Saturday 25 April 2020

திருப்புகழ் - 1115 மக்கள் ஒக்கல் (பொதுப்பாடல்கள்

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
     தத்தனத் தத்ததன ...... தனதான

*திருப்புகழ் - 1115 மக்கள் ஒக்கல்  (பொதுப்பாடல்கள்)*

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும்

வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே

புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி

சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா

கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.

*விளக்கம்*

குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல்,   பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ?

செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு,   அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே.

No comments:

Post a Comment