Sunday, 11 December 2022

திருவேட்களம்

 *தினம் ஒரு திருமுறையில்*

இன்று  நாம் பார்த்து,கேட்க இருப்பது திருநாவுக்கரசு

சுவாமிகள் ஐந்தாம்

திருமுறையில் 042வது பதிகமாக அருளிச்செய்த திருவேட்களம் திருமுறை  திருப்பதிகம்.


*நன்று நாள்தொறும் நம் வினை போயறும்*


அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். 


பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். 


அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். 


சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். 


அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். 


அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. 


விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. 


இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். 


இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. 


இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். 


சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். 


அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். 


சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். 


அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். 


கிராத மூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. 


வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. 


இறைவர் திருப்பெயர் : 

ஸ்ரீ பாசுபதேஸ்வரரர், 

ஸ்ரீ பாசுபதநாதர் 


இறைவியார் திருப்பெயர் : 

ஸ்ரீ சற்குணாம்பாள், ஸ்ரீ நல்லநாயகி 


திருமுறை : ஐந்தாம் திருமுறை 042 வது திருப்பதிகம் 


அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் 


பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்


தில்லைத் தலத்தில், கூத்த பிரானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் பல பதிகங்கள் பாடியும் உழவாரப் திருப்பணிகள் செய்தவாறும் அங்கே இருந்த நாட்களில், இடையே வேட்களம் மற்றும் கழிப்பாலை தலங்கள் சென்று பதிகங்கள் அருளியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். 


திருவேட்களத்து இறைவனைத் தொழுது நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம், 


எனவே வேட்களத்து இறைவனைத் தொழுது பயன் அடையுங்கள் என்ற அறிவுரையுடன் இந்த பதிகத்தினைத் தொடங்கும் அப்பர் பிரான், இந்த இறைவனைத் தொழுததால் தனக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். 


நன்று நாள்தொறும் நம் வினை போயறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்று நீர் திருவேட்களத்துள் உறை துன்று பொற்சடையானைத் தொழுமினே. ..... (01) 


கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில் எனக்கு இடர் இல்லையே. ..... (02) 


வேட்களத்து உறை வேதியன் எம் இறை ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால் காப்பர் நம்மை கறைமிடற்று அண்ணலே. .. (03) 


அல்லல் இல்லை அருவினை தான் இல்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வனார் திருவேட்களம் கைதொழ வல்லர் ஆகில் வழியது காண்மினே. ..... (04) 


துன்பம் இல்லை துயர் இல்லையாம் இனி நம்பனாகிய நன்மணி கண்டனார் என்பொனார் உறை வேட்கள நன்னகர் இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே. ..... (05) 


கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர் சிட்டனார் திருவேட்களம் கைதொழப் பட்ட வல்வினை ஆயின பாறுமே. ..... (06) 


வட்ட மென்முலையாள் உமை பங்கனார் எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் சிட்டர் சேர் திருவேட்களம் கைதொழுது இட்டமாகி இருமட நெஞ்சமே. ..... (07) 


நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும் இட்டத்தால் இனிதாக நினைமினோ வட்டவார் முலையாள் உமை பங்கனார் சிட்டனார் திருவேட்களம் தன்னையே.  (08) 


வட்ட மாமதில் மூன்று உடை வல்லரண் சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர் போல் திருவேட்களச் செல்வரே. ..... (09) 


சேடனார் உறையும் செழு மாமலை ஓடி ஆங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி மலரடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே. (10) 


பொருளுரை : பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி, மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக. 


ஆலய முகவரி : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம், அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம், கடலூர் மாவட்டம், PIN - 608002.

No comments:

Post a Comment