Thursday 30 April 2020

திருப்புகழ் - 1120 பத்து ஏழு எட்டு

*திருப்புகழ் - 1120 பத்து ஏழு எட்டு  (பொதுப்பாடல்கள்)*


பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்

பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் ...... கிரைதேடி

எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் ...... திலுமோடி

எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் ...... கடவேனோ

சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்சா டிக்கற் ...... பணிதேசா

சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் ...... சையமார்பா

முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் ...... கிறையோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.

*விளக்கம்*

 பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் ரட்டால் = பதினான்கு, ஆக (10+56+16+14=96) தொண்ணூற்றாறு தத்துவங்களால்*  அமைக்கப்பட்டே ஒழுங்குபடப் பொருந்தி உள்ள, தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால் (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் என் தலையில் எழுதியுள்ளதோ?

உண்மைப் பொருளே, என்றும் இளமையானவனே, அத்தனைச் சேனைகளோடு கூடி வந்த சூரனையும், கிரெளஞ்ச மலையையும் அழிவு செய்து நீதி நெறியை நிலை நாட்டிய ஒளி பொருந்தியவனே, ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திரு நெற்றிகளை உடையவனே, அந்தக் காந்தள் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே, (மண், பெண், பொன் என்ற) மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப் பொருளே, அறிவிற் சிறந்தவனே, இப்பிறவியிலேயே ஞானம் பெற்றவர்களுக்குத் தலைவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.


No comments:

Post a Comment