அகத்தியர் அருளிய நாகபாம்பின் வாய் கட்டும் மந்திரம்...!
சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது தீண்டாது இருக்க அதன் வாய் கட்டும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம்.
நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.
ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு பேணிப்பார் நங்கிலிசீ ஓமென்றாக்கால் பெரிதான நாகமது வாய்தான்கட்டும் பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப் புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால் ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.
- அகத்தியர்.
ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது அதன் வாய் கட்டிப் போய்விடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர்.
இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.
No comments:
Post a Comment