Saturday, 2 September 2017

சிவராஜா யோகம் - காக புஜண்டர் குறள் - விளக்கம்



காகபுசுண்டர் குறள்
தரப்பட்டுள்ள  பொருள் விளக்கம்  ஏற்கனவே சித்தர் மார்க்கத்தில்  இருந்து   சாதனை  புரிபவர்களுக்கானது.  எளிய முழுமையான  விளக்கம் குருவருள் உத்தரவு  வரும்போது  வெளியிடுவோம்.

1:
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு
பொருள்: பேரொளியான பூரணத்தை துணைகொண்டு சிவராஜா யோகத்தில் இருந்து பராபரம் என்றார் பூரணத்தை நாடு!

2:
அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.
பொருள்பராபரத்தை அறிய சிவராஜா யோகம் செய்ய வேண்டும் என்று முதல் குறளில் சொன்னோம்அதன் முதல் படி அண்டத்தின் மூலமான நாதமும் விந்துவும் உடலிற்கு ரவி மதி எனும் சூரிய சந்திரனாய் எப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இயக்குகிறது என்று அறிய வேண்டும்.

3:
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.
பொருள்: அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள மதி ரவி அறியவேண்டும் என்று முன்னர் சொன்னோம்பிண்டத்தில் மதி ரவி நிற்கும் இடம் வலது இடது மூச்சு என்று அறிந்து அதை நேரிபடுத்தி விரயமாகும் பிராணனை சேமித்து சமப்படுத்தினால் அது வீடு என்ற பேற்றை தரும்.

4:
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.
பொருள்: தந்திர யோகத்தில் பல்வேறு யோகங்கள் பயிற்சிப்பதற்கு உண்டென்றும் அது அறுபத்துநான்கு வகைப்படும் என்று கூறுவர்அவற்றை எல்லாம் பயிலவேண்டும் மன மாயையில் விழுந்து விடாமல் குரு உபதேசித்த சிவராஜா யோகத்தில் நிலைத்து நில்.

5:
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு
பொருள்: மாயையினால் சூழ்ந்து மனிதன் பிறவிக்கு காரணமான மனத்தை பண்படுத்தி உலகு மாயை என்பதனை மனதின் உதவி கொண்டு விசாரத்தால் அறிந்து எல்லாவற்றிற்கும் மூலமான இறைவனின் பாதத்தை நம்பி உன் சாதனையினை தொடர்வாயாக .

6:
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
பொருள்: பல்வேறு பிரளயம்யுகம் கண்ட பதினெண் சித்தர் என்ற கணக்கிற்கும் முன்னராக என்றும் இருக்கும் புசுண்டனாகிய நான் அத்தன் என்ற சிவனிற்கு நிகராக அருள் புரியக்கூடியவன் என்று அறி!

7:
சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.
பொருள்: இந்த உலகத்தவர்கள் துன்பத்தில் இருந்து மீண்டு மாறாத பேரின்பம் பெறுவதற்கான இறவா நிலை பெறுவதற்கான வழிகளை  நான் அறிந்து கூறியுள்ளேன்.

8:
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.
பொருள்: பார்வைக்கு மூலமான கண்ணில் மணியாக நின்ற இறைவன் பிருதிவி பூதம் அதிகமான ஸ்தூல தேகத்திலும் நிறைந்துஅதனை  முதிர வைத்து  அனைத்துக்கும் காரணமான சிகாரம் என்ற அக்னி ஸ்வரூபமான் மகா காரண சரீரம் பெறுவதற்கு ஆதாரம் என்று அறிவாய். 

9:
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.
பொருள்: இதற்குரிய முறைகளை வெளிப்படையாக காகபுசுண்டர் ஞானம் முப்பத்திரண்டில் கூறியுள்ளேன்பார்ப்பீர்களாக!

10:
நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.
பொருள்: நேத்திரத்தில் காகம் என்ற அக்னி ஸ்வரூபமாக நிற்க அதை அறிய ஆத்மாவில் ஆனந்தம் பெறலாம்.

11:
உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.
பொருள்: இந்த இரகசியத்தை உலகில் உள்ளவர்கள் அறிந்தால் அவர்களுக்கு இறப்பு இல்லைஆகவே உனது மனதை பல்வேறு விடயங்களில் செலுத்தி ஆற்றலை வீணடிக்காமல் இந்த இரகசியத்தை அறிவதில் செலுத்து!

12:
கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.
பொருள்: இதனை அனுபவித்து அறிந்தவர் எல்லோரும் சொல்லித்தர மாட்டார்அப்படி அறிந்தவர் இருப்பின் அவர்களுக்கு தொண்டு செய்து அவர்கள் அன்பினை பெற்று அறிந்தாயானால் இன்பம் அடைவாய்!

13:
ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.
பொருள்: நாம் ஆரம்பத்தில் கூறிய அண்டத்தில் உள்ள வஸ்துவை எப்படி உடலில் சேர்ப்பது என்று அறிந்து அதனை சிவ சக்தியின் அருள் கொண்டு பூசை செய்து உடலில் சேர்க்க வேண்டும்.

14:
முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.
பொருள்: ஸ்தூலசூக்ஷ்மகாரண சரீரத்தில் இருந்து மனிதனை துன்பத்திற்குள்ளாக்கும் மூன்று வினைகளை சிவராஜா யோகத்தால் சுட்டு நீறாக்கி அதற்கு அமிர்தத்தை பொழிந்து மகா காரண சரீரத்தை உருவாக்கி இறவா நிலையினை அடைவாய்!

15:
யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.
பொருள்: மேலே கூறிய நிலையினை சாதிக்க தேவையான கற்ப முறைகளையும்யோக பயிற்சிகளையும் புசுண்டர் பதினாறு என்ற நூலில் கூறியுள்ளேன்விரைவாக அவற்றை கற்று தேறு!

16:
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.


பொருள்: சிவராஜா யோகமாகிய வாசியை இயக்கம் முனிவனேஎனது மகனே! உனது சாதனைக்கு மோசம் வராமல் தகுந்த ஞானத்தை தந்த இந்த குறள் முற்றுப்பெற்றது

No comments:

Post a Comment