Wednesday 20 May 2020

வள்ளலாரின் மரணமில்லா பெருவாழ்வு -சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.!

*தூங்கினால் அருள் கிடைக்காது*.!

இறைவன் இரவு பகல் காணாது இயங்கி கொண்டு உள்ளார்.இறைவன் குழந்தைகளாகிய
ஆன்மாக்கள் கண் உறங்கலாமா ? 

அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டுமானால் தூங்காமல் இருப்பதே  சுகம் தரும் செயலாகும்.

நாம் எந்த எந்த வகையில் மரணத்தை வெல்ல முடியும்.வெல்லாம்  என்று வழி தெரியாமல் அலைந்து கொண்டு உள்ளோம்

ஜீவகாருண்யத்தால் மரணத்தை வெல்லலாம் என்று சன்மார்க்க அன்பர்கள் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.அது ஒருவகை இம்மை இன்ப வாழ்க்கை. இம்மை இன்ப லாபத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும். அருள் கோட்டையின் கதவு திறந்து உள்ளே போக இறைவன் அனுமதியும் அருளும் வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடுள்ள மனிதர்கள் எவரும் மரணத்தை வெல்ல வாய்ப்பே இல்லை.

நாம் உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு வாழ்வதால் இறைவனை முழுமையாக நேசிக்க வாய்ப்பே இல்லை.

*இறைவனை தொடர்பு கொள்ள தூங்காமல் விழித்திருந்து இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்.*

ஒரு மனிதனுக்கு உணவு உட்கொண்டால் உறக்கம் கண்டிப்பாக வரும் என்பதை வள்ளலார் பல பாடல்களில் தெரியப்படுத்துகின்றார்.
வள்ளலார் பாடல் !

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே

வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா

சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.!

மனிதர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளதால் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்..
உணவால் உறக்கம் கண்டிப்பாக வரும்.

உறக்கம் வருவதால் இந்திரியங்கள் மற்றும் தத்துவங்கள் யாவும் தழைத்து மனம் புத்தி சித்தம் அகங்காரம் உள்ளம் யாவும் தன் விருப்பம்போல் புறத்தில் சென்று அலைந்து திரிவதால் உயிரையும் உடம்பையும் காப்பாற்ற முடியாமல் மரணத்திற்கு இட்டு செல்லும்.

*எனவேதான் வள்ளலார் தன் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண்டார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்*

மற்ற ஞானிகளைவிட  வள்ளலார் வித்தியாசமானவர்.
தனித்தன்மை வாய்ந்தவர்.வேறு எந்த ஞானிகளுடனும் வள்ளலாரை  ஒப்பிட்டு பார்ப்பது அறியாமையாகும்.

வள்ளலார் பாடல் !

கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும்
கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
மற்றுள எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது

பெண் உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!
பற்றும்
இந்த உலகில் உள்ள பஞ்ச பூதங்களும்.
கிரகங்களும் உறங்கலாம்.மண் உறங்கும். மலை உறங்கும். வளை கடலும் உறங்கலாம் .மற்றும் உள்ள எல்லாமும் உறங்கலாம்.

இங்கே நமது பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந்தவம் செய்கிலரே என்கின்றார்.

*மாயையானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் சொல்கிறது*.

இந்த பஞ்ச பூத உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் பெண்களாகும்.
பெண்கள் ஆண்களை விரும்ப வேண்டும் .இங்கே ஆண் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். அதாவது ஆன்மாக்கள் அன்பு செலுத்தி ஆண்டவரை காதல் கொள்ள வேண்டும்.

இங்கே வள்ளலார் என்ற பெயருடைய ஓரே ஒரு ஆன்மா மட்டும் உண்ணாமல் உறங்காமல் ஆண்டவர் வருவார் வருவார் என்று இரவு பகல் காணாமல் விழித்திருக்கின்றது.

இந்த ஆன்மாவைப் போல் உலகில் எந்த ஆன்மாவும் இறைவரை தொடர்பு கொள்ள இப்படி ஒரு பெருந்தவம் செய்யவில்லை என்கின்றதாம்.

*மேலும் வள்ளலார் பாடல்கள்* *!

தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.!

தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
தாங்கினேன் சத்தியமாத் தான்.!

தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
துணிந்துனது சுற்றமொடு செல்லும் அரைக் கணத்தே
தாக்கு பெருங் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால்
தப்பாதுன் தலைபோகும் சத்தியம் ஈ தறிவாய்
ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
போக்கில்விரைந் தோடுக நீ பொற்சபைசிற் சபைவாழ்
பூரணர்க்கிங் கன்பான பொருளன் என அறிந்தே.!

மேலும் பதிவு செய்கிறார்.

தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே
தூய நீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
பண்பொடு புனைந்து கொள் கடிகை
ஈங்கு இரண் டரையில் அருள்ஒளித் திருவை
எழில் உற மணம்புரி விப்பாம்
ஏங்கலை இது நம் ஆணைகாண் என்றார்
இயன்மணி மன்றிறை யவரே.!

தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்க மிகத்
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்திவண் நீ வரல்வேண்டும் தாழ்த்திடில் என் மனந்தான் சற்றும்
தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.!

தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
தொலைந்தன தொலைந்தன எனைவிட்
டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
அழிவுறா உடம்பும்மெய் இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
உண்மை இவ் வாசகம் உணர்மின்.!

தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.!

மேலே கண்ட பாடல்கள் யாவும் தூக்கத்தை தொலைத்ததும் தூங்காத விழித்திருக்கும் சூதுகளை தெரிந்து கொண்டதையும்.தூக்கத்தினால் வரும் துயரம் அச்சமும் பயமும் இடையூறும் மரணம் தவிர்த்ததையும் .
தூக்கத்தை வென்று  இறைவனுடன் கலந்து கொண்ட அருள் வல்லபத்தையும்.
ஆனந்த நெகிழ்ச்சி களையும். தெளிவாக மேலே கண்ட பாடல்களிலே பதிவு செய்துள்ளார்.

வள்ளலார் வாழ்க்கையில் தூங்கியதே இல்லை. எப்போதும் தூங்காமல் விழிப்புடனே இருப்பார்.

*ஒருமனிதன் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் தூங்கப் பழகினால் ஆயிரம் வருடம் உயிர் பிரியாமல் வாழலாம் என்பார் வள்ளலார்*.

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் தூக்கமும் ஒரு தடை என்பதை சுத்த சன்மார்க்க அன்பர்கள் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்.

 உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!

 சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

No comments:

Post a Comment