Saturday, 9 September 2017

சிதாகாச தரிசனம்

சிதாகாச தரிசனம்
இதை சிதாகாய தாரணை எனவும் கூறலாம். இது தன்னைத்தானே உள்ளே பார்க்கும் [அந்தர்முக] தியானமாகும். உள்ளே உள்ள இடைவெளிகளை பார்ப்பது ஆகும். ஆனால் இது உடலில் தலையில், வயிற்றில் உள்ள வெற்றுவெளி அல்ல. இந்த சிதாகாசம் என்பது உணர்வுகள் இருக்கும் உற்பத்தி ஆகும் சூன்ய பிரதேசம். இது ஆக்ஞா சக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட வெளியாகும். இதுதான் மனத்தின் தொடர்பை ஏற்படுத்தகூடியது. இந்த தொடர்பினால் மனிதன் தன் மனதை அடையவும் உள்மனதை அடையவும் அதையும் மீறி அதற்கப்பால் உள்ள மிக நுண்ணிய உணர்வுள்ள மகா உள்மனதையும் தொடர்புகொள்ள முடியும். இந்த நிலையை சிதாகாச தாரணை மூலம் எட்டலாம். உங்களது உள் உணர்வுகளின் ரகசியங்களையும் மனதின் நிலைகளையும் உள்ளத்தின் நிலைகளையும் தெரிந்துகொள்ள ஓர் அற்புதமான ரகசியத்தை வெளிக்கொணர அமைந்த திறவுகோலாகும். இந்த சிதாகாச தரிசன சூட்சுமம். இந்த சாதனையை முடிப்பவர்கள் அரும்பெரும் காட்சிகளை காணக் கூடிய சித்தர்களாக ஆகி விடுவார்கள்.

சாதனை பயிற்சி முறை
அமைதியாக ஓர் ஆசனத்தில் முதுகு தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை இரு முழங்கால்கள் மீதோ அல்லது மடியில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து உட்காரவும். இவ்வாறு அசையாமல் உட்காரவேண்டும். அமைதியாக கண்களை மூடிக் கொண்டு காதில் என்ன சப்தம் கேட்கிறது என கவனிக்க வேண்டும். மற்ற சப்தங்கள் கேட்ககூடும். இந்த வெளிநிலையில் இருந்து விலகி இனி உடல் அசைவற்று நிச்சலனமாக உட்கார்ந்து இருப்பதை மட்டும் நினைக்க வேண்டும் உணர வேண்டும். அமைதியாக உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் உடலில் உள்ளே போய் வெளியே வருவதையும் மட்டுமே உணர்ந்து கொண்டு இருக்கவும். வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. நீங்கள் சுவாசம் விட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் சுவாசம் தன்னிச்சையாக நடந்து கொணடே இருக்கும். ஒரு சமயம் உள்ளே அதிக சுவாசம் போகும் வெளிவரும். ஒரு சமயம் உள்ளே சுவாசம் குறைந்து வரும். உள்ளே வெளியே வந்து போய் கொண்டிருக்கும் அதை அப்படியே கவனித்து வரவும். நீங்கள் சுவாசத்தை இழுக்கவோ வெளியேற்றவோ செய்ய வேண்டாம். இயற்கையாக சுவாசம் அதுவாக உள்ளே போய் வருவதை மட்டும் கவனிக்கவும். இப்போது உடல் அசையாமல் இருந்து கொண்டிருப்பதை மட்டும் உணர்ந்து கொண்டிருக்கவும்.

இனி சிதாகாசத்தை உணரவும். உங்கள் உள்ளே உள்ள வெளியை, அதாவது சூன்யத்தை இந்த வெளியானது சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சரீரம் முழுவதுமே பரவிக் கிடக்கும். இது உங்கள் தலையில் உள்ளதோ நெஞ்சில் உள்ள இடைவெளியோ வயிற்றில் உள்ளதோ அல்ல. ஆனால் சரீரம் முழுவதும் பரவி இருக்கும் வெளி ஆகும். இது ஸ்தூல சூட்சுமத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இருக்கும். உங்கள் மொத்த உருவத்திலும் இருக்கக் கூடியது இந்த சிதாகாசமாகும். இந்த சிதாகாசத்தை பார்த்தல் அல்லது தாரணை அல்லது சிதாகாச உணர்வு என்பது சரீரம் முழுவதுமே உள்ள சிதாகாசத்தை வெளியை சூன்யத்தை உணர்வதாகும். இது முதலில இருண்டு கிடக்கும்.

உங்களது உருவில்லாத அருவத்தை உணரவும். இந்த உருவ அருவ தோற்றம் இருண்டே இருக்கும். இதன் வண்ணம் அதாவது சிதாகாச வண்ணம் கருமை அல்ல. ஆனால் பல வண்ணங்கள் மாறி மாறி வண்ணப் புள்ளிகளாக தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். வண்ண வண்ண நிறங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். தோன்றும் மறையும். எதுவும் நிரந்தரமாக நிற்காது. இந்த வண்ணத் தோற்றத்தையும் மறைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கவும். அப்போது பல நிறங்கள் உடனே தோன்றி உடனே மறைந்து கொண்டே இருக்கும். மணிக்கு மணி நாளுக்கு நாள் அதன் போக்கில் வண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். இந்த சிதாகாசம் என்பது ஓர் அரூபமாகும். இவ்வாறு சிதாகாசத்தில் மாறி மாறி வந்து மறையும் நிறங்களை கவனித்து வர வேண்டும். இந்த வண்ணங்கள் தான் சரீரத்தில் உள்ள ஜீவசக்திகளின் பிரதிபலிப்புகளாக விளங்குகின்றன. இந்த சிதாகாசமானது சரீர முழுவதுமே வியாபித்து இருக்கிறது. இந்த சிதாகாசமானது சரீரம் அல்ல. ஆனால் சரீரமானது சிதாகாசத்திற்குள் இருக்கிறது. மனம் சர்வமும் ஒடுங்கி ஒரு நிலைப்பாட்டு உள்ளே பார்க்கும் போது ஒரு சூன்ய வெளி தோன்றும். அதுவே சிதாகாசம். இது சரீரம் முழுவதும் பரவி கிடக்கிறது. இவைகளை மானசீகமாக உணர்ந்து வர வேண்டும். இவைகளை பயிற்சி செய்யும் போது பலவித ஒளிகளை பல ரூபங்களில் காணலாம்.

இப்போது உங்கள் உணர்வுகளை புருவமத்தியிலே நிறுத்தி வைத்து அங்கேயே கவனமாகப் பார்க்கவும். அப்போது உங்கள் மானசீக உருவத்தை அங்கே பார்க்கவும். சிந்தனையை சிதாகாசத்தில் வைத்திருக்கும் போது உங்கள் புருவத்தில் ஒரு குகை மாதிரி வட்டத்தில் பார்க்கவும். அந்த வழி மிகச் சிறியதாகத் தெரியும். இப்போது ஸ்தூல தேகத்தைப் பார்த்து விட்டு, சூட்சும சரீரத்தை காண முயற்சி செய்யவும். அப்போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அப்போது உங்கள் சிதாகாசத்தை கண்டு உணரலாம். பல வண்ணங்கள் புள்ளி புள்ளிகளாகதோன்றி உடனே மறையும். இப்படியே வண்ணங்கள் வந்து போய் கொண்டே இருக்கும். வினாடிக்கு வினாடி இதன் வேகம் அதிகரிக்கும்.

இதன்பின் நிதானமாக கவனத்துடன் வண்ணங்களில் லயித்து இருக்கவும். இப்போது புருவ மத்தியை கவனித்தால் அங்கு குகை போல ஒரு துவாரம் இருக்கும். அந்த குகையை பார்த்தால் ஒரே இருட்டாக இருக்கும். மேலும் நீங்கள் அதனுள் பிரவேசித்து விட்டால் ஒரே இருட்டு மயமாகத் தான் உணர்வீர்கள். இருட்டில் போய்கொண்டே இருப்பதை உணர்வீர்கள். அதுதான் சிதாகாசம். இப்போது ஓம் ஓம்என 7 தடவை மனதில் உச்சரிக்கவும். இந்த நிலையில் உங்களை சுற்றி ஓர் இருண்ட பிரதேசம் இருப்பதை உணர்வீர்கள். உங்கள் உடலானது மின்மினி போல் விட்டு விட்டு சிறிய துகள்களாக பிரகாசித்து மறையும். இதன் பின் நிதானமாக வெளியே வரவும். நீங்கள் உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் விடுவதையும் உணரவும். இப்படியாக நிதானமாகவும் பொறுமையுடனும் இப்பயிற்சியை செய்து வந்தால் இதனுடைய அருமையான பலன்களை உணர முடியும். இந்த சிதாகாச தரிசனம் கிடைத்து விட்டால் நீங்கள் ஒரு பெரிய சாதகராக ஆகிவிடலாம்.

இதுதான் பிண்டத்தில் அண்டம் எனும் அண்டவெளிபோல் சிதாகாசவெளி என்பது ஆகும். அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடி புருவமத்தியில் பார்வையை வைத்து அதன் காட்சிகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே சமயத்தில் கேசரி முத்திரையில் இருந்து கொண்டு உஜ்ஜயி பிராணயாமம் செய்து கொண்டே உள்வெளி ஜோதியை பல வர்ணத் துகள்களாக பார்க்கலாம். இதன் பலன்கள் மிக அற்புதமானவை. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் புதுப்பிக்கப்பட்டது போல அற்புதமாக இயங்கும். நோயற்ற வாழ்வுடன், நினைத்ததை முடிக்கும் வலிமையும் உண்டாகும். ்

No comments:

Post a Comment