Sunday, 22 October 2017

சக்கரையம்மா வரலாறு

சக்கரையம்மா


நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய "உள்ளொளி' என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
"சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி) மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?
"விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா...?"
•••திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
•••அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
•••ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்? அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது. அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
••• தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
•••அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார்.
•••••• அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று. •••••••••
••• ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
••• சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
••• 1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
••• திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. "வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!' என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
••• இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment