Forward message
சாஸ்தா அவதாரங்கள்
(நான் படித்து புரிந்து கொண்டதை இங்கு பதிவிடுகிறேன்)
எப்படி விஷ்ணு பத்து (தசா) அவதாரங்கள் உண்டோ., அதே போல சாஸ்தாவிற்கும் எட்டு அவதாரங்கள் உண்டு.
சாஸ்தா வழிபாடு மிகவும் தொன்மையானது. புராண., இதிகாச காலங்களுடன் சம்பந்தப்பட்டது. தமிழ் கலாசாரத்திற்கும் தமிழர் வழிபாட்டுக்கும் உரிய தெய்வமாகவே சாஸ்தா விளங்குகிறார். சாஸ்தாவின் அவதாரங்கள் பற்பல. எனினும் எட்டு அவதாரங்களைக் குறிப்பாகச் சொல்வார்கள்.
அஷ்ட சாஸ்தாக்களுக்கும் மையமானவர் *ஆதி பூதநாதர்.* இவர்., பூர்ணா — புஷ்கலா தேவியருடன் கையில் செண்டாயுதம் ஏந்தி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டுதான் கரிகாலச் சோழன் இமயமலை வரை சென்று வென்று திரும்பியதாகக் குறிப்பு உள்ளது. கிராமம்., நகரம்., நாடு., வீடுகளைக் காத்து வருபவர் இந்த ஆதி பூதநாதர். மழை பெய்து., நீர் வளம் நிலவளம் பெருக்கி பயிர் செழிக்க அருள்பவர். காணாமல் போன பொருட்களை மீட்டுத் தருபவர்.
அஷ்ட சாஸ்தாவில் முதலாமவர்., *சம்மோஹன சாஸ்தா.* கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாஸ்தா இவரே., நாம் வீட்டில் இல்லாத நேரத்தில் நமது வீட்டையும் நம் குடும்பத்தாரையும் காத்தருள்பவர். இல்லற ஒற்றுமையை ஓங்கச் செய்பவர்.
இரண்டாவதாக *கல்யாண வரத சாஸ்தா.* இவர் தம் இரு தேவியருடன் பத்துக் கரங்களில் ஆயுதங்கள் தாங்கி., அபய ஹஸ்தம் காட்டி., மங்களம் வழங்குகிறார். திருமணத் தடைகளை தகர்க்கிறார்.
மூன்றாவதாக *வேத சாஸ்தா (ஸிம்ஹாரூட சாஸ்தா)* வேதங்கள் துதிக்கும் திருப்பாதங்கள் உடையவர். சர்வ வேத சாரமான ஞானத்தை அருள்கி றார். வேதங்கள் தழைக்க அருள்புரிகிறார். சிம்ஹத்தை வாஹனமாக உடையவர்.
நான்காவதாக *ஞான சாஸ்தா.* வாக்கு வன்மையை அளிப்பவர். ஞானமும் விஞ்ஞானமும் போதிப்பவர். மாணிக்க வீணையை ஏந்திய கையுடன்., கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள தக்ஷிணாமூர்த்தி போல்., குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சியளிக்கிறார். சகலருக்கும் கல்வி அறிவு வழங்குபவர்.
ஐந்தாவதாக *சந்தான பிராப்தி சாஸ்தா.* குழந்தைப் பேறு தருபவர். ராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்தபோது யாகக் குண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு ‘‘மகத்பூதம்’’ தோன்றியது என்று வால்மீகி வர்ணிப்பது இந்த சந்தான பாக்கியம் அருளும் சாஸ்தாவையே ஆகும்.
ஆறாவதாக *ஸ்ரீ தர்ம சாஸ்தா.* சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவை அனைவருக்கும் தெரியும். தவறுகளை களைந்து., பிழைபல பொறுத்து ஞானத்தை மௌனமாக உபதேசித்து., அனைவரையும் தடுத்தாட்கொண்டு முக்தி நிலை அருள்பவர்.
ஏழாவதாக *மஹா சாஸ்தா (கஜாரூட சாஸ்தா)* கையில் கதை., அங்குசம்., பாசம்., சூலம் போன்ற ஆயுதங்களோடு., மதம் கொண்ட யானை மீதமர்ந்து எதிரிகளை அழிப்பவ ராக திகழ்கிறார். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி தருகிறார்.
எட்டாவதாக *வீர சாஸ்தா (அஸ்வாரூட சாஸ்தா)* ஆதிசங்கரர் பக்தியோடு இவரைத் தொழுது ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். கைகளில் ஆயுதங்கள் தாங்கி., மின்னலை விட வேகமாகச் செல்லும் பாி மீதேறி., தீயவர்களை அழிப்பவர். மண்ணின் மைந்தர்களை காக்கும் மாவீரன்.
No comments:
Post a Comment