Wednesday, 13 May 2020

மகான் தியாகராஜர், வாழ்க்கையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு

#மகான்_தியாகராஜர் பற்றிய நிகழ்வு..
.........................................................
*காட்சி தந்தாள் கலைவாணி!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.........................................................
    *திருவையாற்றில் தம் இல்லத்தில், மகான் தியாகராஜர் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். அவரிடம் கேள்வி கேட்ட அன்பர் அந்த வித்தியாசமான கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

அவர் சென்ற பின்னரும் அந்த அன்பர் கேட்ட அந்தக் கேள்வி மட்டும், தியாகராஜரின் மனத்தையே சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. அந்த நியாயமான கேள்வியை அவர் மறுபடி மறுபடி நினைத்துப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது.

  வந்த அன்பர் கேட்ட கேள்வி இதுதான்:

 `சுவாமி! நீங்கள் ராமபிரானைப் பற்றி ஏராளமான கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்கள். உங்களை உலகம் புகழ்கிறது. நீங்கள் ராம பக்தர். எனவே ராமனைப் பற்றி நீங்கள் நிறையப் பாடுவது நியாயம் தான்.

நெளகா சரிதம் என்ற கீர்த்தனை நாடகத்தில் கண்ணனைப் பற்றியும் நீங்கள் பாடியிருக்கிறீர்கள். பிரகலாத சரிதம் என்ற நூலில் நரசிம்மனைப் பற்றியும் திருமாலைப் பற்றியும் நீங்கள் போற்றிப் புகழ்ந்திருக்கிறீர்கள்.

இப்படியெல்லாம் அற்புதமாகப் பாட உங்களுக்குச் சக்தி கொடுத்தவள் பிரம்ம தேவரின் மனைவியான அன்னை கலைவாணி தான் அல்லவா? சரஸ்வதி கடாட்சம் இல்லாவிட்டால் யாரால்தான் என்ன பாட்டுப் பாட முடியும் சுவாமி?

அப்படியிருக்க ஏன் நீங்கள் உங்களைப் பாடவைத்த சரஸ்வதி தேவியைப் பற்றி ஒரே ஒரு பாடல் கூட இயற்றவில்லை?`

 கேள்வி கேட்டவர் சிரித்தவாறேதான் கேட்டார். குறைசொல்லும் நோக்கமல்ல. அவரை முழுமையாகத் தெரிந்து கொண்டதால் கேட்கப்பட்ட இயல்பான கேள்வி. அவ்வளவு தான். கேட்டுவிட்டு விடையை எதிர்பாராமல் அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

 தியாகராஜர் திகைத்துப் போனார். அதுசரி. வந்தது யார்? ராமனே தானா? தன்னைச் சோதிப்பதற்காக வேறொரு மனித வடிவில் வந்தானா? யாருக்குத் தெரியும்? மனிதர்களைச் சோதிப்பது தெய்வங்களுக்கு வழக்கம் தானே?

  வந்தது ராமனாகவே இருக்கட்டும். அல்லவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அந்தக் கேள்வி மிக மிக நியாயமான கேள்வி தானே?

  தாயே கலைவாணி! இத்தனை பாடல்கள் எழுதினேன். ஆனால் உன்னைப் பற்றி ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றவே இல்லை அம்மா?

நான் வேண்டுமென்று உன்னைப் பாடாமல் இல்லை. ஆனால் ஏன் எனக்குக் கவிதாசக்தியை அருளிய உன்னைப் பற்றிப் பாடவேண்டும் எனத் தோன்றவில்லை எனத் தெரியவில்லையே?

உன்னைப் பாடாமலிருந்து ஒருவேளை நான் அபசாரம் செய்துவிட்டேனோ? இனியாகிலும் உன்னைப் பற்றிய பாடல் என் நாவில் உதிக்குமா? அதற்கு நீ அருள்வாயா?

 மகான் தியாகராஜரின் விழிகளிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவர் உடல் கலைவாணியைப் பாடாததால் உண்மையிலேயே ஏதோ அபசாரம் செய்துவிட்டது போன்ற உணர்வில் கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது.

  அப்போது அவர் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவர் வியப்போடு அந்த மாற்றத்தை உற்று நோக்கினார்.

  என்ன ஆச்சரியம்! அவர் உடலிலிருந்தே வெளிப்பட்டு, அன்னை கலைவாணி கையில் வீணையோடு அவர் எதிரே நின்றாள்! பக்திப் பரவசத்தோடு இருகரம் கூப்பி சரஸ்வதி தேவியை வணங்கினார் அவர்.

 `தாயே! என்னைப் பாட வைத்த என் தெய்வமே! என் கண்ணீர்க் குரல் உன்னை எட்டியதா? உன் கருணையே கருணை! எனக்கு பதில் சொல்லத் தான் நீ என் முன் தோன்றியிருக்கிறாயா? `

  தியாகராஜர் தழதழப்புடன் கேட்டார். கலைவாணி முத்துக் கொட்டியதுபோல் கலகலவென்று சிரித்தாள். அவள் சிரிப்பின் ஒலி அவள் இசைக்கும் வீணையின் ஒலியை விடவும் இனிமையாக இருந்தது.

 `மகனே தியாகராஜா! உன் கேள்விக்கு பதில் சொல்லவே நான் உன் முன் தோன்றினேன். உன் மனக் கவலையை மாற்றவே உனக்கு தரிசனம் தந்தேன். நான் உன்னிலிருந்தே வெளிப்பட்டேன் என்பதை நீ கவனித்தாயா?`

`ஆம் தாயே! கவனித்தேன். அதுதான் திகைத்துப் போய் அமர்ந்திருக்கிறேன்.`

 `தியாகராஜா! நீ எத்தனையோ கீர்த்தனைகள் எழுதியுள்ளாய். அவையெல்லாம் நீ எழுதியதல்ல. உன் மூலம் நான் எழுதியவையே. அதை உன் உள்மனம் உணர்ந்திருப்பதால்தான் நீ அளவற்ற அடக்கத்துடன் திகழ்கிறாய்.

ராமபிரானைப் புகழ வேண்டும் என்று எனக்கு ஆசை. என் கணவரான பிரம்மதேவனுக்கும் ஆசை. அதானால் தான் உன் நாவில் நான் இருந்து ராமபிரானைப் பற்றிய கீர்த்தனைகளை வழங்குமாறு பிரம்மதேவன் எனக்கு ஆணையிட்டார். நான் உன்னில் இருந்துகொண்டு உன் மூலம் ராமனைப் பற்றி பக்திரசம் சொட்டும் கீர்த்தனைகளை எழுதிவருகிறேன்.

 இதுவரை நீ எழுதிய கீர்த்தனைகள் எல்லாம் நீ எழுதியவை அல்ல மகனே! உன் மூலம் நான் எழுதியவை தான் அவை!`

  `இருக்கட்டும் தாயே! தெய்வ கடாட்சத்தால்தான் நான் கீர்த்தனைகள் எழுதுகிறேன் என்பதை நானே அறிவேன். என் செயலல்ல இது. இறைவன் செயல். ஆனால் கலைவாணியைப் பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று ஓர் அன்பன் கேள்வி கேட்கிறான். அந்தக் கேள்வி என்னைத் திடுக்கிட வைக்கிறது.

ராமனைப் பற்றியும் கண்ணனைப் பற்றியும் திருமாலைப் பற்றியும் எழுதிய நான் ஏன் கலைவாணி பற்றி எழுதவில்லை? நீயே தான் என்னிலிருந்து எழுதினாலும் உன்னைப் பற்றி நான் எழுத நீ ஏன் உத்தரவளிக்கவில்லை? உன்னைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை என்பது பெரிய குறையாக அல்லவா மக்களுக்குத் தோன்றும்?`

 கலகலவென்று சிரித்தாள் கலைவாணி. பின் கனிவோடு அன்பு ததும்பப் பேசலானாள்:

 `மகனே! உன்னிலிருந்து எழுதுவது நான்தான். அப்படியிருக்க நானே என்னைப் பற்றி எப்படி எழுதிக் கொள்ள முடியும்? ராம பிரானைப் பற்றி உன்மூலம் நான் புகழ்ந்து எழுதக் கூடும். ஆனால் என்னைப் பற்றி நானே புகழ்ந்து எழுதிக் கொள்வது என்பது எப்படிச் சரியாகும்?

கல்வியின் பயனே அடக்கம்தான். அப்படியிருக்க கல்விக் கடவுளான நான் அடக்கமில்லாமல் என்னைப் பற்றி நானே துதித்து எழுதுவேனா? நீ என்னைக் குறித்துப் பாடல் இயற்றாததற்குக் காரணம் இதுதான்.

அதுமட்டுமல்ல. உன் சென்ற பிறப்பிலும் நீ என்னைப் பற்றி எதுவுமே எழுதவில்லை மகனே! அதற்கும் காரணம் இதுவே தான். உன் முந்தைய பிறப்பிலும் உன் மூலம் நான்தான் ராமபிரானைப் புகழ்ந்து ராமன் சரிதத்தை எழுதினேன்.`

 தியாகராஜர் அளவற்ற வியப்போடு கலைவாணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். தனக்குச் சென்ற பிறப்பாமே? அதிலும் நான் ராம பக்தனாக இருந்தேனா? இதை விட வேறென்ன பாக்கியம் வேண்டும்?

என் ராம பக்தி பிறவிதோறும் தொடர்கிறதென்றால் அதுவன்றோ ராமனின் கருணை! அவனருளால் தானே அவன் தாள் வணங்க வேண்டும். என்னை ஒவ்வொரு பிறப்பிலும் ஆட்கொள்ளும் ராமா! உன் அருளே அருள்.

  தியாகராஜர் ஆவலோடு கலைவாணியைக் கேட்டார்:

 `தாயே! என் முந்தைய பிறப்பு எது? அப்போது நான் எவ்விதம் ராம பக்தனாக இருந்தேன்? ராமபிரானைப் பற்றி என்னென்ன எழுதினேன்? இதையெல்லாம் நான் தெரிந்து கொள்ளலாமா?`

 கலைவாணி மிகுந்த கருணையோடு தியாகராஜரைப் பார்த்தாள். பின் மெல்லிய முறுவலுடன் சொல்லலானாள்:

 `குழந்தாய் தியாகராஜா! உன் முந்தைய பிறப்பில் நீ வால்மீகியாக இருந்தாய். ஆதிகவியாக இருந்து இந்த உலகிற்கு ராமாயணத்தை சம்ஸ்க்ருத மொழியில் வழங்கியது நீயேதான். அதாவது உன் மூலம் நான்தான் ராமாயணத்தை எழுதினேன்.

 உன் அளவற்ற ராமபக்தி இந்தப் பிறவியிலும் தொடர்ந்தது. இந்தப் பிறவியில் தெலுங்கு மொழியில் உன் மூலமாக நான் ராம பிரானைப் புகழ்ந்து கீர்த்தனைகள் எழுதினேன். நீ ராம பிரானது பூரண அருளைப் பெற்றவன்.

என்னைப் பற்றி வால்மீகி எந்த சுலோகமும் எழுதாததற்கும் நீ எந்தப் பாடலும் பாடாததற்கும் காரணம் நானே என்னைப் புகழ்ந்து கொள்ள விரும்பாத எனது தன்னடக்கம் தான். என் தன்னடக்கம் உன்னில் படிந்து அதனால்தான் நீயும் அளவற்ற தன்னடக்கத்தோடு இருக்கிறாய்.

இனியும் நீ என்னைப் பற்றிப் பாடல் எழுத மாட்டாய். ஆனால் உன் இஷ்ட தெய்வமான ராமபிரானைப் பற்றி இன்னும் எண்ணற்ற கீர்த்தனைகளை நீ எழுதுவாய்.

மிக உயர்ந்த ராம பக்தனாக உலகம் உன்னைப் புகழும். கலக்கமடையாமல் அமைதியாக இரு. தொடர்ந்து ராமனைப் பற்றிப் பாடல்கள் புனைந்து கொண்டிரு. உன்னுள் இருந்து உன்னை நான் இயக்கிக் கொண்டிருப்பேன்!

உரிய காலம் வந்ததும் உன் பணி நிறைவடைந்ததும் நீ வழிபடும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி உன்னை அழைத்துக் கொள்வார்! அதுவரை இந்த உலகில் இருந்து நீ இலக்கியத்தை வளப்படுத்திக் கொண்டிரு!`

 இப்படிச் சொன்ன சரஸ்வதி தேவி, மீண்டும் தியாகராஜரின் உடலில் கலந்து மறைந்தாள். தியாகராஜர் பக்திப் பரவசத்தோடும் மிகுந்த மன நிறைவோடும்  பாடல் பாடத் தொடங்கினார்.

 புத்தம் புதிய பாடல் ஒன்று அவர் நாவிலிருந்து தேனாய்ப் புறப்பட்டது. ஆனால் அதுவும் ராமபக்திக் கீர்த்தனைதான்.

அன்னை கலைவாணியின் அளவற்ற கருணையை எண்ணியெண்ணி அவர் விழிகளிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
    ***********************************

No comments:

Post a Comment