Monday, 13 July 2020

விஷ்ணு புராணம் 1

*விஷ்ணு புராணம்*
🌹🌷💐🌹🌷💐🍀🚩
**********************
*பகுதி 01*
*********
*பகிர்வுKSMS*

*ஒம் நமோ நாராயணாய*

*புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம்*

*ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார்*
*என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள்*
 *தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலகஉற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர், பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள். ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி, பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார். இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்*

*தொடரும்*

No comments:

Post a Comment