Monday 27 July 2020

சுந்தரரின் தமிழை விரும்பிய சிவபெருமான்

சுந்தரரின் தமிழை விரும்பிய சிவபெருமான்…..   

நமசிவாய_வாழ்க
சுந்தரரின் தமிழை சிவன் எப்படி விரும்பினார் என்று பாருங்கள்.சேரமான்பெருமான்நாயனார் திருக்கயிலாய ஞானவுலா பாடிய வரலாறு!

கொடுங்காளூரில் சேரர் குடியில் பெருமான் கோதையார் என்பவர் இளம் வயதிலேயே சிவபக்தி மிகுந்து அரச வாழ்வைத் துறந்து திருவஞ்சைக்களத்தில் ஆலயத் தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார்.அப்போது செங்கோற் பொறையன் என்றும் சேர மகாராஜாவுக்குத் திடீரென்று ஞானோதயம் ஏற்பட, அவன் மகுடத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் செய்யலானான். நாடு அரசன் இல்லாமல் இருக்க முடியுமா? அதனால் நாட்டின் அமைச்சர்கள் யாவரும் திருவஞ்சைக்களத்திற்குச் சென்று அங்கு சிவத்தொண்டில் ஈடுபட்டிருந்த பெருமான் கோதையாரை அரசுப் பொறுப்பை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். அவர் “சிவபெருமான் உத்தரவு தந்தால் அரியணை ஏறத்தயார்’ என்று கூறிச் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமானும் சிற்சில சகுனங்கள் மூலம் அவர் இசையை தெரிவிக்க ஒரு சுபயோக தினத்தில் முடி சூட்டிக் கொண்டார். தினந்தோறும் நெடுநேரம் சிவபூஜை செய்வதைத் தவிர்ப்பதில்லை.


ஒருநாள் யானை மீது அமர்ந்து சகல விருதுகளுடன் நகரைப் பவனி வரும்போது ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண்ணைச் சுமந்து வந்தான். அப்போது சிறிது மழை பெய்யவே உவர் மண் கரைந்து அவன் உடலில் ஒழுகிக் காய்ந்து உடலெங்கும் விபூதி பூசியதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்… இதனைக்கண்ட யானைமீது அமர்ந்திருந்த மன்னன் கிடுகிடுவென்று கீழே இறங்கிப்போய் அந்த நபரை வணங்கினார்! அந்த சலவைத் தொழிலாளியோ அரசர் தன்னை வணங்குவது கண்டு நடுநடுங்கி விட்டான்! அரசரை பலமுறை தொழுது கைகூப்பி, “”மன்னர் பெருமானே! என்ன இது… என்னை நீங்கள் வணங்கலாமா” என்றான். அது கேட்ட மன்னன் (சேரமான் பெருமாள் நாயனார்) நிவீர் திருநீற்று வடிவத்தை எனக்கு நினைவு படுத்தினீர். அடியேன் அடிச்சேரன். நிவீர் வருந்த வேண்டாம். போம்” என்று மறுமொழி கூறி அவனை அனுப்ப அமைச்சர் முதலானோர் மன்னர், சிவனடியார்கள் பால் காட்டும் பரிவையும் மரியாதையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்.

நாள்தோறும் தவறாமல் மன்னன் செய்யும் சிவபூசையின் முடிவில் #நடராஜப்_பெருமானின் #சிலம்பொலி கேட்கும்! அதனைக் கேட்டால்தான் மன்னனுக்கும் நிம்மதி. தான் நியமம் தவறாமல் பூஜை செய்திருக்கிறோம் என்று மனம் பூரிப்பான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜை முடிவில் சிவனது சிலம்பொலி #கேட்கவில்லை! உடனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வருத்தம்! இனி இவ்வுடல் இருந்து என்ன பயன்? என்று வாளை எடுத்துத் தன்னை #மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.


மறு நொடி சிவபெருமான் சிலம்பை ஒலிக்கச் செய்து, “”அன்பனே! அவசரப்பட்டுப் பிராணத் தியாகம் செய்து விடாதே. #சுந்தர மூர்த்தியின் #பாடலில் சற்று ஆடி அமிழ்ந்து விட்டோம். அதனால் வரத் தாமதமாகிவிட்டது!” என்று கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வெளிப்படுத்தினார்.

சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வியப்பு. சிவபெருமானின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட அந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளை நேரில் சென்று தரிசித்திட வேண்டும் என்று நினைத்து உடனே #திருவாரூருக்குச் சென்று சுவாமிகளை வணங்கி நின்றான்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் மீது மிகவும் நட்பு பாராட்டிய சேரமான் பெருமான் நாயனார் அவரைத் தம்மோடு கொடுங்காளூருக்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்தார். பின்னர் சுந்தரர் ஆரூர் சென்றார். இருவரும் மாற்றி மாற்றி இவர் அங்கு சென்று தங்குவதும் அவர் இங்கு வந்து தங்குவதுமாய் இருவரின் நட்பும் மிகப் பலப்பட்டு விட்டது.

ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களம் சென்று சிவபெருமானைத் தரிசித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். சிவபெருமான் ஒரு வெள்ளையானையை அனுப்பிச் சுந்தரரை அதில் ஏறிவரும்படி பணித்தார். சுந்தரரும் சிவனால் அனுப்பப்பட்ட அந்த வெள்ளை யானை மீது ஏறி அமர்ந்து திருக்கயிலாயம் நோக்கிச் செல்கையில், தன் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்து “”அடடா! அவரும் நம்மோடு இருந்தால் மிகச் சிறப்பாக இருக்குமே” என்று எண்ணினார்.


அப்போது கொடுங்காளூரில் அரண்மனையில் நீராடிக் கொண்டிருந்தார் சேரமான் பெருமாள். அந்த நிலையிலேயே தன்னைப்பற்றி சுந்தரர் நினைப்பது பளிச்சென்று அவருக்குப் புலப்பட்டது! உடனே, அப்படியே அருகிலிருந்த குதிரை மீது தாவி ஏறி திருவஞ்சைக்களம் சென்றார். இவர் சென்று அடைவதற்குள் சுந்தரர் ஐராவதத்தின்மீது ஏறி விண்ணில் சென்று கொண்டிருந்தார்.

அதைக் கண்ட சேரமான் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்தை (#நமசிவாய) ஓதினார். உடனே அக்குதிரை விருட்டென்று துள்ளித்தாவி விண்ணில் பாய்ந்து விரைவாகப் பறந்து சுந்தரமூர்த்தி நயனாரின் யானையை அடைந்து அதனை வலம் வந்து அதற்கு முன்னால் சென்றது! அதில் அமர்ந்தபடியே சேரமான் சுந்தரரை வணங்கிய படியே இருந்தார்.

இருவரும் கயிலாயத்தை அடைந்து கீழே இறங்கி பல வாயில்களைக் கடந்து பெருமாள் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தனர். அதன் வாயிலில் சேரமான் பெருமாள் நாயினார் தடுத்து நிறுத்தப்பட்டார். சுந்தரர் மட்டும் உள்ளே சென்று சிவபெருமான் முன் விழுந்து வணங்கித் துதித்துச் சேரர் கோன் வாயிலில் நிற்பதைக் கூறுகிறார்.

சிவபெருமான் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைக்கிறார். “”இங்கே உம்மை நாம் அழையாதிருக்க எப்படி வந்தீர்?” என்று வினவ சேரமான் சிவனைப் பன்முறை விழுந்து வணங்கி, “”எனையாளும் எம் பெருமானே!

சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிச் சென்ற வெள்ளையானைக்கு முன் அவரைச் சேவித்துக் கொண்டே இங்கே வந்து விட்டேன். தேவரீரின் #ஐந்தெழுத்து மந்திரமே யான் ஏறிய புரவிக்கு அந்த மாயசக்தியைத் தந்து இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்ந்தது. தேவரீர் பொழியும் கருணை வெள்ளம் அடியேனை இங்கே கொண்டு வந்து ஒதுக்கியதால் இப்பேறு பெற்றேன். மலைமகள் நாயகனே! ஒரு விண்ணப்பம். அடியேன் தேவரீரது திருவருள் துணை கொண்டு திருவுலா ஒன்று பாடியுள்ளேன். அதனைக் கேட்டருள வேண்டும்!” என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

அப்பொழுது சிவபெருமான் இளம் புன்னகையுடன் “”அப்படியா… சரி… அதனைச் சொல்!” என்று திருவாய் மலர்ந்தருள, சேரமான் பெருமாள் நாயனார், உடனே திருக்கயிலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்கும்படி செய்தார்.

அதனைச் செவிமடுத்த சிவன் அகமகிழ்ந்து அருள் செய்து, “”நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு!” என்று பணித்தார். சேரமான் பெருமாள் நாயனாரும் சிவகண நாதராகிச் சிவமூர்த்திக்குத் தொண்டரானார்.

#சிவாயநம

No comments:

Post a Comment