Saturday, 24 December 2022

பாண்டவ சரிதம்

 ஸ்ரீதேவி பாகவதம் - 5


பாண்டவ சரிதம்.... 


                            (நற்கதி அடைய) 


ஐந்தாம் வேதம் என்று போற்றப்பட்டு, இதிகாசங்களில் ஒன்றாக விளங்குகின்ற மகாபாரதம் முழுவதையும் விளக்கிச் சொல்லுதல் இயலாது. எனவே சுருக்கமாக பாரதத்தைப் பாராயணம் செய்வோம். 


திருதராஷ்டிரனுடைய ஆட்சியில் கௌரவருடைய சூழ்ச்சியால் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்டது. அதில் அகப்பட்ட பாண்டவர்கள் இறையருளால் பிழைத்தனர். பீமசேனன் இடும்பனைக் கொன்று இடும்பியை மணந்தான். பிறகு பாண்டவர்கள் ஏகசக்ரபுரம் சென்றனர். அங்கே வீமன் பகாசுரனைக் கொன்றான். பாண்டவர் பின்பு பாஞ்சால நாட்டை அடைந்தனர். அங்கே அர்ச்சுனன் மச்சயந்திரத்தை வீழ்த்திப்பெற்ற திரௌபதியை ஐவரும் மணந்தனர்.


பின் அவர்கள் திரும்பி வந்து தாயபாகம் பெற்று இந்திர பிரஸ்தத்தில் இருந்து, இராஜ சூய யாகம் செய்தனர். இதனால் துரியோதனனுக்குப் பொறாமை ஏற்பட்டது. அவன் சகுனியின் துணை  கொண்டு, சூதாடி, பாண்டவர்களின் நாட்டைக் கவர்ந்து, பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதித்தான். 


அதன்படியே பாண்டவர்கள் காட்டில் அந்த நியமங்களை நிறைவேற்றி, விராட நகரத்தில் மறைந்து வாழ்ந்து, அங்கே கீசகனைக் கொன்று, விரதத்தைப் பூர்த்தி செய்து நாடு திரும்பினர். பின்னர் அவர்கள் கண்ணனைத் தூதாக அனுப்பினர். துரியோதனன் நாட்டைக் கொடுக்க மறுத்ததால், பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் போர் மூண்டது. போர்க்களத்தில் கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்தான். கண்ணனின் துணையுடன் பதினெட்டு நாட்கள் போர் புரிந்து பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். 


பாண்டவர் வெற்றி பெற்றதைப் பொறுக்காமல் அசுவத்தாமன் அபாண்டவஸ்திரத்தைப் பிரயோகித்து இருகுலத்திற்கும் ஒரே சந்ததியான உபபாண்டவர் அனைவரும் கருகிப் பிண்டமாக விழுந்தனர். அப்பிண்டத்தைக் கண்ணன் எழுப்பித் தந்தான். அவ்வாறு உயிர்பெற்ற குழந்தையே பின்னர் பரீக்ஷித் என்ற பெயரோடு பாண்டவ சந்ததியாக அரசு புரிந்தான். 


பரீக்ஷித் ஒருநாள் காட்டில் வேட்டையின் போது மமதையால் செத்த பாம்பு ஒன்றை பிரம்ம நிஷ்டையிலிருந்த ஒரு முனிவரின் கழுத்தில் மாலைபோல இட்டான். அதனால் விளைந்த மரண சாபத்தைப் பயனிலாததாக்க கங்கை ஆற்றின் நடுவில் பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக்கொண்டு சர்வ ஜாக்கிரதையுடன் வாழ்ந்தாலும் மனம் கலங்கி நின்றான். 


ஆனால் மரண ஹேதுவான பாம்போ புழு உருவத்துடன் ஒரு பழத்தினுள் புகுந்து கொண்டு, பரீக்ஷித்தை அடைந்ததும் பாம்பாக வெளிவந்து அவனைக் கடித்துக் கொன்றது. இதுவே விதியின் செயலாயிற்று. பரீக்ஷித்தின் பிள்ளையான ஜனமேஜயன் தன் தந்தையைக் கடித்துக் கொன்ற பாம்பின் மீது கோபம் கொண்டு சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான். ஆனால் அந்த யாகம் இடையிலேயே நின்று விட்டது. 


தன் பாட்டனாரான யுதிஷ்டிரர் தொடங்கிய ராஜ சூய யாகம் சிசுபாலனோடு நின்றது. தன் தந்தையாகிய பரீக்ஷித்தோ பாம்பு தீண்டி இறந்து மோட்சம் கிடைக்காமல் இருக்கிறார். தான் தொடங்கிய யாகமும் முடிவு பெறாமல் பாதியிலேயே நின்றது. இதனால் தங்கள் அனைவரது பாவமும் எவ்வாறு கழியும் எனவும், தனது தகப்பனார் எவ்வாறு கரையேறுவார் என நினைத்து வருந்தினான். 


இவ்வாறு வருந்தும் போதுதான் ஜனமேஜயன் ஸ்ரீ புவனேசுவரியின் யக்ஞத்தினால் விளையும் பெரும்பயனை அறிந்தான். அந்த யக்ஞம் செய்தால், யக்ஞபங்க பாவமும், பாம்பு கடித்த பாவமும், ஏனைய பல்வேறு பாவங்களும் நீங்கும் என்பதை உணர்ந்த ஜனமேஜயன், ஸ்ரீதேவி யக்ஞத்தை சாஸ்திர முறைப்படி வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்தினான். பின்பு அவன் ஸ்ரீ தேவி பாகவதக் கதையைச் சிரவணம் செய்து யக்ஞத்தை முடித்தான். அப்போது ஆகாயத்தில் "ஜனமேஜயனே! உன் தகப்பனார் மோட்சம் அடைந்தார். உனது வம்ச சாபங்கள் தீர்ந்தன" என்று அசரீரி ஒலித்தது. அவ்வொலி கேட்ட ஜனமேஜயன் பேரானந்தம் அடைந்தான். 


இந்தப் பாண்டவ சரிதத்தை நவராத்திரி நாட்களில் படித்தாலும் கேட்டாலும் ஜகன்மாதா அருளால் நற்கதியைப் பெறுவர்.

No comments:

Post a Comment