Thursday 16 April 2020

தினம் ஒரு ஆலய கோபுர தரிசனம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் பரசுநாதசுவாமி திருக்கோவில், முழையூர்

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர் முழையூர்

இறைவன் பெயர் பரசுநாதசுவாமி

இறைவி பெயர் ஞானாம்பிகை

பதிகம் அப்பர் (6-70-1)

எப்படிப் போவது

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் வந்து, 'ரயில்வே கேட்'டைக் கடந்து பட்டீச்சரம் சாலையில் வந்து, சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து 11, 35, 52, 61 எண்கள் கொண்ட நகரப்பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோவில்

முழையூர்

பம்பப்படையூர் அஞ்சல்

வழி கும்பகோணம்

கும்பகோணம் வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்

PIN - 612703

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பழையாறை, கொல்லியறைப்பள்ளி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

இடது கை நடுவிரலின்

நுனியில் சூலத்துடன் முருகர்

முழையூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி 6-70-1

தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்

கொல்லிக் குளிர் அறைப்பள்ளி கோவல்

வீரட்டம் கோகரணம் கோடிகாவும்

முல்லைப் புறவம் முருகன் பூண்டி

முழையூர் பழையாறை சத்தி முற்றம்

கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும்

கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :

தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,

கொல்லி அறைப்பள்ளி, கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை

உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,

குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில்

கயிலாய நாதனைக் காணலாம் .

கோவில் அமைப்பு: தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் பழையாறை வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி என்ற நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. தளி என்பதற்கு கோவில் என்று பொருள்படும் இந்தப் பழையாறையில் மேற்றளியில் கைலாசநாதர் கோவிலும், வடதளியில் தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளியில் சோமேஸ்வரர் கோவிலும், தென்தளியில் பரசுநாதசுவாமி கோவிலும் உள்ளன.

பழையாறை தென்தளி என்ற பகுதி தான் முழையூர் எனப்பட்டது. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் கோவில் பழையாறை வடதளி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். மேற்றளி கைலாசநாதர் கோவில், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவில், தென்தளி (முழையூர்) பரசுநாதசுவாமி கோவில் ஆகிய மூன்றும் தேவார வைப்புத் தலங்களாகும்.

மேற்கு நோக்கிய ஒரு மூன்று நிலை கோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிளறது. கோபுர வாயில் கடந்து 2-வது வாயிலை அடையலாம். 2-வது வாயில் மேற்புறம் நந்தி அருகில் இருக்க சிவன், பார்வதி, இருபக்கமும் முருகர், விநயாகர் இருக்க கைலாயத்தில் இருப்பது போன்று சுதை உருவங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன.

2-வது வாயில் கடந்து உள் நுழைந்தால் முன் மண்டபத்தில் நந்தி, பலிபீடமும், அதையடுத்து உள்ளே அர்த்த மண்டபத்தில் ஒரு நந்தி, பலிபீடம் இருக்கக் காணலம். மூலவர் பரசுநாதசுவாமி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் உள்ள இந்த லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வடிவைச் சார்ந்தது. கருவறை சுற்றி வரும் போது கிழக்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவர் காட்சி தரும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.

அழகிய சிற்ப வேலைப்பாடுடன் உள்ளது. கிழக்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகரும் காட்சி தருகிறார். இத்தலத்தில் முருகப்பெருமான் வேலுக்கு பதிலாக சக்திக்குரிய சூலத்தை தாங்கியிருக்கிறார். அதையும் இடது கை நடுவிரலின் நுனியில் தாங்கியிருப்பது விசேஷம்.

தலச் சிறப்பு: தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிக் கொன்றார் பரசுராமர், அதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்குவதற்காக அவர் முழையூர் திருத்தலத்திற்கும் வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை பூஜை செய்தார். சிவனருளால் அவலுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. பரசுராமர் வழிபட்டதால் இத்தல இறைவன் பரசுநாதசுவாமி என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தில் அட்சய திருதியை மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. திருதியை திதி நாட்களில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அட்சய திருதியை மட்டுமின்றி எல்லா வளர்பிறை, தேய்பிறை திருதியை திதிகளிலும் சுவாமிக்கு நெய் அன்னம் படைத்து வழிபடுகின்றனர்.

உணவு தொடர்பாக உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிவின்மை போன்ற நோய்களுக்கு நிவாரணம் வேண்டி இந்த பூஜையை செய்கின்றனர். அட்சய திரிதியை நாளன்று பக்தர்கள் மல்லிகை பூக்களை தங்கள் கையாலேயே தொடுத்து இறைவனுக்கு அணிவித்து பிரார்த்தனை நிறைவேற்றலாம்.

இத்தலத்தில் மாசி மாதத்தில் 13, 14, 15 ஆகிய நாள்களில் சுவாமி மீது சூரிய ஒளிபட்டு சூரிய பூஜையும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment