Saturday, 14 October 2017

மானசரோவர் ஏரி அதிசயங்கள்

மானசரோவர்
ஏரி

இமய மாமலையின் வடக்கே திபெத்தின் எல்லையில், திருக்கயிலை மலையின் திருச்சன்னிதியில் அமைந்துள்ள பரம பவித்ரமான மானசரோவர ஏரியே அன்னை சதி தேவியின் வலது திருக்கரம் விழுந்து நிலை கொண்ட சக்தி பீடமாக போற்றப்படுகின்றது. பீடேஸ்வரியின் திருநாமம் தாட்சாயணி, தல பைரவரின் திருநாமம் 'அமரர்'.

ஞான சம்பந்தப் பெருமான் திருக்காளத்தி தலத்திலிருந்து, சிவஞானக் கண்களாலேயே இத்தலத்தினைத் தரிசித்துத் திருப்பதிகங்களையும் அருளியுள்ளார். நாவுக்கரசு சுவாமிகள் நேரிலேயே இத்தலத்திற்குச் சென்று தரிசித்து, நான்கு திருப்பதிகங்களை அருளியுள்ளார். அவற்றுள் மூன்று 'போற்றித் திருத்தாண்டகங்கள்' எனவும் குறிக்கப் பெறுகின்றது. சுந்தரரின் இறுதித் திருப்பதிகம் பெற்ற தலமாகவும் திகழ்வது திருக்கயிலை. திருஅருட்பாவில் வள்ளலார் இத்தலத்தினைப் போற்றிப் பரவியுள்ளார்.

'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று ஆதி மூர்த்தியுடன் வாது புரிந்த திருமுறை ஆசிரியரான நக்கீரர், 11ஆம் திருமுறையுள் தொகுக்கப் பெற்றுள்ள 'கயிலை பாதி காளத்தி பாதி' எனும் தொகுப்பினை இத்தலத்திற்கென அருளியுள்ளார். அருணகிரிப் பெருமான் திருப்புகழில், ரசதகிரி என்று திருப்பெயரால் திருக்கயிலையைக் குறித்தருளி, கயிலையிலுறையும் கந்தவேளைப் போற்றியுள்ளார். காரைக்கால் அம்மையார் தலையினால் நடந்து கயிலையுறைப் பரம்பொருளைத் தரிசித்த சீர்மை பொருந்திய தலமாகவும் திகழ்வது திருக்கயிலை.

திருக்கயிலைக்கு 20 மைல் தொலைவில் அமைந்துள்ளது மானசரோவர தீர்த்தம் ஆதியில் அன்னையின் திருக்கரம் விழுந்ததால் மிகப் பெரும் அளவில் பள்ளமொன்று இவ்விடத்தில் உருவாகின்றது. பின்னாளில் இப்பகுதியில் தவமியற்ற வரும் மரீசி முனிவர், திருக்கயிலையைச் சுற்றி அமைந்திருந்த நீர் நிலைகள் அனைத்தும் உறைந்திருப்பதைக் கண்டு, நீராடி அனுஷ்டானம் புரியும் வழிவகையின்றி, தமது தந்தையாரான நான்முகக் கடவுளிடம் விண்ணப்பிக்கின்றார்.

பிரமன் சிவபரம்பொருளை உளமாரத் துதித்துப் பணிய, முக்கண் முதல்வரின் திருவருளால் திருக்கயிலையிலுள்ள பனிக் கட்டிகள் அனைத்தும் உருகி, உலகீன்ற உமையன்னையின் திருக்கரம் வீழ்ந்த பெரும் பள்ளத்தை நிறைக்கின்றது. இதுவே மானசரோவரம் எனும் பரம புண்ணியமான தீர்த்தமாக இன்று போற்றப்பட்டு வருகின்றது. சமானமில்லாத பவித்திரத் தன்மை கொண்ட இத்தீர்த்தம், கோடிப் பிறவிகளின் வல்வினைகளை வேரோடு நீக்கி, மோட்ச சாதனமாகவும் விளங்க வல்லது என்று புராணங்கள் அறுதியிடுகின்றன.

வேத வியாசர் அருளிய ஸ்காந்த புராணத்தின் 'மானஸ்காந்தம்' எனும் பகுதி 'மானசரோவர தீர்த்தத்தின்' சீர்மையினைப் பறைசாற்றுகின்றது. இத்தலத்தில் அனுதினமும் தனித்துவமாக நடந்தேறும் தெய்வீக நிகழ்வொன்றும் உண்டு. அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான பிரம்ம முகுர்த்த காலத்தில், தேவர்கள்; கந்தர்வர்கள்; யட்சர்கள் ஆகியோர் இப்புண்ணிய தடாகத்தில் மூழ்கியெழுந்து, திருக்கயிலை நாதரையும், உமையன்னையையும் பணிந்துப் போற்றிச் செல்வர்.

தேவர்களின் நுண்ணுடம்பு இப்புவி வாழ் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாதது, எனினும் அதிகாலை வேளையில், வானிலிருந்து பல ஜோதிகள் ஒரே நேரத்தில் இத்தடாகத்தில் இறங்கும் திருக்காட்சியையும், சில நிமிட நேரத்துக்குப் பின் அவையனைத்தும் மீண்டும் மேலேழும்பிச் செல்லும் அரிய நிகழ்வினையும் யாத்ரீகர்கள் பலர் தரிசித்து வியந்துள்ளனர். எவ்வகையிலேனும் இத்தலத்தினைத் தரிசித்துய்வு பெறுவதை வாழ்நாள் முயற்சியெனக் கொள்ளுதல் வேண்டும்...

No comments:

Post a Comment