Wednesday, 27 September 2017

வள்ளி மலை - பெருமை மற்றும் புராணம்

வள்ளி மலை
அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி

வள்ளி மலை பற்றி ,



அதன் பெருமைகள் பற்றி காண்போம். வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்துக்கு அருகில் உள்ளது. ஆற்காடு, ராணிபேட் , திருவலம், வேலூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. பொன்னை அருகில் - ஓட்டநேரி என்னும் இடத்தில் விநாயகர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் எளிதில் காண முடியாத அதிசயமாக நவகிரகங்களும் தனி தனி பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் நவ கிரக கோட்டை உள்ளது. வெளியூரில் இருந்து வருபவர்கள், அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கும் சென்று வரலாம். இங்கிருந்து திருத்தணி - அரை மணி நேர பயணம் தான்.

சரி, இனி வள்ளிமலை... :

ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக்கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து, "வள்ளி' என பெயரிட்டு வளர்த்தான்.

கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார்.

நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் "குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள்.

முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

தேரோட்ட சிறப்பு: பெரும்பாலும் கோயில்களில் தேரோட்டம் ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் இத்தலத்தில் தேர், நான்கு நாட்கள் ரதவீதி (மலைப்பாதை) சுற்றி நிலைக்கு வருகிறது. வழியில் வேடுவ மக்கள் தங்கள் வீட்டுப்பெண்ணான வள்ளிக்கு சீதனமாக அரிசி, வெல்லம், தானியம், காய்கறி, தேங்காய், பழம், ஆடைகள் கொடுக்கின்றனர்.

விழாவின் கடைசி நாளன்று (மாசி பவுர்ணமி) வள்ளி கல்யாணம் நடக்கிறது. அப்போது வேடுவர் குலத்தினர் தேன், தினைமாவினை தங்கள் மருமகனான முருகனுக்கு படைக்கின்றனர்.

முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி நான்கு நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது சுவாமி, சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.

கோபுரத்தின் கீழ் முருகன்: பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. அருணகிரியாரால் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய "குமரி தீர்த்தம்' என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன.

யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை, "யானைக்குன்று' என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம். மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் திருத்தணி இருக்கிறது.

சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
மேலே உள்ள படத்தைப் பாருங்கள். மின்னஞ்சலில் நம் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தது.

பொதுவாக சூக்கும உருவங்கள் அல்லது ஆவி உருவங்களைப் பலர் நம்புவதில்லை; அவை புகைப்படத்தில் சிக்குவதும் இல்லை. ஆனால் வள்ளிமலையில் 61-ஆம் ஆண்டு மலைவலம்-படிவிழாவில் மலைப்பாதையில் அன்பர்கள் திருப்புகழ்-திருமுறைப் பாராயணம் செய்து கொண்டு சென்ற போது திரு.T.சிவானந்தம் என்கிற சென்னை அன்பர் ஒருவர் செல்போன் காமராவில் படமெடுத்து வந்து அதைக் குறுந்தகடாக்கிப் போட்டுப் பார்த்த போது சுமார் 85 ஆண்டுகட்கு முன் மறைந்த முருகன் அருள் பெற்ற அடியவரான பாம்பன் சுவாமிகள் மலையின் மீது சூக்கும உருவில் அமர்ந்திருந்தது பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த அற்புதம் நிகழ்ந்தது 13 -1 -2009 .

நம்புபவருக்கு ஆண்டவன் , ஏதோ ரூபத்தில் தொடர்ந்து உதவி கொண்டுதான் இருக்கிறான்..
ஸ்வாமி நாதன் கோபாலன்
ஸ்ரீ அகஸ்தியர் ஞானம் இல்லம்

No comments:

Post a Comment