பாபாஜிக்கு ‘நாகராஜ்’ என்று பெயர்
சூட்டப்பட்டது. நாகராஜ் என்பதற்கு ‘பாம்புகளின் அரசன்’ என்று பொருள். இது, நம்முள்ளிருக்கும் அளவிலா
இறையாற்றலைக் குறிக்கின்றது. 203ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் தமிழகத்திலுள்ள ஒரு கடலோர கிராமமான
பரங்கிப்பேட்டையில் கிருஷ்ணர் பிறந்த ரோஹினி நட்சத்திரத்திலேயே பாபாஜியும்
பிறந்தார். தீபங்களின் திருவிழாவான கார்த்திகை தீபத் திருநாளில் இப்பிறப்பு
நிகழ்ந்தது. நம்பூதரி பிராமணர்களான இவரது பெற்றோர்கள், தென்மேற்கு மலபார் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர்.
இவரது தந்தை, அங்கிருந்த சிவன்
கோவிலில் அர்ச்சகராக இருந்தார். இப்பொழுது அக்கோவில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்
பட்டுள்ளது.
நாகராஜ், தனது ஐந்தாவது வயதில் ஒரு வணிகனால் கடத்தப்பட்டு இன்றைய
கோல்கத்தாவிற்கு ஒரு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஒரு பணக்கார வர்த்தகர் அவனை விலைக்கு வாங்கி பிறகு முழு
சுதந்திரத்துடன் விடுவித்தார். பிறகு, சுற்றித் திரிகிற
துறவிகளின் குழுவில் சேர்ந்து புனிதமான சமய மற்றும் தத்துவ இலக்கிங்களில் தேர்ச்சி
பெற்றார். இதில் நிறைவு பெறாத நாகராஜ், தெற்கே வாழ்ந்து வந்த
பூரணத்துவம் பெற்ற மஹா சித்தர் அகஸ்த்தியரைப் பற்றி அறிந்து கொண்டு, அவரைக் காண தெற்கு சிலோனிலுள்ள புனிதமான கத்திர்காமக்
கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கு, அகஸ்த்தியரின் பிரதான
சீடரான போகநாத்தரை சந்தித்து கடுமையான தியானம் மற்றும் சித்தாந்தத்தை
போகநாத்தரிடம் பயின்றார். இப்பயிற்சியின் மூலம், சர்விகல்ப சமாதி
அனுபவம் பெற்று, கதிர்காமத்தின் மூலவரான
முருக பெருமானின் தரிசனமும் பெற்றார்.
நாகராஜிற்கு 15 வயது ஆனவுடன், போகநாதர், குற்றாலத்திற்கருகில் வாழ்ந்த தனது குருவான அகஸ்த்தியரிடம்
அனுப்பி வைத்தார். நாற்பத்தி எட்டு நாட்களுக்குக் கடுமையான யோகப் பயிற்சி
மேற்கொண்ட பிறகு, நாகராஜிற்கு அகஸ்த்தியர்
காட்சியளித்து, சக்தி வாய்ந்த கிரியா
குண்டலினி பிராணாயாமப் பயிற்சியில் தீட்சையளித்தார். சிறுவன் நாகராஜை இமயத்தில்
உயரே அமைந்துள்ள பத்ரிநாத்திற்குச் சென்று பயின்றதனைத்தையும் தீவிரமாகப் பயிற்சி
செய்து ‘சித்த’னாகப் பணித்தார். அடுத்த 18 மாதங்கள், நாகராஜ் ஒரு குகையில் தனியே வாழ்ந்து, போகநாதர் மற்றும் அகஸ்த்தியர் கற்பித்த யோகப் பயிற்சிகளை
பயிற்சி செய்தார். அவ்வாறு இறைவனிடம் தனது அங்காரத்தைச் சமர்பித்துச்
சரணடைக்கையில், தனது உடலிலுள்ள செல்கள்
உட்பட முழுமையாக இறைத்தன்மைப் பெற்றார். இறையுணர்வு மற்றும் இறை சக்திக்கு, சரணடைந்த முழு சித்தரானார். அவரது உடல், மரணம் மற்றும் நோய்களிலிருந்து முழு சுதந்திரம் பெற்றது.
மஹா சித்தராக மாற்றம் பெற்ற பாபாஜி, துன்பத்தில் உழலும் மனித
குலத்தின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment