Wednesday, 18 October 2017

மூஷிகேஸ்வரர் ரகசியம்

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.

பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.

கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.

திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும். திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?

அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.

ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.

No comments:

Post a Comment