Sunday, 22 October 2017

பழனி மலை முருகர் துதிகள்

பழனிமலையைப் புகழாதவர்கள் இருக்க முடியாது. படிக்கின்றிலை பழனித்திரு நாமம், பழனிமலை எனும் ஊரைச் சேவித்து அறியேனே, அதிசயம் அனேகமுற்ற பழனி என்பார்

 அருணகிரிநாத சுவாமிகள். பழனியில்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் கோவை கௌமார மடாலய முதல்வர் திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள் ஞான உபதேசம் பெற்றார்கள். அதனால் சிரவையாதீனம் ஒவ்வொரு சந்நிதானங்களும் பழனியில் அருளாட்சி ஏற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் பழனியில்தான் சமாதி கொண்டுள்ளார்கள். அதை கௌமார மடமே தற்போது நிர்வாகித்து வருகின்றது இன்னும் சிறப்பாகும். பழனியில் 8,9-12-2001ல் சிரவையாதீனமாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி பாரம்பரியமாக பழனியில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் அருளாட்சி ஏற்றார்கள். அந்த அருளாட்சி விழா மலரில் வடிவேலர் பதிகம் குறித்த ஒரு செய்தியைக் கண்டேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். பழனிமலை வடிவேலர் பதிகம் எனும் நூலில் உள்ள பாடல் இது. பழனிமலை முருகனை நாம் வணங்கினால் என்னென்ன நோய்கள் தீரும் என்று இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி ஏதேனும் உடல் தொல்லையால் அனைவருமே அவதிப்படுவது இயற்கை. இந்தப்பாடலில் சொல்லியுள்ளபடி நமது நோயெல்லாம் தீர்க்கும் அதிகாரன் முருகப்பெருமான். எனவே முருகனது அருள் இருந்தால் எல்லா வினைகளும் சூரியன் முன் பனி போல் விரைவில் நீங்கி விடும். எனவே தான் வினையெலாம் பருதி முன் பனிபோலே பறிதெறியும் அதிகாரனே என்று பாடியுள்ளார். இந்த நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
பாடல்:
”வயிற்றுவலி சோகைவிப் புருதிநீரிழிவுகா
 மாலைவெண் குட்டமிருமல்
  வாதகுன் மம்பெரு வியாதிபக் கப்பிளவை
   வண்டுகடி யண்டவாதஞ்
சயித்தியம் மகோதரம் பிரமியம் சூலைகா
 சங்கிராணி பாண்டு ரோகந்
  தலைவலி கருங்குட்ட மீளைதுடை வாழைபடு
   தாமரை கிரந்தி படுவன்
முயற்பிணி பவுத்திரம் நடுக்கலெழு ஞாயிறு
 முறைக்காய்ச்சல் மாரடைப்பு
  முகசன்னி சுகசன்னி குலைவலி பெரும்பாடு
   மூலங்கபால வாய்வுபயித்தியம்
(பயில்) வினை யெலாம்பருதி முன்பனிப் போலப்
 பறித்தெறியு மதிகாரனே”

இப்படி முருகனையே பாடிப் பாடி தமது உடல் மன ஆன்ம நோய்கள் நீங்கிக் கொண்டவர்கள் ஏராளம். அவசர யுகத்தில் இது போன்ற இறையருள் பாடல்கள் எல்லாம் மறக்கப்பட்டு விட்டு மருத்துவமனை சென்றும் நோய் தீராத நிலையில் பலர் அவதிப்படுவதைப் பார்க்கின்றோம். முருகனுக்காக விரதம் பூண்டு முருகனையே துதித்து வரும்போது நமது உடல் நல்ல ஆரோக்கியம் பெறுவதோடு மனமும் உறுதி பெற்று பிணிகள் நீங்குகின்றன. நமக்குத் தெரிந்து முருகனது திருநீறு பல நோய்களைத்தீர்த்துள்ளது. முருகு என்றால் இயற்கை, அழகு, கடவுள்தன்மை என்று பெயர். முருகனை வணங்கினால் இயற்கையாகிய தன்மையில் நமது உடல் சரிசெய்யப்பட்டு அழகாக மாறி முருகாகிய கடவுள்தன்மையையும் நாம் அடைவோம் என்பதே மறைமொழியாம். எனவே நமது பாரம்பரிய வழிபாடாகிய முருக வழிபாட்டைக் கைவிடாது கருத்தில் இருத்தி கந்த வேலே நம் சொந்த வேல் என்று போற்றுவோம்.


கவிதை:
அருளாட்சி விழா மலர் தன்னில்
பொருளாட்சி  மிக்க நூல் கண்டேன்
மருளாட்சி மனப்பகையும் நீங்கிடவே – அவன்
அருளால் பதித்தேன் இங்கு !

குருவிற்கு அருளாட்சி குவலயத்தில் பெருங்காட்சி
திருவுக்கு பணி செய்ய என்குருவை
பெருமைபட பலர் வாழ்த்த என்குருவை
கருவிலே படைத்தான் கந்தன் !

வினையெலாம் தீர்க்கும் அதிகாரனே வேலா
பனைபோல் வளர்ந்த பாவம் களைவாய்
தினைமாவு பிரியனே திருப்பம் தாராய்
மனைபோட்டு என்மனம் தங்கே !

பயமெலாம் போக்கி பரிசுத்தமாக்குவாய் என்றும்
செயமெல்லாம் தருவாய் வணங்குநீ என்றும்
இயம்பினோர் முன்னோர் சொல் வீணோ?
இயங்குவாய்என் மனத் தகத்தே !

என்செயும் நாளும்கோளும் வினையும் கூற்றும்
என்றுரைத்த அருணகிரி பாடல் மெய்யே
அன்றுரைத்த பாடலை மறு மெய்யாக்க
இன்று என்னகத்தே தங்கே !

வந்தனை செய்தாய் வழிபட்டாய் பூசித்தாய்
சிந்தனை செய்தாய் சிறப்பு என்றாய்
கந்தனை தொழுதால் கஷ்டம் நீங்குமோஎன்று
நிந்தனை மற்றோர் செய்யக் கேட்டேன்
வந்து நீ வாழ்விப்பாய் வழி செய்வாய்
நிந்தனைக்கு கந்தனையே கூப்பிட்டேன் வேறறியேன்
சொந்தமெனெ என்னகத்தே தங்கே !

                                  -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

No comments:

Post a Comment