Tuesday, 31 October 2017

மண்டகப்பட்டு குடைவரை கோவில், மும் மூர்த்திகள் புராதன தலம்

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில் :

தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது. இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில் ஆகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டில் 'இந்தக்கோயிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன்' என்று குறுப்பிட்டுள்ளார்.
இவரே மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர்
அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார்.
இவருக்குப்பின் வந்த இவர் மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின் பணியைத் தொடர்ந்தார். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு குடைவரைக் கோயில் இவர் காலத்துப் படைப்புக்குச் சிறந்தசான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான் பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக்கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை
போன்ற படைப்புகள் அனைத்தும் இவரது படைப்பாகும்.விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முதல் குடைவறைக் கோயில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால் அதுகுறித்த தகவல்கள் முழுமையாக இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ளது மண்டகப்பட்டு. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தூரமும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 5 நிமிட நடைப்பயணத்தில் இந்த கோயில் உள்ளது. மிகப்பெரிய பாறைக் குன்றை குடைந்து இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் நிறுவப்பட்ட முதல் குகைக்கோயில் இதுவேயாகும் என்று அங்குள்ள வடமொழி கல்வெட்டிலிருந்த தகவலை தொல்லியல் துறை வைத்துள்ள தனி கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை பயன்படுத்தாமல் லக்ஷிதாயதன என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு நிர்மாணம் செய்யப்பட்டது.
மலையைக் குடைந்து கற்றளிகள் செய்யும் புதியமுறையை தமிழகத்தில் புகுத்தியவர் மகேந்திரவர்மனே ஆவார். இதனால்தானோ அவருக்கு லக்ஷிதன், விசித்திரசித்தன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இக்கற்றளி மிக எளிய மண்டபம் போன்ற அமைப்பு கொண்டது. முன்னே மகாமண்டபம், பின்னர் அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மிகப் பெரிய 4 தூண்கள் வேலைப்பாடின்றி எளிய பாணியில் அமைந்துள்ளன.
பின் சுவற்றில் 3 கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இதில் சுண்ணாம்பு பூச்சும், அதன் மேல் ஓவியத்தில் மும்மூர்த்திகளையும் வரைந்து வணங்கப்பட்டு வந்தன என்று ஊகிக்க இடமுள்ளது என்று தொல்லியல் துறையின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டிலேயே பல தவறுகள் உள்ளன.
கோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகள் துவார பாலகர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோயில்களில் இந்த துவார பாலகர்கள் ஆயுதங்களுடன் நேர் நிலையில் நின்றபடிதான் இருப்பர். ஆனால் இங்குள்ள சிற்பங்களில் வலதுபுறத்தில் அரசர் வாள்மீது கைவைத்து, கம்பீரத்தோடு, மணிமுடி தரித்து ராஜதோரணையில் நின்று கொண்டிருக்கிறார். இடதுபுறத்தில் நளினத்துடன் நிற்கும் பெண் சிற்பம் உள்ளது. அது அரசியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல் 3 கருவறைகளிலும் கீழ்பாகத்தில் சிலை ஸ்தாபிதம் செய்வதற்கான துளைகள் உள்ளன. இதனால் அங்கு சிற்பங்கள்தான் இருந்திருக்க வேண்டும், ஓவியம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் கோயிலின் முகப்பில் அழகான இரண்டு சிற்பங்களை செதுக்கியுள்ளவர்கள், கருவறையில் மட்டும் ஓவியம் வரைவதற்கான வாய்ப்பில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்
கின்றனர்.
மேலும் தொல்லியல் துறை வைத்துள்ள கல்வெட்டில் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைக்கூட (கி.பி.571 அல்லது 600 முதல் 630) என குறிப்பிடவில்லை.
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு கோயிலை கட்டமைத்த வரலாற்றை குறைந்தபட்ச தகவல்களுடன்கூட அங்கே வைக்கப்படவில்லை. வைத்துள்ள கல்வெட்டும் சிதைந்துள்ளது. மகாபலிபுரம் சிற்ப சரித்திரத்துக்கே முன்னோடியாக திகழ்ந்த இதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ளவர்களின் எண்ணம்.
அதிகளவில் கூட்டம் இங்கு வராவிட்டாலும், தினசரி சிலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்வதாக இக்கோயிலின் அருகே வசிக்கும் வீரம்மா என்ற பெண் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடம், அதற்கான எந்த வசதிகளும் இல்லாமல் 1,500 ஆண்டுகளாக ஒரு சரித்திரம் அமைதியாக முடங்கிக் கிடக்கிறது
பல்லவர்காலம் குடைவரைகள் :
மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்,
பல்லாவரம் குடைவரை,
மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்,
மாமண்டூர் திருமால் குடைவரை,
குரங்கணில்முட்டம் குடைவரை,
வல்லம் வசந்தீஸ்வரம் (செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்),
மகேந்திரவாடி குடைவரை,
தளவானூர் சத்துருமல்லேசுவர் ஆலயம்,
திருச்சிராப்பள்ளி குடைவரை,
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்,
நார்த்தாமலை குடைவரை,
குடுமியான்மலை குடைவரை,
திருமெய்யம் குடைவரை,
சீயமங்கலம் திருத்தூணாண்டார் கோயில்,
விளாப்பாக்கம் குடைவரை,
மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்,
மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்,
மாமல்லபுரம் கோனேரி மண்டபம்,
மாமல்லபுரம் வராக மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்,
மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை,
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்,
மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்,
மாமல்லபுரம் பரமேஸ்வரவராக விஷ்ணுகிருகம்,
மாமல்லபுரம் இராமானுஜ மண்டபம்,
மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்,
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்,
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை.
பாண்டியர் குடைவரைகள் :
பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை,
மலையடிக்குறிச்சிக் குடைவரை,
மகிபாலன்பட்டிக் குடைவரை,
அரளிப்பாறைக் குடைவரை,
திருமெய்யம் குடைவரைகள்,
கழுகுமலைக் குடைவரை,
திருத்தங்கல் குடைவரை,
செவல்பட்டிக் குடைவரை,
திருமலைக் குடைவரை,
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை,
மனப்பாடுக் குடைவரை,
மூவரை வென்றான் குடைவரை,
சித்தன்னவாசல் குடைவரை,
ஐவர் மலைக் குடைவரை,
அழகர் கோயில் குடைவரை,
ஆனையூர்க் குடைவரை,
வீர சிகாமணிக் குடைவரை,
திருமலைப்புரம் குடைவரை,
அலங்காரப் பேரிக் குடைவரை,
குறட்டியாறைக் குடைவரை,
சிவபுரிக் குடைவரை,
குன்றக்குடிக் குடைவரைகள்,
பிரான்மலைக் குடைவரை,
திருக்கோளக்குடிக் குடைவரை,
அரளிப்பட்டிக் குடைவரை,
அரிட்டாபட்டிக் குடைவரை,
மாங்குளம் குடைவரை,
குன்றத்தூர் குடைவரை,
கந்தன் குடைவரை,
யானைமலை நரசிங்கர் குடைவரை,
தென்பரங்குன்றம் குடைவரை,
வடபரங்குன்றம் குடைவரை.
முத்தரையர் குடைவரைகள் :
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்.
தொகுப்பு அகத்தியர் ஞானம்.


No comments:

Post a Comment