Monday, 11 May 2020

சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ளது

*சனி பகவானை காலால் அழுத்தும் ஆஞ்சநேயர் கோவில்*
*சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ளது.*
*இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தன் தவ வலிமையால், அனைத்து கிரகங்களையும் வென்று, தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். சீதையைக் கடத்தி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் இலங்கை சென்று இதனைக் கண்டறிந்து, ராமபிரானிடம் தெரிவித்தார். சீதையை மீட்க, ராமபிரான் இலங்கை மீது போர் தொடுத்தார்.*

*அந்தப் போரின் ஒரு கட்டத்தில், லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையை சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார்.*

*அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியை, தன் காலால் முழு பலத்தைக் கொண்டு அழுத்தினார். இதனால் வலி தாங்க முடியாத சனி பகவான், தன்னை விட்டு விடும்படி வேண்டியதுடன், ஸ்ரீராமரின் துதியையும் பாடினார். ராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ‘ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது’ என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார்.*

*இப்படி சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ளது. அனுமனின் பாதம் இத்தலத்திலும், அருகேயுள்ள ஆனைமலையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.*

*ஆலய அமைப்பு :*

*ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அமைப்பில் சுதை வடிவம்கொண்ட எளிய நுழைவாசல் இருக்கிறது. ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில், தலமரமான நெல்லி மரம் காணப்படுகிறது. எதிரே கருங்கல்லில் உருவான தீப தூண் 15 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. கருவறை கோபுரம் ஐந்து கலசங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றது.*

*ஆலயத்தின் பின்புறம், நான்கு கால் மண்டபத்தில் புடைப்புச் சிற்ப ஆஞ்சநேயர், அவரின் பின்புறம் விஜயநகர பேரரசின் கல்வெட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்வெட்டு மண்டபம் என அழைக்கின்றனர்.*
*கருவறையை நேராக நோக்கினால் மூலவர் தெரிவதில்லை. உற்சவரே அழகுற காட்சி தருகின்றார். வாசல் அருகில் சென்று இடதுபுறம் நோக்கினால், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய கோலத்தில் இருக்கிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும் இந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது.*

*ஆஞ்சநேயரின் வால், தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சவுகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. ஒளிவீசும் அவரின் கண்கள் காருண்யத்தை வழங்குகிறது. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.*

*அனுமனின் காலில் உள்ள உருவம் அசுரனுடையது என்ற மற்றொரு கருத்தும் கூறப்படுகிறது. கம்ப ராமாயணத்திலும் கூட இச்சம்பவம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அனுமன் சனியை காலால் மிதித்த இடத்தின் ஐதீகம் இதுவே என்று, இப்பகுதி மக்களும், இங்கு வரும் பக்தர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.*

*வழிபாட்டு பலன் :*

*சனிதோஷம் உள்ள எவரும் இத்தலம் வந்து பெரிய ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றால், தொல்லைகள் நீங்கி சுகம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு போன்றவற்றிற்கும் இந்த ஆஞ்சநேயர் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.*

*இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.*

*அமைவிடம் :*

*வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது, ஆம்பூர் நகரம். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தும், ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் இருக்கிறது.*


No comments:

Post a Comment