ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்காகத் திறக்கப்படும் சிவ திருத்தலம்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில், கண்ணூரிலிருந்து வயநாடு செல்லும் சாலையில், காடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது கொட்டியூர்.
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தாரே அந்த இடம் தான் கொட்டியூர் என்று சொல்லப்படுகிறது.
தட்சன் நடத்திய யாகத்தில் எவ்வளவு கலவரம் நடந்தேறியது என்பது சிவ பக்தர்கள் அனைவரும் அறிந்ததே.
சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடமாதலால் கூடியூர் என்றழைக்கப்பட்டு, பின்னிட்டு கொட்டியூர் என்று அழைக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
கொட்டியூரைச் சுற்றிலும் அமைந்துள்ள பல ஊர்கள் இந்த தட்ச யாகத்தோடு தொடர்புடையதாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தட்சனின் யாகத்திற்கு அம்மை பார்வதி தட்ச யாகத்தை தொலைவிலிருந்து கண்ட இடம் நீண்டு நோக்கி என்றும், அவரின் நடை தளர்ந்த இடம் மந்தன்சேரி என்றும், அவர் பால் காய்ச்சிய இடம் பாலுகாய்ச்சி மலை என்றும், தட்சனின் தலையை சிவபெருமான் கொய்த பிறகு அவர் தனது வாளை வீசி எறிந்த இடம் முதிரேரிக் காவு என்றும் அழைக்கப்படுகிறது.
தட்ச யாகத்தை அழித்த பின்பு சிவபெருமான் சினம் தனிந்து சுயம்புவாக எழுந்தருளி கோயில் கொண்ட இடம் தான் கொட்டியூர்.
கொட்டியூரில் இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவை இக்கரை கொட்டியூர், அக்கரைக் கொட்டியூர் என்று அழைக்கப்படுகின்றன.
அக்கரை கொட்டியூர் வருடத்தில் 28 நாட்கள் மட்டுமே இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசிக்க இயலும். மீதமுள்ள நாட்களில் சிவபெருமானை மதியாமல் யாகத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பாவம் தீர வழிபடுவதாக ஐதீகம்.
அந்த 28 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக மிகச் சிறய அளவில் அமைக்கப்பட்டது தான் இக்கரை கொட்டியூர் சிவாலயம்.
வைகாசி மஹோற்சவத்தின்போது சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அக்கரை கொட்டியூரில் திரள்கிறார்கள்.
வைகாசி மஹோற்சவத்தின் முக்கியமான சடங்கு வாள் எழுந் நலத்து என்பதாகும். தட்சனின் தலையைக் கொய்த சிவபெருமான் கோபத்துடன் வாளை சுழற்றி எறிந்த இடம் முதிரேரிக் காவு என்றழைக்கப்படுகிறது. அக்கரை கொட்டியூரிலிருந்து முதிரேரிக் காவு சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
முதிரேரிக்காவிலும் சிவபெருமானுக்கென்று ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது.
மஹோற்சவத்தின் முதல் நாளன்று இந்த முதிரேரிக்காவிலிருந்து வாள் எடுத்து வரும் நிகழ்வே வாள் எழுந் நலத்து எனப்படும்.
குறிப்பிட்ட பரம்பரையைச் சேர்ந்த ஒருவரே இந்த வாள் எடுப்பு நிகழ்வில் கலந்து கொள்வார். முதிரேரிக்காவிலிருந்து வாளை எடுத்துக்கொண்டு கொட்டியூர் வரும் வரை எந்த இடத்திலும் நில்லாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அவர் வாளேந்தி கொட்டியூர் வருவார் என்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு.
திருக்கோயிலுக்கான கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஆபரணங்கள் கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொட்டியூரிலிருந்து கரிம்பனக்கல் கோபுரம் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஆபரணப் பாதுகாப்பு பெட்டகத்திற்கான நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் உள்ளது. இந்த ஐவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்தப் பெட்டகத்தை பாம்புகள் மட்டுமே பாதுகாப்பதாக நம்பிக்கை.
இந்த ஆபரணப் பெட்டகத்தை கொள்ளையடிக்க முயன்ற பலரில் ஒருவர் கூட அந்த இடத்தை நெருங்கக் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
திருவிழா சமயம் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த கலசங்கள் பண்ணாரம் என்றும், இந்த வைபவம் பண்ணாரம் எழுந் நலத்து வைபவம் என்றும் சொல்லப்படுகிறது. இதனைச் செய்பவர்கள் குடிபதிகள் என்றழைக்கப்படுவர்.
இந்த இடத்தை சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு குறிச்சியார் என்ற ஆதிவாசிகளே கண்டறிந்தனர். ஆகையால், முதன் முதலாக பூஜைகள் செய்ய இங்கு வரும் நம்பூதிரிகள் குறிச்சியார்களின் அனுமதி பெற்ற பின்னரே திருக்கோயிலுக்குள் செல்ல முடியும்.
அக்கரை கொட்டியூரில் நடைபெறும் வைகாசி மஹோற்சவத்தினை 64 சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இந்த 64 சாதியினர் அவகாசிகள் என்றழைக்கப்படுகிறார்கள்.
அவகாசிகள் ஒன்று கூடும் கூட்டம் மகா அடியேந்திர யோகம் என்று அழைக்கப்படுகிறது.
கேரளத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம்வசிக்கும் 64 சாதியினரும் ஒன்றுசேர இயலாதென்பதால், 14 சாதிகளைச் சேர்ந்த அவகாசிகள் ஒன்று கூடும் கூட்டம் அடியேந்திர யோகம் என்றழைக்கப்படுகிறது.
குறைந்த பட்சம் 14 சாதிகளைச் சேர்ந்த அவகாசிகள் ஒன்று கூடும் அடியேந்திர யோகம் நடைபெறாமல் திருக்கோயில் சம்பந்தமான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.
திருவிழாக் காலங்களில் அக்கரை கொட்டியூரில் சிறு சிறு குடிசைகள் அமைத்து பக்தர்கள் தங்குகின்றனர்.
இந்தத் திருவிழா சமயத்தில் மட்டுமே சுயம்பு மூர்த்தியான சிவபெருமானைச் சுற்றிலும் ஓலைக் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் அப்பன் சிவபெருமான் திறந்த வெளியிலேயே வாசம் செய்கிறார்.
பக்தர்கள் சிவபெருமானை வழிபடும் இடம் திருவஞ்சரா என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தை எப்போதுமே தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் தட்சனின் இரத்தம் என்பது ஐதீகம்.
கொட்டியூர் திருக்கோயிலின் பூஜை முறைகள், அனைத்து சாதியினரையும் ஓருங்கிணைத்து ஆதிசங்கரரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
திருக்கோயிலின் அருகிலேயே தட்சிண கங்கை என்றழைக்கப்படும் பாவலி ஆறு அமைந்துள்ளது.
பாலுகாய்ச்சி மலையில் உற்பத்தியாகி பாயும் பாவலி ஆற்றில் உள்ள கற்கள் அனைத்தும் சிவலிங்கமாகப் பாவிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
பாவலி ஆற்றிலிருந்து இரண்டு கற்களை எடுத்து தேய்த்தால் சந்தனம் போன்று கிடைக்கும் பொருளே கொட்டியூரின் பிரத்யேகமான சிவ சின்னமாகக் கருதப்படுகிறது.
தட்சனின் தலையை சிவபெருமான் கொய்ததன் நினைவாக ஓடப்பூ என்ற ஒரு பூ கொட்டியூரில் விற்பனை செய்யப்படுகிறது. கொட்டியூருக்கான பிரத்யேகப் பூவான ஓடப்பூ தட்சனின் தாடி என்று நம்பப்படுகிறது.
ஓடப் பூவை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கொட்டியூர் சிவ திருத்தலம், காளிகட்டிலிருந்து 125 கி.மீ.. தொலைவிலும், கண்ணணூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலைசேரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் தலைசேரி.
திருக்கோயில் தொடர்பு முகவரி - ஸ்ரீ திருச்சேருமன்ன கொட்டியூர் தேவோசம் போர்டு, கொட்டியூர் அஞ்சல், கண்ணணூர் மாவட்டம். தொலைபேசி எண்கள் – 91 490 2430234 மற்றும் 2430434. ஃபேக்ஸ் – 0480 2430234. இமெயில் - kottiyoordevaswom@gmail.com திருக்கோயில் வலைதள முகவரி - www.kottiyoordevaswom.com
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment