Saturday 2 May 2020

ஆதிசங்கரர் அருளிய விடுதலை ஆற்றுப்படை

ஆதிசங்கரர் அருளிய விடுதலை ஆற்றுப்படை..!

நிர்வாண ஷட்கம்:-

மனிதனுக்கு, மோட்சம் (விடுதலை) அடைவதற்கான அறிவை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக (வழிபடுத்துவதாக) ஸ்ரீ ஆதிசங்கரர் திருவாய் மலர்ந்தருளிய ஸ்லோகமே நிர்வாண ஷட்கம்...!

ஆத்ம அறிவு பெற்றவன், இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அதாவது வாழ்கின்றபோதிலேயே, மீண்டும் பிறவிக்குக் காரணமாக அமைகின்ற அனைத்துப் பற்றுகளிலிருந்தும் அனைத்துத் தளைகளிலிருந்தும் அவன் விடுதலை பெறுகிறான்...!

பாடல் மற்றும் பொருள் விளக்கம்.‌.

பாடல்:

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,
ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:
ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

பொருள் விளக்கம்:

1.
நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல
நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல
வானும் அல்ல பூமியும் அல்ல
ஒளியும் அல்ல வளியும் அல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.


2.
நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல
ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல
பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.


3.
எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை
பேராசையும் இல்லை மோகமும் இல்லை
கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை
அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

4.
எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை
சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை
(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை
நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல
துய்ப்பும் அல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

5.
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை
சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை
உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

6.
நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்
எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்
எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.

ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர்.

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் ‘யான்’ என்பதை இயல்பிலேயே அனுபவித்து உணர்கிறது என்றாலும் அதன் உண்மை ஸ்வரூபத்தை அறிவதில்லை.

உடல், மனம், அறிவு என்று ஒவ்வொன்றாக அதன்மீது படிந்துள்ள அடுக்குகளையே யான் என்று கருதுகிறது. அவை யாதொன்றும் ஆத்மாவாகாது, அவற்றுடன் தொடர்புடையது போல் தோன்றினாலும் அவற்றிலிருந்தும் வேறுபட்ட உணர்வு நிலையே (சைதன்யம்) ஆத்மா.

‘இதுவல்ல இதுவல்ல’ (நேதி நேதி) என்ற வழிமுறை மூலம் இந்த தரிசனத்தை சுட்டுகிறது இந்தப் பாடல். வேதாந்த தத்துவம் முழுமையுமே இப்பாடலுக்கான விளக்கமாக அமைந்துள்ளது.

*ஓம் நமச்சிவாய...!*

No comments:

Post a Comment