Tuesday 17 October 2017

ஜ்வாலாமுகி கோவில் - விவரங்கள் மற்றும் காணொளி

அம்பிகை ஜ்வாலாமுகி பீடத்தில் ஸித்திதா சக்தியாய் அருள்கிறாள். உலகமனைத்தையும் ஈன்றவள். உன்மத்த  பைரவரால் காக்கப்படுபவள். தீ ஜ்வாலை வடிவில் ஜொலிப்பவள். ஆதிசக்தி.  உயிர்களுக்குள் அறியாமை எனும் இருளை  அகற்றி ஞான ஒளியை ஏற்றியருள்பவள். உயிர்களின் ஆதார சக்தியாக விளங்கும் அன்னையை ஒளி வடிவில் கண்டு  மகிழும் ஞானிகளுக்கும், யம பாசத்தில் சிக்கி ஜீவனை இழந்து அன்னையின் பேரொளியில் கலந்திட விரும்பும்  அன்பர்களுக்கும் திருவருள் புரிபவள். பக்தர்களுக்கு உயர்வான பேச்சாற்றலையும், உடலழகையும் அருள்பவள்.  திருநீலகண்டரின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இத்தேவி தம் பக்தர்களையும் காப்பவள். இந்த மகத்தான சக்தி  பீடத்தில் செய்யப்படும் ஜபம் அனைத்தும் வாக்ஸித்தியை அளிக்கும் வல்லமை பெற்றது. 

இத்தேவியின் சிறப்பை விளக்க ஒரு கதை உண்டு. முற்காலத்தில் முனிவர் ஒருவர் யாகம் வளர்த்து கிடைத்த  பொருட்களையெல்லாம் நெருப்பிலே போட்டு விடுவாராம். இந்த விவரம் அறிந்த மன்னன் விலைமதிப்புள்ள பல  பொருட்களை அவருக்கு அளித்தாராம். முனிவரோ அவற்றையும் நெருப்பிலிட்டதால் கோபமடைந்த மன்னன் தான்  அளித்த பொருட்களைத் திரும்பத் தருமாறு கேட்டானாம். முனிவர் பராசக்தியை வேண்டியதால் மீண்டும் அப்பொருட்கள்  கிடைத்ததைக் கண்டு வியந்த மன்னன் மிகவும் மகிழ்ந்து அம்பாளுக்கு ஆலயம் எழுப்பினான். சங்கராச்சார்ய கிரி உள்ள  இப்பீடம் கிரிபீடம் என்றும் சக்திபீடங்களுள் ஜ்வாலாமுகி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இங்கு காலதரம் எனும் பர்வதம் உள்ளது. இதில்தான் சதிதேவியின் நாக்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள  குகைக்கோயிலில் மூன்றடி உயரத்தில் உள்ள கூண்டில் ஆறு அங்குல உயரத்திற்கு ஜ்வாலையாக உள்ள அன்னையிடம்  ‘‘ராதேஷ்யாம்’’ என்று உரக்கக் கூவினால், ஜ்வாலை பெரிதாக ஒளிர்கிறது!  இத்தீபம் எண்ணெய் ஊற்றி திரி சேர்த்து  ஏற்றப்பட்ட தீபமல்ல.  காலம் காலமாகவே பாறையிலிருந்து தானாகவே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபம்!  ஜோதி  வடிவினளாக பச்சையும் நீலமும் கலந்ததுபோல் தேவியின் மரகத நிறத்தை நினைவூட்டும் வண்ணம் ஜொலிக்கும்  தீபத்தை தரிசிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. விஷ்ணுவிற்குப் பிரியமானவளான வைஷ்ணவியான விஷ்ணுமாயா  கண்ணனின் பெயரைக் கேட்டதும் தன் மகிழ்வை வெளிப்படுத்துவதை இது உணர்த்துகிறது. 

தீப்பிழம்பாக அன்னை காட்சி நல்குவதால் ஜ்வாலாமுகி என அழைக்கப்படுகிறாள். பஞ்ச நதிகள் ஓடும் தேசமான  பஞ்சாபில் தேவி கோயில் கொண்டிருக்கிறாள். அமிர்தசரஸிலிருந்து 107 கி.மீ. தொலைவில் உள்ள பதான்கோட்  பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது.  சண்டி, மாகாளி என்ற திருப்பெயர்களிலும் தேவி ஜ்வாலாமுகி கோயில் கொண்டு  மாநிலம் முழுவதும் வீரபக்தியை வளர்த்து வருகிறாள். அன்னையின் கருவறையில் எப்பொழுதும் ஒன்பது  ஜ்வாலைகளாக தீ எரிந்துகொண்டிருக்கிறது. இவற்றை நவதுர்க்கைகளாக, நவநாயகிகளாக, நவசக்திகளாக பாவித்து  ஆராதிக்கின்றனர் பக்தர்கள். 

அவை மகாகாளி ஜோதி, மஹா மாயாவான அன்னபூரணி ஜோதி, சண்டிமாதா ஜோதி, ஹிங்லாஜ் பவானி ஜோதி,  விந்த்யவாஸினி ஜோதி, மஹாலக்ஷ்மி ஜோதி, பலிபீட ஜோதி, சரஸ்வதி ஜோதி, அஞ்சனா ஜோதி எனப்படுகின்றன.  தேவியின் சந்நதியிலிருந்து 16 மைல் தொலைவில் உஷ்ணச்சுனை ஒன்று அமைந்துள்ளது. மகாதேவரும் மகாதேவியும்  தீயவர்களை அழித்திட தீயின் வடிவாகத் தோன்றுவார்கள் என்ற உண்மை இங்கே உணர்த்தப்படுகிறது. தினமும் இரவு  9.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை சேவை விசேஷமானது. சயனகிருஹத்தில் தங்கப்பூச்சு கொண்ட வெள்ளி  கட்டிலில் பட்டுப் பீதாம்பரங்கள் விரிக்கப்பட்டு, காதணிகள், வளையல்கள், மேகலை,  கொலுசுகள், மெட்டிகள், கிரீடம்,  சங்கிலி, பட்டாடை என அலங்கரித்து மாலை சாத்தப்படுகின்றன. 

இல்லாத உருவத்துக்குச் செய்யப்படும் அந்த அலங்காரத்தால் தேவியின் திருவுருவை நம் மனக்கண்ணில் தரிசித்து  மகிழலாம். பின் பால், பழம், பலகாரங்களைப் படைத்து ஸெளந்தர்யலஹரியிலிருந்து எட்டு ஸ்லோகங்களை பாராயணம்  செய்து கதவடைக்கிறார்கள். இது ஏகாந்த உற்சவம் எனப்படும். இங்கு கன்யா பூஜை விசேஷமானது.  சித்திரை மாத  வசந்த நவராத்திரி, ஆடி மாத ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாத சாரதா நவராத்திரி, தை மாத மாதங்கி நவராத்திரி என  நான்கு நவராத்திரிகள் தொடங்கும் முன்பும் இச்சுற்று வட்டார கிராமமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு  வந்த விளக்குகளில் ஒன்பது தீச்சுடர்களிலிருந்தும் தீபத்தை ஏற்றித் தலைமீது சுமந்து செல்வது இந்நிகழ்ச்சிகளின் ஓர்  அம்சம். அக்பர் ஜ்வாலாமுகியை நம்ப மறுத்து, பெரிய இரும்பு தகட்டினால் மூடி, அருகிலுள்ள நீரூற்றை இதன்மீது  விழும்படி திருப்பி விட்டார். ஜ்வாலை அணையவில்லை; 

ஆனால், அக்பரின் பார்வை மங்கத் தொடங்கியது.  அக்பர் தேவியின் மகிமையை உணர்ந்து ஒரு தங்கக்குடையை  ஆலயத்தில் வைத்து வழிபட, அக்குடை வேறு உலோகமாக மாறி உடைந்து விட்டது! அக்குடையை இன்றும்  ஆலயத்தில் காணலாம். இந் நிகழ்விற்குப் பின் ஜ்வாலாம்பிகையை தரிசிக்கும் அன்பர்கள் துன்புறுத்தப்படுவதில்லை.  போஜக அந்தணர்களால் இத்தேவி பூஜிக்கப் படுகிறாள். நல்லோர் நட்பினால் மனம் வெளுக்கிறது. மனம் வெளுத்தால்  மயக்கம் தெளிகிறது. மயக்கம் தெளிந்தால் சன்மார்க்கம் தெரிகிறது. சன்மார்க்க வழியில் ஜீவன் முக்தியடைகிறது என்பது  ஆதிசங்கரரின் பொன்னான வார்த்தைகள். இந்த சக்திபீட நாயகியை ஸ்ரீநகரிலும் ஜ்வாலையாக வழிபடுகின்றனர். அங்கு  தேவியின் திருநாமம் சம்புநாதேஸ்வரி. 

ஸ்ரீ சக்ரவடிவில் ஆதிசங்கரர் இந்நகரை அமைத்ததால் தேவி கொலுவீற்றருளும் அவ்வூர் ஸ்ரீநகர் என்று  அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றாற்போல் அந்நகரம் லட்சுமிகரமாக விளங்குகின்றது. அங்கு வீற்றிருக்கும் பீடநாயகி  கம்ஸவதத்தின் போது மாயா சக்தியாக வந்தவள் என்பதால் கம்ஸமர்த்தினி எனும் பெயராலும் வணங்கப்படுகிறாள்.  அங்கு அம்பாளின் தீநாக்குகளுக்கே பூஜைகள் நடைபெறுகிறது. ஆதிகாலத்திலிருந்தே நாம் தீச்சுடரை வணங்கி  வருகிறோம். நம்முடைய முதற்கடவுள் அந்த அக்னிதான். அவர்தான் நாம் யாகத்தீயில் இடும் அவிர்பாகத்தை  இறைவனிடம் சேர்த்து அவரின் அருளைப் பெற்றுத் தருகிறார். அதன் காரணமாக எழுந்ததே திருவிளக்கு பூஜை. என்றும்  நம் இல்லங்களில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்க திருவிளக்கு பூஜை செய்து ஜ்வாலா தேவியின் திருவருளைப்  பெறுவோம்.


No comments:

Post a Comment