Friday, 10 July 2020

சமாதி நிலை யோகம் -திருமூலர்

இது சித்தர்களின் குரல் சிவசங்கர் அவர்களின் பதிவு. நல்ல உபயோகமான முறை விளக்கங்கள் ஆகையால், இங்கே பதிவு செய்து அளிக்கிப்படுகிறது.

"சமாதி"  குறித்த என் குருநாதர் திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் சொல்லியுள்ள அபூர்வ யோக  ரகசியங்களை உங்களுடன் ஆழமாக பகிர்கிறேன்...

618-சமாதி நிலை
-------------------------------

சமாதிய மாதியில் தான் சொல்லக் கேட்கின்
சமாதிய மாதியில் தான் எட்டும் சித்திக்கும்
சமாதிய மாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதிய மாதி தலைப்படும் தானே.

இயமம் முதல் சமாதி வரை செல்லும் முறையைக் கேளுங்கள். இயமம் முதல் சமாதி வரை உள்ள படிகளை முறையாகக் கடந்தால் அட்டாங்க யோகத்தின் கடைசிப் படியாகிய சமாதியும் தானேக் கைக் கூடும்.

619- சமாதியில் பேரொளி தோன்றும்.
------------------------------------------------------------------

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்;
அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.

விந்துவும், நாதமும் தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்கும் பொழுது சமாதி யோகத்தில் சீவன் பொருந்தி இருக்கும். அப்போது சிவனுடைய ஞான வடிவம் ஒரு பேரொளியாகக் காட்சி அளிக்கும்.

620-மனம் அடங்கும்.
------------------------------------

மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு;
மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை;
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே.

நினைக்கின்ற மனம் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பிராண வாயுவும் உண்டு. மனம் சிந்திப்பதை விட்டு விட்டால் பிராண வாயுவில் அசைவு ஏற்படாது. சிந்திப்பதை விட்டு விட்டு மகிழ்வோடு இருப்பவரின் மனம் தானே மனோலயம் அடைந்து அடங்கி விடும்.

621-பிராணன் அடங்குதல்.
-----------------------------------------------

விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டு உணர்வாகக் கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழுங்கிரி யத்திடைக்
கொண்டு குதிரைக் குசை செறுத்தாரே.

நீர் ஊற்றைப் போன்று பிளந்து கொண்டு வெளிப்படும் சிவசோதி. சிவம் என்பதே ஒரு ஞானக் காடு ஆகும். இதைக் கண்டு உணர்வு மயமாக இருப்பவர், பிராணன் என்னும் குதிரையைத் தலை என்னும் மலை மேல் செலுத்திவிட்டு, அதை மனம் என்னும் கயிற்றால் கட்டி விடுவர்.

622-காலன் கனவிலும் இல்லை.
---------------------------------------------------------

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவில் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.

தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சிவனை நாடி, முகத்தில் உள்ள நான்கு ஞான இந்திரியங்களும் பொருந்தும்படி இருப்பவர்களே! பரந்த சஹஸ்ர தளத்தின் மேலே உள்ள அகண்டத்தைக் கண்ட பின் உங்களுக்கு யமன் என்ற சொல் கனவிலும் இல்லை.

623-சிவயோகி.
--------------------------

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பிருத்வீ முதலிய மண்டலங்கள் ஐந்து; அகரம் முதல் உன்மனி வரை உள்ள கலைகள் பன்னிரண்டு, ஆதாரச் சக்கரங்களில் அட்சரங்களை இடமாகக் கொண்ட தேவதைகள் நாற்பதெட்டு. இவற்றை நிராதாரத்தில் கண்டு, எங்கும் பரந்துள்ள சிவனடியைச் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.

624- சிவக்கனி.
---------------------------

பூட்டுஒத்த மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.

கிணற்றுச் சகடையின் உதவியுடன் கயிறு மேலும் கீழும் போக இயலும். அது போன்றே மனதில் எழும் எண்ணங்களுக்கு ஏற்பப் பிராண வாயு மேலும் கீழும் போகும். அந்த பிராண வாயுவை மேலே பிரமரந்திரத்தில் பொருத்த வேண்டும். இதையும் அதையும் தேடி, இங்கும் அங்கும் அலையாமல், விழிப்புடன் இருந்தால், சிவன் என்னும் தோட்டத்து மாங்கனியுடன் அசைவின்றிப் பொருந்தி இருக்கும் பேறு சித்திக்கும்.

625-மனம் அடங்கினால் கிடைப்பது?
----------------------------------------------------------------

உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார்;
அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திருவரை யாமனம் தீர்ந்துஅற்ற வாறே.

ஆன்ம வடிவை அறிந்து கொள்ளும் வழி இது. தேவர்கள் கடலைக் கடைந்து அமுதம் பெற்று அதனை உண்டார்கள். அதனால் அவர்கள் சிரசின் உச்சியில் சென்று அங்குள்ள அமுதத்தைப் பருகவில்லை. மனத்தை அடக்கித் தலையின் மேல் பொருத்துவதே உண்மை ஸ்வரூபத்தை அறியும் வழி ஆகும்.

626- சிவனுடன் கூடி இருத்தல்.
------------------------------------------------------

நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொன்னின் உள்ளே திகழ்க்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி, அருத்தி ஒடுங்கிப் போய்க்
கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே.

சிவபெருமான் நம்பிக்கைக்கு உரியவன்; முழு முதல் பொருளாவான்; நான் மறைகளை ஓதியவன்; செம்பொன்னின் நிறம் கொண்டவன்; சோதியாக விளங்குபவன்; அவன் மேல் அன்பு கொண்டு தன் ஆசைகளை அடக்கிச் சஹஸ்ரதளத்தில் நின்று பயிற்சி செய்பவனின் நிட்டையில் சிவபெருமான் கலந்து நிற்பான்.

627-குண்டலினி சக்தி.
----------------------------------------

மூலத்து மேலது முச்சதுரத்தது
கால் அத்திசையில் கலக்கின்ற சந்தியில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

குண்டலினி சக்தி நான்கு இதழ்த் தாமரையாகிய மூலாதாரத்தில் முக்கோண வடிவு கொண்டிருக்கும். அபானன் மூச்சுக் காற்றுடன் சேரும் இடத்தில், நெற்றியின் நடுவே உள்ள அர்த்த சந்திரன் வடிவில் பல வேறு கலைகளாகத் தோன்றும்.

628-திங்கள் மண்டலம்.
-----------------------------------------

கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரமாகத் தகும் தண் சமாதியே.

வீணான எண்ணங்களைத் துறந்து விட வேண்டும்; மூலத் தீயுடன் கலந்து மேலே செல்ல வேண்டும்; சிற்பத் திறன் வாய்ந்த இந்த அழகிய உலகங்களை உருவாக்கிய பேரொளி வீசும் சிவனைத் தேட வேண்டும். மதி மண்டலத்தில் அவனுடன் பேதமின்றிப் பொருந்தி இருக்க வேண்டும். இதுவே சாந்தம் மிகுந்த சமாதி நிலை ஆகும்.

629-நடுவு நிலைமை.
--------------------------------------

தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்;
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்;
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும் ;
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.

இத்தன்மை வாய்ந்தவர்களுக்கு ஆன்மத் தத்துவம் நன்கு விளங்கும். சிவனுடன் சேர்ந்திருக்கும் சக்தியின் அருள் மிகுந்திடும். காமக் குரோதங்கள் போன்ற மன மாசுகள் அகன்று விடும். நடுவு நிலைமை என்பது தானே வந்து சேரும்.

630-நீங்காத அன்பு கொள்வர்.
----------------------------------------------------

சோதித் தனிச்சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமால்
ஆதி பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடி பணிந்து அன்பு உறுவாரே.

ஒளி வீசும் ஒப்பில்லாத சுடர் ஆவான் சிவன். மன மலம் நீங்கிச் சமாதியில் பொருந்தியுள்ள சீவனும் சிவனும் சமாதியில் ஒன்றேயாவர். படைப்புக் கடவுள் பிரமனும், கடல் வண்ணனாகிய திருமாலும் சிவனிடம் கொள்ளும் அன்பை அந்தச் சீவனிடமும் கொள்வர்.

631-சமாதி தேவையில்லை!
-------------------------------------------------

சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்;
சமாதிதான் இல்லை தான் அவன் ஆகில்;
சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே.

சமாதியில் இருப்பவர்களுக்கு அனேக யோகங்கள் கைக்கூடும். எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவர்களுக்குச் சமாதி தேவையில்லை. ஆன்மாவே சிவம் என்று ஆகிவிட்டால் சமாதி தேவையில்லை. சமாதியினால் அறுபத்து கலை ஞானங்களும் தானே வந்து சேரும்.

632-உகந்ததை ஈவான் ஈசன்.
--------------------------------------------------

போது கந் தேறும் புரிச்சடையானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவ னென்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால் விடை யோனே.

சஹஸ்ரதளத்தில் விளங்கும் சிவன் திருவடிகளை அடைய விரும்பியவர் அவற்றை எப்படியேனும் அடைந்து விடுவர். அவர்கள் விண்ணுலகப் பேற்றினையும் அடைவர். காளையை ஊர்தியாகக் கொண்டு உமை அன்னை மனம் மகிழும்படி நடனம் செய்யும் பிரான், தன் அடியவர் விரும்புவது என்ன என்று அறிந்து கொண்டு அவற்றையே அவர்களுக்கு ஈவான்.

633-சிவபதம் சேரலாம்.
-----------------------------------------

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன் புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவ ரெதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.

சிவன் திருவடிகள் மேல் அன்பு வைத்து, அவன் புகழையே கேட்டும், அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டும் இருப்பவர்களுக்கு, முனிவர்கள் நேரே வந்து எதிர் கொண்டு அழைத்துச் செல்லும் அரிய சிவபதம் கிடைக்கும்.

634-இம்மையிலும் இன்பம்.
-------------------------------------------------

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வனிவ னெனத்
தருந்தண் முழவங் குழலு மியம்ப
இருந்தின்ப மெய்துவ ரீசன் அருளே.

வருந்தித் தவம் செய்பவர் அடைவது என்ன?
தேவர் உலகத்துக்குத் தலைவனாக, தேவர் உலகம் செல்லும் தகுதி வாய்ந்தவன் இவன் என்று முரசும், குழலும் ஒலிக்கும்படி அவன் இம்மையிலும் சிவன் அருளால் இன்பம் அடைவான்.

635-பூரண கும்பம்.
--------------------------------

செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம் வந்தெதிர் கொள்ள
எம்பொன் தலைவ னிவனாம் எனச்சொல்ல
இன்பக் கலவி யிருக்கலு மாமே.

பொன்னொளி வீசும் சதாசிவ மண்டலத்தை அடையும் பொழுது பூரண கும்பத்துடன் தேவர்கள் எதிரே வந்து அழைத்துச் செல்வர். "எங்கள் பொன் மண்டலத்தின் தலைவன் இவனே!" என்று சொல்லும்படி இன்பச் சேர்க்கையில் இருக்க இயலும்.

636-"யாமே இவன்!" என்பான் சிவன்

சேருறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆரிவ னென்ன வரனாம் இவனென்ன
ஏருறு தேவர்க ளெல்லா மெதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய் கண்டவாறே.

சிவகதியை அடையும் காலம் வந்தவுடன் திக்பாலகர்கள் முதலான தேவர்கள் "யார் இவன்?" என்று வினவும் போது "யாமே இவன்!" என்பார் சிவபெருமான். அழகிய தேவர்கள் எதிர்க் கொண்டழைக்கக் கருமை நிறம் கொண்ட கழுத்தை உடைய சிவனை நேரில் காணக் கிடைக்கும்.

637-எங்கும் செல்ல வல்லவர்.
-----------------------------------------------------

நல் வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்காப் பெருங்கொடை
இவ்வழி யாள ரிமையவ ரெண்டிசைப்
பல் வழி எய்தினும் பார் வழி யாகுமே.

பிரணவ உபாசகர் நல்ல வழியை நாடுவார். நமன் வழியை மாற்றுவார். குறையில்லாத கொடை வள்ளல் போன்ற இந்த யோகியர் தேவர் உலகில் எங்கு சென்றாலும் அது நன்கு தெரிந்த வழி போலவே இருக்கும்.

638-சிவயோகியின் பெருமை.
-----------------------------------------------------

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலி செய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்கவல் லார்க்கும் தன்னிடமாமே.

அறிதுயில் கொள்ளும் திருமாலுக்கும், ஏழு உலகங்களைப் படைக்கும் பிரம்மனுக்கும், அழிவில்லாத ருத்திரனுக்கும், அமுதம் உண்டு வாழும் தேவர்களுக்கும் இருப்பிடம் சிவயோகியரே ஆவார்.

639-சமாதியின் பயன்.
---------------------------------------

காரியமான வுபாதியைத் தான் கடந்து
ஆரிய காரண மேழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

ஆணவ மலத்தின் மறைப்பினால் ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பம் ஏழு வகைப்படும். சிவனுடைய இறைத் தன்மைகள் ஏழு வகைப்படும். ஜீவனின் உபாதிகளைத் தொலைத்விட்டு சிவனுடைய இறைத் தன்மைகளில் பொருந்தி. மாயையை விலக்கிச் சிவனுடன் பொருந்துவதே சமாதியின் பயன்.

ஜீவனின் ஏழு துன்பங்கள்:
இறையின்மை, சிற்றறிவு, சிறிய அளவு, மாயை, சிறிய ஆற்றல், சுதந்திரம் இன்மை, காணாமை.

இறைத் தன்மைகள் ஏழு:
இறைமை, பேரறிவு, எல்லையின்மை, மாயையின்மை, பேராற்றல்,முழுச் சுதந்திரம், ஒன்றி உணர்தல்.

குறிப்பு:-
*********
மேலும் திருமூலர் பெருமானால்   உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ  யோக முறையை  முழுமையாக தனிப்பட்ட என்னுடைய திருமந்திர whatsaap  வகுப்பில் online இல் நேரடியாக கற்பிக்கிறேன். கற்க விரும்புபவர்கள் கற்று கொள்ளுங்கள். உலகில் எங்கிருந்தாலும் நேரடியாக whatsaap மூலம் கற்று கொள்ளும் அறிய வாய்ப்பு. கற்க விரும்புபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம் குமார் அவர்களை (+918903834667) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வகுப்பில் இணையவும்.

         - சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment