என்றபடி உள்ளே வந்தார் அகத்திய மாமுனிவர். மன்னன் ராஜசேகர பாண்டியனுக்கும் அரசி கோப்பெருந்தேவிக்கும் மணிகண்டனின் அவதார நோக்கத்தின் மகிமையை ஆதி முதல் அந்தம் வரை விளக்கிக் கூறினார். மன்னரும் அரசியும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
ஹரிஹர புத்ரனா இத்தனை நாட்கள் தங்கள் வீட்டில் வளர்ந்து தங்கள் மடியில் தவழ்ந்து விளையாடியது. ஆஹா நாங்கள் எத்தனை பாக்யசாலிகள். மகனே மணிகண்டா உன் அவதார நோக்கம் முடிந்து விட்டாலும் எங்களுக்கு செய்யவேண்டிய இன்னொரு கடமை மிச்சம் உள்ளது. நாளையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வித்து விடுகிறேன் பந்தள தேசத்திற்கு மன்னனாகி இனி நீதான் நாட்டைப் பரிபாலிக்க வேண்டும் என்றான் ராஜசேகரன். ஆம் கண்ணே அப்பா சொல்படி உடனே ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றாள் கோப்பெருந்தேவி. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் மகிஷியை அழிக்கும் அவதார நோக்கத்திற்குப் பிறகு இந்தக் கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டியது என் கடமை. அதுவே எனது அவதாரத்தின் நோக்கமாகும். அதற்காகவே எனக்கென்று ஓரிடத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தே என்னை நாடி வரும் பக்தர்கள் துயர் தீர்த்து அவர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறேன். தாங்கள் எனக்களிப்பதாகச் சொல்லும் சிம்மாசனத்தை விட என்னைத் தேடி வரும் பக்தர்களின் இதய சிம்மாசனமே எனக்கு விருப்பமானது என்று முடிவாகச் சொன்னான் மணிகண்டன். மன்னன் ராஜசேகரன் மனம் வருந்தினாலும் எல்லோருக்குமான இறைவனை தன் சுயநலத்திற்காகப் பிடித்து வைத்துக்கொள்வது சரியல்ல என்று உணர்ந்தான். அவன் மணிகண்டனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். மகனே உனது பட்டாபிஷேகத்திற்காகவே நான் ஆசை ஆசையாக ஆடை ஆபரணங்களைச் சேகரித்திருக்கிறேன் அவற்றை எனக்காக ஒருநாளாவது அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தர வேண்டும் பகவானே என்று இறைஞ்சினான். ஐயனும் மன்னன் ராஜசேகரின் அன்புக்கு கட்டுப்பட்டு ஆகட்டும் தந்தையே நான் கோயில் கொண்ட பிறகு அந்த ஆடை ஆபரணங்களை மகர சங்கராந்தி தினத்தன்று அணிந்து தங்களுக்குக் காட்சி தருவேன் என்று உறுதியளித்ததோடு அந்த திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரிமலைக்கு எடுத்து வரப்பட வேண்டும் எந்தெந்த ஆலயங்களில் இறக்கி பூஜை செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதையும் மன்னனுக்கு எடுத்துரைத்தான்.

சபரிமலை ஆலயம்: மணிகண்டன் மன்னனிடம் தந்தையே தங்களது ராஜ்ஜியத்தில் எனக்கென்று கொஞ்சம் நிலத்தை தர முடியுமா என வினவினான். உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமோ எடுத்துக் கொள் மகனே என்றான் மன்னன். மறுகணம் ஐயன் தந்தையே நான் இப்போது வில்லில் அம்பு பூட்டித் தொடுக்கப் போகிறேன். அந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அந்த இடத்தை எனக்களித்தால் போதும். அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள். அங்கிருந்து நான் அருள்பாலிக்கிறேன் என்றான் மணிகண்டன் பின் வில்லெடுத்து அம்பு தொடுத்தான் அம்பு சென்று விழுந்த இடம் சபரிமலை. அக்கணமே ஐயன் அனைவரின் கண்ணெதிரே ஜோதிப் பிழம்பானான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தான். அந்த ஜோதியானது சபரிமலையில் சென்று இறங்கியது. கோடி சூரியப் பிரகாசத்துடன் அந்தப்பகுதி ஜொலித்தது கலியுகத்தின் மனித மனங்களின் இருளைக் கிழித்தெறியத் தொடங்கியது. ஐயன் சொற்படி ஆலயத்தை உருவாக்க முனைந்தான் மன்னன். அவனுக்கு பக்கபலமாக நின்று ஆலோசனைகளை அள்ளி வழங்கினார் அகத்திய மாமுனிவர். கோயிலின் ஒவ்வொரு அமைப்பையும் அகத்தியருடன் கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படியே கிழக்கு நோக்கி பதினெட்டுப் படிகளுடன் கூடிய கோயிலைக் கட்டி முடித்தான் ராஜசேகர பாண்டியன்.

பதினெட்டுப்படிகள்: பதினெட்டுப்படிகள் தாத்பர்யம் என்ன அகத்திய மாமுனிவர் மன்னன் ராஜசேகரனுக்கு விளக்கினார். இந்தப் பதினெட்டுத் திருப்படிகளும் பதினெட்டுத் தத்துவங்களைக் குறிக்கின்றன. மெய் ; வாய் ; கண் ; மூக்கு ; செவி ஆகிய ஐந்து இந்திரியங்களும்
காமம் ; குரோதம் ; லோபம் ; மோகம் ; மதம் ; மாச்சர்யங்கள் ; திதிஷை ; டம்பம் ; ஆகிய அஷ்ட ராகங்களும்
சத்வ ; இராஜஸ ; தாமஸ குணங்களும் வித்யையும் அவித்யையும் சேர்த்து தத்துவங்கள் பதினெட்டாகும்.
தத்வாதீனாகப் பகவான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் விதம்தான் இந்த பதினெட்டுப்படிகள்.
அகத்திய மாமுனிவரின் இந்த விளக்கம் கேட்டு மனம் மகிழ்ந்தான் மன்னன் ராஜசேகரன்.
கோயில் கட்டி முடித்ததும் சாஸ்தாவுக்கு எந்த வகையிலான விக்ரஹம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தது? கேரளப் பிரதேசத்தை உருவாக்கியவரான பரசுராமரே அதைத் தீர்மானித்தார்.
சாஸ்தாவின் பலவித ரூபங்களில் இரு கால்களையும் குத்திட்டு யோக பட்டத்துடன் பந்தனம் செய்த வண்ணம் தத்வமஸி என்னும் சின் முத்திரையுடன் கூடிய பகவானின் திருவுருவமே ஏற்றது என்று சொன்னார் பரசுராமர். ஒரு மார்கழி மாதக் கடைசி நாளில் சபரிமலையில் ஆலயத் திருப்பணிகள் இனிதே முடிந்தது. மகா சங்கராந்தி தினமான தை மாதப்பிறப்பு நன்னாளில் ( கிருஷ்ண பக்ஷம் ; பஞ்சமி திதி ; உத்திரம் நக்ஷத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் ) பரசுராமர் ஸ்ரீ தர்மசாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்தார்.

இனி ஸ்வாமியை எப்படி அழைப்பது : ஐயனை அன்னையாகவும் அப்பனை தந்தையாகவும் கொண்டதனால் அவன் ஐயப்பன் ஆகிறான். மேலும் ஐயன் என்றால் உயர்ந்தவன் பெரியவன் என்றெல்லாம் பொருள் உண்டு. மேலும் பரசுராம க்ஷேத்ரமான கேரளாவில் எல்லாமே அப்பன்தான். உதாரணமாக குருவாயூரப்பன், ஏற்றுமானூரப்பன் வைக்கத்தப்பன், காக்கரையப்பன் அந்த வகையில் ஐயனுடன் அப்பனைச் சேர்த்து ஐயப்பன் என்று அழைக்கிறார்கள். குலகுருவாம் அகத்திய மாமுனிவர் துணையிருந்து பூஜை விதிகளை கிரமமாக நிறைவேற்றி வைத்தார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபத்தில் காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதே போல் தனது குருவுக்கு வாக்களித்தபடி மணிகண்டன் குரு தட்சணையாக ஆண்டுதோறும் மகரஜோதியாக காட்சி தருகிறார்.

இவ்வாறாக கலியுகத்தின் உன்னத புனிதத் தலமாக பூலோக சொர்க்கம் சபரிமலை ஆலயம் உருவானது.

ஐயனே வேதம்
ஐயனே யாகம்
ஐயனே மோக்ஷம்
ஐயனே ப்ராணம்
ஐயனே தத்வம்
ஐயனே நித்யம்
ஐயனே ஜீவணம்
ஐயனே லோகம்
ஐயனே ஸகலம்
ஐயனே ஸ்மரணம்
ஐயனே சரணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment