Saturday 18 April 2020

அகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்

அகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் !

மதுரை அருகே உள்ள ராஜபாளையத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் மகாசக்தி பீடம் இருக்கிறது. இங்கு சமயத்திற்கு வந்து சங்கடங்களை தீர்க்கும் சமய புரத்தாளின், உற்சவ திருநாமமான ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்ற திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலித்து வருகிறாள். இந்த அன்னை 41 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை ஓடி வந்து களைபவளாக அருளாட்சி செய்து வரு கிறாள்.

இந்த அன்னையின் ஆலயம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. ஆயிரம் கண்ணுடையாள் அம்மனைத் தவிர, இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி கருமாரியம்மன், சொர்ணகர்ஷண பைரவர், நாகராஜர்-நாகராணி, புற்று அம்மன் சுயம்பு பீடம் மற்றும் வாசலில் நின்ற கோலத்தில் 18-ம் படி கருப்பணசாமி ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

ஆயிரம் கண்ணுடையாள், மகா வராகி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி ஆகிய மூன்று தேவியர்களும் முக்கிய தெய்வங்களாக வீற்றிருந்து அருள்வழங்கும் அற்புதமான திருத்தலம் இது. இந்த மூன்று தேவியர்களும் தனித்தனி சன்னிதியில் கோவிலின் பிரதான தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். பக்தர்களை காக்கும் இந்தத் தேவியர்களின் அவதார சிறப்புகளையும், அருளை பெற பக்தர்கள் வணங்கி வழிபடும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

அம்பிகையின் நித்திய கன்னிகளாக தோன்றியவர்கள், சப்த கன்னியர் என்று கூறினாலும் இவர்களின் தோற்றம் பற்றி பல கதைகள் உண்டு.

வராகி அம்மன்

பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்த கன்னியர்கள். இந்த வரிசையில் 5-வதாக வராகி அம்மன் உள்ளார். அவர் பஞ்சமி தாய்.. வாழ்வின் பஞ்சங்களை போக்குபவள். வராகி அம்மன் தோற்றம் கோபத்தின் உச்சமாக இருந்தாலும், பக்தர்களுக்கு அன்பை மழையாக பொழிபவள். வராகி அன்னை, திருமாலின் வராக அவதார அம்சமாவார்.

வராக முகத்தையும், மனித உடலோடு கூடி 4 கரத்தினையும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்ட அம்மன் இவர். மிருக பலம், தேவ குணம் கொண்டு பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவராக இந்த அன்னையை வழிபாடு செய்கிறார்கள். பஞ்சமி, பவுர்ணமி அல்லது ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து ஐந்து கிழமைகளில் தேங்காய் முடியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால், வேண்டிய பலனை அள்ளிதருவாள் வராகி என்று புராணங்கள் கூறுகின்றன.

பிரத்தியங்கிரா தேவி

நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாளின் உக்கிரத்தை போக்கு வதற்கு வழி தெரியாமல், தேவர்களும் முனிவர்களும் தவித்து நின்றனர். பின்னர் அவர்கள் சிவ பெருமானை வேண்ட, அவர் சரபு என்ற பறவையாக உருவெடுத்து வந்தார். அதாவது பறவையும், பூதமும், மிருகமும் கலந்த புதிய வடிவம் அது. அந்த உருவத்துடன் நரசிம்மருடன் போரிட்டார் சிவபெருமான்.

அப்போது நரசிம்மர், கண்ட பேரண்டம் என்ற பறவையை தோற்றுவிக்க, அந்தப் பறவை ஈசனை எதிர்த்தது. உடனே சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். அந்த பிரத்தியங்கிரா தேவி, பேரண்ட பறவையை அப்படியே விழுங்கினாள். இதையடுத்து சிவபெருமான், நரசிம்மரை வென்று அவரது ஆக்ரோஷத்தை குறைத்து சாந்தப்படுத்தினார். சிவபெருமான் வடிவெடுத்த சரபு பறவை இறக்கையின் ஒரு பகுதியாக பிரத்தியங்கிரா தேவி உள்ளார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசையிலும் மிளகாய் யாகம் செய்து வழிபாடு செய்தால், பிரத்தியங்கிரா தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ஆயிரம் கண்ணுடையாள்

வராகி அம்மன், பிரத்தியங்கிரா தேவியருக்கும் முதன்மை தெய்வமாக விளங்குகிறாள், ஆயிரம் கண்ணுடையாள். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கோவிலின் பெருவிழா நடைபெறும். அப்போது ஆடி மாத பூக்குழி வைபவம் மிக சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமிக்கு 1,008 கலசாபிஷேகமும், குடும்ப நல வேள்வியும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதே போன்று தை மாத பவுர்ணமியில் இருமுடி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் மாலை அணிவித்து விரதமிருந்து, செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி இங்கு வந்து அன்னைக்கு அகல் விளக்கு பூஜையும் நடைபெறும்.

ஒவ்வொரு திருவிழாவின் போதும் 41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாளுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம், கூடை கூடையாக மலர் அபிஷேகமும் செய்யப்படும். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இந்த திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆயிரம் கண்ணுடையாளை மனதார வேண்டிக்கொண்டால், பில்லி சூனியம், பூமி, வாஸ்து, வியாபாரம், கடன் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வதாகவும், கல்வி, செல்வம், ஞானம், பெருக வழி கிடைப்பதாகவும், கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லைகள் இன்றி வளமான வாழ்வு கிடைப்பதாகவும் இங்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் யாகம், பூஜைகள் வெகு சிறப்பாக நடை பெறும். இந்த விழாக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநில சிவாலயங் களைப் போன்ற சிறப்பு

தெய்வீக மணத்துடன் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஆயிரம் கண்ணுடையாள், சிவனின் பத்தினி அம்சமானவள் என்பதால், சமீபத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாணலிங்கம் ஆவுடையுடனும், சுற்றி 18 சித்தர்கள் அமர்ந்த கோலத்துடன் பூஜை செய்யும் விதமாகவும் அமைந்த சிலை தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான வட மாநில சிவ ஆலயங்களைப் போன்று, இங்கும் பக்தர்கள் அந்த சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கி வழிபடுவதுடன், அந்த லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.

Sri Ayiram Kannudaiyal Mahasakthipeetam, Sakthipuram
sakthipuram rajapalayam road po, Tirumangalam, Tamil Nadu
099941 27038
https://maps.app.goo.gl/psXDQMxEcDf6RhvYA









No comments:

Post a Comment