Wednesday, 18 October 2017

சப்தஸ்தானம்

சப்தஸ்தானம் என்ற முறையில் ஒரு திருக் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு கோயில் மூர்த்திகளை தரிசனம் செய்து வழிபடுகிறோம் அல்லவா? அதே போல ஒரு திருத்தலத்தைச் சுற்றி எட்டு முறை வழிபடும் அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு என்ற முறையையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். இத்தகைய திருத்தலங்களில் ஒன்றாக திகழ்வதே ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருத்தலாமாகும்.

இம்முறையில் ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு ஸ்ரீரங்க நாதப் பெருமாளை தரிசிக்க வேண்டும். தொடர்ந்து காசி விஸ்வநாதரை மீண்டும் தரிசனம் செய்து விட்டு திருவெள்ளறை ஸ்ரீவடஜம்பு நாதரைத் தரிசித்தல் வேண்டும். தொடர்ந்து ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளை தரிசனம் செய்து அதன் பின் மீண்டும் ஸ்ரீவட ஜம்பு நாதரை தரிசித்தல் வேண்டும். மூன்றாம் கட்டமாக திருஆனைக்காவில் அருள்புரியும் ஸ்ரீஜம்புநாதரை தரிசித்த பின்னர் மீண்டும் ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஆறு முறை சிவ மூர்த்திகளையும் இரண்டு முறை பெருமாள் மூர்த்திகளையும், மொத்தத்தில் எட்டு மூர்த்திகளை ஒரு சேர வழிபடும் முறையே அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு என்று முற்காலத்தில் போற்றப்பட்டது. இவ்வழிபாடு மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்படுவதால் வில்வதள யாத்திரை வழிபாடு எனவும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் காசி விஸ்வநாதர் திருத்தலத்தில் நவகிரக மூர்த்திகள் எண்கோண பீடத்தில் எழுந்தருளி உள்ளதால் இத்தலத்தில் அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களுக்கு ஒரு சிறந்த வரப் பிரசாதமாகத் திகழ்வதே இத்தகைய வில்வதள யாத்திரை வழிபாடாகும். இவ்வழிபாட்டில் சுக்ர சக்திகளும், சந்திர சக்திகளும், பெண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான தீர்த்த சக்திகளும் நிறைந்து விளங்குவதால் பெண்களுக்கு உரிய ஒரு சிறப்பான வழிபாடாக இது அமைகிறது. முடிந்த மட்டும் பாத யாத்திரையாக இந்த வழிபாட்டை மேற் கொள்தலால் சிறந்த பலன்களைப் பெறலாம். காசி யாத்திரையை மேற்கொள்வோர் யாத்திரைக்கு முன்னும் பின்னும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி யாத்திரையை நிறைவேற்ற வேண்டும் என்ற நியதி இருப்பதைப் போல திருமணத்திற்கு முன்னும் பின்னும் இத்தகைய அஷ்ட மூர்த்தி வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியதியையும் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அதாவது, திருமணத்திற்கு முன ஒரு மண்டலமான 48 நாட்களுக்குள்ளும், திருமணத்திற்குப் பின் ஒரு மண்டல காலத்திற்குள்ளும் தம்பதி சகிதமாக இத்தகைய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது நியதி.

திருமண முகூர்த்த நேரங்களைக் கணிக்கும்போது ஏழாம் இடம் சுத்தமாகவும் எட்டாமிடம் தீய கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெறாமல் இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. முறையாக இவ்வாறு கணிக்கப்படாத திருமண முகூர்த்தங்களில் விளைந்த தோஷங்களுக்கும், குரு, சுக்ர மூடம் பார்க்காமல் நிகழ்ந்த தோஷ விளைவுகளுக்கும் ஓரளவு பிராயசித்தம் அளிக்க வல்லதே இந்த வழிபாடுகளாகும்.

பெண்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானமாக விளங்குவதால் இத்தகைய வில்வ தள வழிபாடு அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான சந்ததியையும், சுபமங்கள, மாங்கல்ய சக்திகளையும் பெற்றுத் தரும்.

No comments:

Post a Comment