Tuesday, 26 September 2017

அகத்தியர் அருளுரை - ஆப்பூர் ஔஷத கிரி நித்ய கல்யாண பெருமாள்

ஸ்ரீ அகஸ்தியர் சித்தர் போற்றும் ஆப்பூர் ஒளஷதகிரி ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்

ஸ்ரீ அகஸ்தியர் கூறும் ஒளஷதகிரி பெருமைகள் :

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் அகுதொப்ப ஆப்பூர் கிரி என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளானை கூறியிருக்கிறோம்.அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே,(பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று,அந்த ஆப்பூர் கிரிக்கு சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம்,எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து,அங்குள்ள வானரங்களுக்கு நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும்.பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு.உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில்,திருமண தோஷம் நீக்குவதற்கும்,திருமணதிற்கு பிறகு கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும்,குழந்தை பாக்கியம் தருவதற்கும்,லோகாயத்திலே சுக்ரனின் அனுக்கிரகம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.அதையும் தாண்டி,இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.முழுமதி தினமான பௌர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு,ஆத்மாக்களுக்கு ஒளி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள்.எனவே அது ஒரு சித்த பூமி,ஜீவ பூமி,அது ஒரு மூலிகை வனம்.அங்குள்ள மூலிகைகள் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.

சென்னை நகருக்கு மிக அருகில் இப்படி ஒரு புண்ணியத் தலத்தில்- மிக உயர்ந்த மலைப் பகுதியில் ஸ்ரீநித்யகல்யாண பிரஸன்ன வேங்கடேச பெருமாள், தான் மட்டும் தனித்து வீற்றிருந்து அற்புதக் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை, ‘ஒளஷதகிரி’ எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பிக் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் சொல்கிறார், இந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வரும்  பட்டாச்சார்யர். ‘‘இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ஸ்ரீராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்ரீராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன், கண் கலங்கினார். ஸ்ரீராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ஸ்ரீராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால், குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் புயல் வேகத்தில் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ஸ்ரீராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே, அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது, அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஒளஷத கிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால், இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால், இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து, மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு உட்பட பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூலிகைகள் இந்த ஒளஷத கிரியில் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு வரும் விஷயம் தெரிந்த பக்தர்கள், தரிசனம் முடிந்து செல்லும்போது சில மூலிகைகளையும் தங்களுடன் பறித்துச் செல்வது உண்டு.

எப்படி செல்வது?

செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆப்பூர் வழியே செல்கின்றன. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்துகள் ஜி.எஸ்.டி. சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் வரை பயணித்து, அதன் பின் இடப்புறம் செல்லும் சாலையில் பயணிக்கும். சிங்கப்பெருமாள்கோவில் ரயில்வே ஸ்டேஷன் லெவல் கிராஸிங்கைத் தாண்டி சுமார் ஆறு கி.மீ. பயணித்த பின், ‘ஆப்பூர் டாங்க் நிறுத்தம்’ என்ற இடத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து, ஆலயத்தை அடைய சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஆட்டோவிலும் வரலாம். தாம்பரத்தில் இருந்து படப்பை செல்லும் நெடுஞ்சாலையில் படப்பைக்கு அடுத்து வரும் ஒரகடம் கூட் ரோட்டில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இந்த ஆப்பூர் கோயில் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 8 - 10:00. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் காலை 8 - 12.00.
மாலை நேரங்களில் கோவில் திறக்கபடுவதில்லை.விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுபடும்.பக்தர்கள் கோவில் அச்சர்கரிடம் தொடர்புகொண்டு செல்வது நலம்.
ஆலயத் தொடர்புக்கு:
ஸ்ரீ ராம் பட்டாச்சார்யர்.
மொபைல்: 9952110109
மலைப் பாதை துவங்கும் இடத்தில் வண்டிகளை வசதியாக நிறுத்திவிட்டுச் செல்ல முடியும். மலைக்கு மேலே வண்டிகள் செல்வதற்கு வசதி இல்லை. நடந்துதான் செல்ல வேண்டும். முதியவர்களும் மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல், விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருப்பது சிறப்பான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் 508 படிகள் கொண்ட இந்த மலையை இயல்பாக நடக்கும் சுபாவம் கொண்ட ஒருவர், அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரத்துக்குள்ளாக ஏறி விட முடியும்.

பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய கோயில். மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள், அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெரு மாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படு கிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், வசிஷ்டர் உள் ளிட்ட ஏராளமான மகரிஷி களும் இந்த மலையில் தங்கி இருந்து, தவம் செய்து, பேறு பெற்றதாகச் சொல் கிறார்கள்.
பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே, பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ‘‘திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும். இது போன்ற மலை தங்கள் கனவில் வந்ததாகவும் பெருமாள் அழைத்ததா கவும் சில பக்தர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, ஓரளவு பக்தர்கள் தற்போது வர ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். புரட்டாசி சனிக் கிழமை, வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு தினம், ஸ்ரீராமநவமி, மாத பௌர்ணமி போன்ற தினங்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம், ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது

No comments:

Post a Comment