Wednesday 27 May 2020

சக்தி கவசம் (வஜ்ஜிர பஞ்சர கவசம்)

" சக்தி கவசம் (வஜ்ஜிர பஞ்சர கவசம்)
"

அம்மன் இக்கவசத்தை முருகப்பெருமானுக்கு அருளினார், பின்னர் முருகப்பெருமானால் அகஸ்தியமுனிவருக்கு அருளபட்டது.

சக்தி  கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வஜ்ஜிர பஞ்சர கவசம். இதனைச் சக்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை வணங்கிய முகுந்தன் முதலான தேவர்கள் இந்தக் கவசத்தைச் சொன்னார்களாம்.

துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சக்திகவசம்.

சக்தி  கவசம்:

1. அங்கையில் கரகம் தாங்கும் பிரமாணி அருளி னோடும்
துங்கமென் சென்னி காக்க; வயிணவி துகளி லாகம்
எங்கணும் காக்க செய்ய ஏந்தெழில் உருத்தி ராணி
தங்கும்எண் திசையும் அன்பு தழைத்திட இனிது காக்க

2. கொன்னுனைச் சூலிசென்னி மயிரினைக் குறித்துக் காக்க
மன்னுவெண் பிழைதாழ்சென்னி வயங்கொளி நெற்றி காக்க
பன்மயிர்ப் புருவம் நாளும் பரிவொடும் உமையாள் காக்க
என்னையாள் முக்கண் ஈசன் இறைவிகண் இணைகள் காக்க

3. வயமிகும் இமய வல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க
செயையோடு விசயை மேல்கீழ் இதழினைச் சிறந்து காக்க
அயிலுடைச் சுருதி தூய அஞ்செவி காக்க தண்ணெண்
பயின்மலர் உறையுஞ் செய்வி பல்வினை உவந்து காக்க

4. சண்டிமென் கபோலம் காக்க தவள நாள் மலரில் வைகும்
ஒண்தொடி நன்னாக் காக்க விசயைமங் கலைமற் றொவ்வாக்
கண்கவர் நாடி காக்க காத்தியா யனிஎஞ் ஞான்றும்
முண்டக மலரில் தூய முகத்தினைச் சிறந்து காக்க

5. காளமுண் டிருண்டநீல கண்டிமென் கழுத்துக் காக்க
கோளில்பூ தார சத்தி சுவர்ப்புறம் காக்க கூர்மி
நீளொளிச் சந்தி காக்க வயிந்திரி நெறியி னோடும்
தோளிணை காக்க பத்மை துணைமலர் அங்கை காக்க

6. கமலைகை விரல்கள் காக்க விரசைகை உகிர்கள் காக்க
திமிரம்உண் டொளிரும் வெய்யோன் மண்டலத் துறையும் செல்வி
எமதிரு வாகுமூலம் காக்கவா னவர்கள் ஏத்த
அமிர்தல கரிநாள் நாளும் அகன்மணி மார்பம் காக்க

7. தரித்திரி இதயம் காக்க தயித்தியர்ச் செகுப்போள் மிக்க
கருத்தொடு முலைகள் காக்க சகத்தினில் இறைமை பூண்டோள்
திருத்தகு வயிறு காக்க திகழ்தபோ கதி தன்னுள்ளத்
தருத்தியின் உந்தி காக்க அசைவளர் முதுகு காக்க

8. கருதரு விகடை கடிதலம் பாமை வாய்ந்த
குருமணிச் சகனம் காக்க குகாரணி குய்யம் காக்க
அருள்தர வரும் அபாய கந்தினி அபானம் காக்க
தெருளுடை விபுலை என்றும் சிறப்புடைக் குறங்கு காக்க

9. லளிதைமென் முழந்தாள் காக்க இயற்சபை கணைக்கால் காக்க
களிதரு கோரை வாய்ந்த பரட்டினைக் காக்க மிக்க
அளிகொள்பா தலத்தில் செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க
ஒளிர்நகம் விரல்கள் சந்திரி உக்கிரி உவந்து காக்க

10. தலத்துறை மடந்தை உள்ளங் காலினை காக்க தண்ணென்
மலர்த்திரு மனையைக் காக்க வயங்குகேத் திரதை யோங்கி
உலப்பில்கேத் திரங்கள் காக்க பிரியகரை ஒழிவ றாது
நலத்தகு மக்கள் தம்மை நன்குறக் காக்க அன்றே

11. உயர்சனா தனிஎஞ் ஞான்றும் ஒழிவறும் ஆயுள் காக்க
மயர்வறு சீர்த்தி யாவும் மாதேவி காக்க மிக்க
செயிரறு தருமம் யாவும் தனுத்திரி சிறந்து காக்க
இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி இனிது காக்க

12. சற்கதி பிரதை நல்லோர் இயைபினைத் தயாவிற் காக்க
விற்கொடும் போரில் நீரில் வெளியினில் வனத்தில் சூதில்
இப்புறம் அதனில் ஓங்கு சர்வாணிகாக்க என்னாப்
பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவர் ஏத்தி னாரே.

சக்தி கவசம் முற்றிற்று.

இந்த வஜ்ஜிர பஞ்சரத்தை எவர் ஒதினாலும் அவர்களுடைய உடலிலுண்டாகிய வெப்பு நோயொழியும், எட்டுத்தரம் நீரில் அபிமந்திரித்து அதனை உட்கொண்டால் வயிற்றிலே பொருந்திய குன்மம், சூலை முதலிய நோயனைத்தும் நீங்கும். இரவில் வழி பிள்ளையைப் பெறமாட்டாமல் வருத்தப்படுகின்ற மாதருடைய அருகிலிருந்து ஒதினாலும் அல்லது நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தாலும் விரைவிலே வருத்தம் நீங்கிப் பிள்ளைகளைப் பெறுவார்கள். போரிலே ஒதினால் பகைவர்கள் தோல்வியடைவார்கள். சிறு பிள்ளைகளுக்கு நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தால் நோய்கள் நீங்கும். இதை எவரோதினாலும் அவர்களை உமாதேவியார் காப்பாற்றி யருளுவார்.

No comments:

Post a Comment