Sunday, 12 July 2020

ஈசன் திருமணத்திற்கு எழுந்தருளல்

*கந்தபுராணம் பாகம் 9*

*ஈசன் திருமணத்திற்கு எழுந்தருளல்*

*இவ் வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் மலையரசன், நெருங்கிய சுற்றத்தோடும், நிறைந்த அன்போடும் திருக்கயிலாய மலையை அடைந்தான்: நந்தி தேவரது ஆணை பெற்று, உயிருக்குயிராகிய சிவபெருமான் சேவடியை வணங்கி நின்று, "எம்பெருமானே! ஆதியில் அகில உலகமும் ஈன்றருளிய அன்னையைக் காதலோடு மணம்புரியத் திருவுளம் கொண்டீர்! சோதிட நூலோர் குறித்த நன் முழுத்தம் பங்குனி உத்தரமாகும். அந் நாளே இந் நாள் ஆதலால், இமயமலைக்கு எழுந்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம்* *செய்தான். ஈசன் அதற்கு இசைந்தருளினார். மலையரசன் விடை பெற்றுச் சென்றான்.*

*உடனே ஈசன், நந்தி தேவரைக் கருணையோடு அழைத்தார்; "நம் திருமணத்தைக் காண்பதற்குச் சிறந்த உருத்திர கணங்கள், திருமால் முதலாயினோர், இந்திராதியர்கள் எல்லோரையும் வரவழைப்பாயாக” எனப் பணித்தார்.* *ஆணைப்படியே எல்லோரையும் நந்திதேவர் வரவழைத்து, உருத்திரர்கள், சிவகணங்கள், தேவர்கள் -* *இவர்களைத் தனித் தனியாக வகுத்துத் தம் கை விரலாற் சுட்டி, ஈசனிடம் காட்டிப் பிரம்பேந்தி நின்றார்.* *அப்பொழுது பிரமதேவன், பலவகை நகைகளைப் பொற்பீடத்தின்மீது வைத்து எடுத்துக்கொண்டு வந்து, ஈசன் முன்னே வைத்து, வணங்கி, ‘ஐயனே! உமக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை.* *அடியேம் உய்யும் வண்ணம் மணம் புரியத் திருவுளம் கொண்டீர். ஆதலால், திருமேனியில் அணிந்துள்ள அரவப் பணியெல்லாம் களைந்து, இச் செவ்விய அணிகளை அணிந்துகொள்ள வேண்டும்” என்றான்.* *அப்பொழுது பெருமான் புன்னகை கொண்டு, "அன்புடன் நீ தந்த இந் நகைகளை நாம்* *அணிந்துகொண்டாற் போலவே மகிழ்வுற்றோம்!”*      *என்று தம் திருக்கரத்தால் அவற்றைத் தொட்டு அருளினார். பின்பு, தம் திருமேனியில் அமைந்த அரவங்களே*
*ஆபரணமாக விளங்கும்படி ஈசன் தம் திருவுள்ளத்திலே கருதினார். அவை அவ் வண்ணமே ஆயின. உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளாகிய ஈசனுக்கு இச் செயல் அரிதாகுமோ? அதனைக் கண்டு யாவரும் கை கூப்பித் தொழுது நின்றார்.*

*முன்னொருகால் திருமாலும் அயனும் தேடிக் காணாத தேவதேவன், உமாதேவியாரிடம் செல்லத் திருவுளம் பற்றினார்: அக் கருத்தை அங்கேயிருந்த தலைவர்க்குக் குறிப்பினால் உணர்த்தினார்; இமயமாமலைக்கு எழுந்தருளினார்.*

*ஈசனார் மணக்கோலங்கொண்டு இமய மாமலையிலே எழுந்தருளியபோது, மங்கையர், அப்பெருமானது அற்புதத் திருவுருவைக் கண்டு வணங்கிக் கங்கு கரையற்ற காதல் வெள்ளத்திலே மூழ்கினர்; "எம்பெருமான் அணிந்துள்ள நகைகளும், தரித்துள்ள பொன்னாடையும், பூசியுள்ள கலவைச் சந்தனமும், புனைந்துள்ள புதுமலர் மாலைகளும் அவருடைய இயற்கையான பேரழகை மறைத்தனவே,” என்று மனந் தளர்ந்தர், சிலர். முறுக்கமைந்த நெடுஞ்சடை முடியுடைய செம்மேனி எம்மானை நோக்கி நின்று மனம் உருகினார், சிலர்; காதலுற்று வெதும்பிக் கருகினார், சிலர்; தோழியரோடு பெருகும் காதலைப் பேசினார், சிலர். "பல பல பேசுதலால் வரும் பயன் என்னை? பெற்றம் ஊர்ந்த பெருமானை மணந்திட மலைமகள் பெருந்தவம் புரிந்தாள். நாம் அவ்வாறு செய்தோமில்லை” என்று பெருமூச்சு எறிந்தார், சிலர்.*

*இங்ஙனம் இறைவன் பவனி வரும் பொழுது, திருமண விழாவினைக் காணும்பொருட்டு எல்லாப் புவனத்தில் உள்ளவர்களும் வந்து சேர்ந்தமையால் இமயமலை வருந்தி நடுக்கமுற்றது. பூவுலகத்தின் வடதலை தாழ்ந்தது; தென்தலை உயர்ந்தது. வானவரெல்லாம் ஏக்கமுற்றார். ‘தீங்கு நேர்ந்ததோ' என்று நிலவுலகத்தார் மயக்கம் உற்றார். பெருமானருகே இருந்த பெரிய முனிவரும் வருத்தமுற்றார். எல்லோரும் 'சிவனே! சிவனே! என்று ஒலமிட்டுச் சிந்தை தளர்ந்தார்.*

*அது கண்ட ஈசன் புன்னகை புரிந்து, அடியார் துயரம் தீர்க்குமாறு, நந்திதேவரை நோக்கி, "கடலைக் கையகத் தடக்கிய அகத்திய முனிவரை இங்கு அழைத்து வருக” என்றார், முனிவரும் வந்து இறைவன் திருவடியிற் பணிந்தார். அந் நிலையில், ஈசன் "குறுமுனியே! இவ்விமய மலைக்கு யாவரும் வந்தமையால் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது; ஆயினும், முனிவா! ஒப்பற்ற நீ இம் மலையினின்றும் நீங்கி வளமார்ந்த தென்னாட்டிற் போந்து, பொதியமலையில் அமர்வாயாயின், உலகமெல்லாம் முன்போலவே சமநிலை யடைந்து விளங்கும்” என்றார்.*

*பிறை யணிந்த பெருமான் இங்ஙனம் பணித்தபோது இனிய மொழியுடைய தமிழ் முனிவன் அச்சம் எய்தி, "ஐயனே! அடியேன் செய்த குற்றம் ஏதேனும் உண்டோ? திருமணம் காண ஆசையுற்று வந்த தீவினையேனாகிய என்னை இங்கே இருக்கப் பணியாமல் நெடுந்தூரம் செல்லப் பணித்தீரே!” என்று வருந்தினான்.*

*அப்பொழுது எம்பெருமான் முனிவரை அமர்ந்து நோக்கி, "உன்னைப் போன்ற முனிவர்கள் உலகத்தில் உண்டோ? அன்னவாகனம் உடைய பிரமனும் உனக்கு நிகரல்லன், ஆதலால், நீ கருதிய எல்லாம் தவறாமல் முடிப்பாய். வேறுள்ள முனிவராலும் தேவராலும் இக் காரியம் ஆகுமோ? யாவரினும் சிறந்த பேறு பெற்ற உன்னாலேயே முடியும். ஆதலால், இப்பொழுதே புறப்படு” என்று அருளிச்செய்தார்.*

*அவ்வுரை கேட்ட முனிவர், "எம்பெருமானே! இப் பணியை எனக்கு அருள்கூர்ந்து அளித்தீர்! ஆயினும் இங்கு நிகழவிருக்கும் தெய்வத் திருமணக் காட்சியைக் கண்டு வணங்காமல் போவதற்கு இயலவில்லையே! நெஞ்சம் வருந்துகின்றதே!” என்று விண்ணப்பம் செய்தார். அம் மொழி கேட்ட கயிலைநாதன், "முனிவா! மனம் வருந்தாதே பொதிய மலைக்குச் செல். அங்கே வந்து நாம் திருமணக்காட்சி தருவோம். மனமகிழ்ந்து காண்பாயாக. எம்மை நினைத்து அம் மலையிற் சில காலம் இருந்து, பின்னர் முன்போலவே எம்மிடம் வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார்.*

*தமிழ் முனிவன் மனமகிழ்ந்து, சிவபெருமான் சேவடியைப் பன்முறை வணங்கிக் கை கூப்பித் தொழுது, பெருமூச் செறிந்து, பிரியா விடை பெற்றுத் தென்திசை நோக்கிச் சென்றான். பொதியம் என்னும் பேர் பெற்ற மலையில் முனிவன் போய் அமர்ந்தபோது வடதலையும் தென்தலையும் துலாக்கோல் போல் சமனாகி நின்றன. உயிர்கள் எல்லாம் துயரம் ஒழிந்து, ஈசனைத் துதித்து மகிழ்ச்சியுற்றிருந்தன.*



No comments:

Post a Comment